பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
10:04
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருவையாறு தாலுகா, திருக்காட்டுப்பள்ளி அருகே, ஒரத்தூர் உள்ளது. இங்கு இடிந்து கிடந்த கோவில் பகுதிகளை, தஞ்சை சரஸ்வதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன், முனைவர் பட்ட ஆய்வாளர் ரம்யா, மனோகரன் ஆகியோர், ஆய்வு நடத்தினர். ஆய்வு குறித்து மணி.மாறன் கூறியதாவது: சேர மன்னர்கள் குறித்து, பதிற்றுப்பத்தின், ஏழாம் பதிகத்தில், ஒரத்தூர் என, வழங்கப்படும் கிராமமே, ஒகந்தூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு பெற்ற ஒரத்தூரில், சோழர் காலத்தைச் சேர்ந்த, மிக அழகிய விஷ்ணு சிற்பத்தை, இடிபாடுகளில் இருந்து எடுத்து, புதிதாக அமைக்கப்பட்டு வரும் கோவிலில், கிராம மக்கள் வைத்துள்ளனர். ஒரே கல்லால் அமைந்த சிற்பத்தில், விஷ்ணு, நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். ஒரத்தூர் குளக்கரையில், மரத்தின் கீழ், சமண சிற்பம் ஒன்று உள்ளது. இதில், வலது புறத்தில் சிறிய உருவத்தில் யட்சனும், இடது புறத்தில் யட்சியும், புடை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. பிற்கால சோழர்கள் காலத்தில் சமணமும், புத்த மதமும் மன்னர்களின் ஆதரவுடன் இப்பகுதியில் தழைத்து வளர்ந்துள்ளன. திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயரில் வரும், "பள்ளி என்பதே சமணர்கள் வாழ்ந்த இடத்தை குறிக்கிறது. இத்தகைய பெருமைமிக்க ஒரத்தூரில், முன் சமணக்கோவில் இருந்து, பிற்காலத்தில் காலவெள்ளத்தில் அது அழிந்திருக்கலாம். இங்கு, காலை மடித்து அமர்ந்துள்ள கோலத்தில் லட்சுமி சிற்பம் மற்றும் விநாயகர் சிற்பமும் காணப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினர்.