பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
10:07
இந்து சமய அறநிலையத்துறை, பொதுநிதி திட்டத்தின் கீழ், எந்த கோவிலுக்கு எவ்வளவு செலவழித்தது என்பது குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்காததுடன், தகவல் கேட்டவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், பதில் அளித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, கோவில்கள், அறநிலையங்கள் போன்றவற்றிற்கு ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும், வரவு - செலவு திட்டத்தில், "பொதுநல நிதி என்ற தலைப்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில், ஒரு கால பூஜை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், எத்தனை கோவில்களுக்கு, எவ்வளவு செலவழிக்கப்பட்டது போன்ற தகவல்களை அறிந்து, அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய, ஆலய வழிபடுவோர் சங்கம் முடிவு செய்தது. அதற்கு, ஏதுவாக, 2005 முதல், 2012 வரை, பொது நல நிதி மூல செலவழிக்கப்பட்ட தொகை, ஒவ்வொரு இனம் குறித்தும் - கோவில்கள் - அறநிலையங்கள் என, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பாரதி மனோகர் விவரம் கேட்டார். ஆனால், அவர் கேட்ட விவரங்களை தராத இந்து சமய அறநிலையத்துறை, தகவல் கேட்டவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக பதில் அளித்துள்ளது.
அறநிலையத்துறை அனுப்பிய பதில்: மனுதாரர் குறிப்பிட்ட ஒரு கோவில் அல்லது அறநிறுவனம் குறித்து, விவரம் கேட்கவில்லை. ஒட்டுமொத்தமாக, எட்டு ஆண்டுகளில், பொதுநலநிதி வழங்கப்பட்ட, அனைத்து கோவில்களின் பெயர் விவரம் கேட்கப்பட்டுள்ளதால், இதை வழங்க இயலவில்லை. இக்கேள்வி, பணிச்சுமையை உருவாக்கும் உள்நோக்கத்துடன் அமைந்துள்ளது. மேலும், மனித ஆற்றலை பாழாக்கும் வகையில் உள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உன்னத நோக்கத்தை திசை திருப்பும் விதத்தில் உள்ளதாக அமைந்துள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.