பதிவு செய்த நாள்
15
மார்
2011
05:03
ரோமபாதன் சாந்தாவை தன்னுடைய அங்கதேசத்துக்கு அழைத்து வந்து வளர்த்து வந்தார். அவள் பருவமடைந்த சமயத்தில், மழை குன்றி, நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோமபாதன் மகரிஷிகளை அழைத்து, மழை பெய்வதற்கான ஆலோசனை சொல்லும்படி கேட்டான். ரோமபாதா! விபண்டகர் என்ற முனிவரின் புத்திரர் ரிஷ்யசிருங்கர் காட்டில் வசிக்கிறார். அவர், தன் தந்தைக்கு மட்டுமே சேவை செய்வதைக் கடமையாகக் கொண்டுள்ளார். பிறந்தது முதல் அவர் பிற மனித ஜீவன்களையே பார்த்தது கிடையாது. அவரிடம் ஒரு விசேஷ சக்தி உண்டு. அவர் எந்த இடத்தில் கால் வைக்கிறாரோ, அங்கே மழை கொட்டும். ஆனால், அவரை அழைத்து வருவது என்பது சிரமமான விஷயம். அது உன் பொறுப்பு. அவர் மழை பெய்ய வைத்ததற்கு பிரதியுபகாரமாக நீ உன் மகள் சாந்தாவை அவருக்கு கன்னிகாதானம் செய்து வைக்க வேண்டும், என சொல்லிச் சென்றனர். ரோமபாதன், ஒரு முனிவருக்கு தன் மகளை எப்படி திருமணம் செய்வது என்று யோசித்து வருந்தினாலும், பொதுநலன் கருதி சம்மதித்தான். சாந்தாவும் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றது தான் மிகப்பெரிய விஷயம். இந்தக்காலத்துப் பெண்கள் போல, மாப்பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையெல்லாம் விதிக்கவில்லை. ரிஷ்யசிருங்கரை வரவழைக்க பல யோசனைகளைச் செய்தான் மன்னன். முடிவில், ஒன்றே ஒன்று மட்டும் தான் அவனுக்கு சரியெனப்பட்டது. மனிதன் சாதாரணமானவனோ, முனிவனோ...யாராயிருந்தால் என்ன...அவனை ஆட்டி வைக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அது தான் பெண். பெண்களைக் கொண்டு ரிஷ்யசிருங்கரை மயக்கி அழைத்து வர ஏற்பாடாயிற்று.
சில தாசிப் பெண்களை, ஆஸ்ரமத்துப் பெண்கள் போல அலங்கரித்து, அவரை மயக்கி அழைத்து வரும்படி ரோமபாதன் உத்தரவிட்டான். அந்தப் பெண்கள் அலங்கார சகிதமாய் சென்று ரிஷ்யசிருங்கரை சந்தித்தனர். முதன் முதலாக பிற ஜீவன்களைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். அந்தப் பெண்கள் அவரிடம், முனிவரே! நாங்கள் அருகிலுள்ள ஆஸ்ரமம் ஒன்றில் தங்கியிருக்கிறோம். தங்களை தரிசிக்க வந்தோம். இதோ, உங்களுக்கு பிடித்த கனிவகை, மோதகம் அனைத்தும் கொண்டு வந்துள்ளோம், எனக் கூறி தாங்கள் கொண்டு வந்த பலகார வகைகளை அவரிடம் பணிவுடன் சமர்ப்பித்தனர். அதைச் சாப்பிட்ட ரிஷ்யசிருங்கர் மனதில் ஏதோ ஒரு பரவசம் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய அந்தப் பெண்கள் அவரைத் தழுவிக்கொண்டனர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரு புதுவித சுகத்தைப் பெற்ற அவர், அந்தப் பெண்களை மறக்க முடியாமல் தவித்தார். இதைத் தெரிந்து கொண்ட அந்தப் பெண்கள் மீண்டும் சென்று, அவரை மயக்கி, தாங்கள் எங்களுடன் வந்தால், இந்த பண்டங்களும், இன்பமும் நிரந்தரமாக கிடைக்கும் என்று கூறி, அங்க தேசத்துக்கு அழைத்து வந்து விட்டனர். அவர் ஊருக்குள் நுழைந்தாரோ இல்லையோ, மழை கொட்டித்தள்ளி விட்டது. ரோமபாதன் அவரை வரவேற்று, பொதுநலன் கருதி, இவ்வாறு செய்ய நேர்ந்ததைச் சுட்டிக்காட்டியதால், ரிஷ்யசிருங்கர் சினம் தணிந்தார். முனிவர்கள் சொன்னபடியே தன் மகள் சாந்தாவைக் கன்னிகாதானமும் செய்து கொடுத்தார். அவளும், இல்லறத்தில் இருந்தாலும், கணவனுக்கேற்ற மனைவியாக, ஒரு தபஸ்வினியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள்.
வீட்டுநலன், நாட்டுநலனில் பெண்களின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மங்கை நம் சாந்தா. இப்பேர்ப்பட்ட தன் சகோதரி, யாகத்துக்கு நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தாள். நினைத்தது போலவே, சாந்தாவும், ரிஷ்யசிருங்கரும் அயோத்தி வந்து சேர்ந்தனர். ராமபிரான் அவர்களை வரவேற்று உபசரித்தார். நீண்டநாளுக்கு பிறகு தங்கள் ஒரே மகளைக் கண்ட தசரத பத்தினியருக்கு தாளாத ஆனந்தம். யாக ஏற்பாடுகள் ஆரம்பமாயின. பவுர்ணமி சந்திரன் போன்ற பிரகாசமுடைய வெண்கொற்றக்குடையின் கீழிருந்து அரசாண்ட ராமபிரான், சர்வ லட்சணங்களும் பொருந்திய குதிரை ஒன்றை வரவழைத்து, அதன் நெற்றியில் பட்டயம் ஒன்றைக் கட்டினார். அயோத்தி மன்னன் ஸ்ரீராமன் அனுப்பும் யாகக்குதிரை இது. இது உங்கள் இடத்துக்கு வந்ததுமே எனக்கு பணிந்து விடுங்கள். இல்லாவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. யாகம் நடத்துவது என்றால் பல தேசத்து மன்னர்கள், முனிவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்க வேண்டுமல்லவா! ராமபிரான் அகத்தியர் உள்ளிட்ட பல முனிவர் பெருமக்களையும் யாகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். சீதாதேவியை மீட்கும் போரில் உதவி செய்த இலங்கை மன்னன் விபீஷணன், தன் உயிருக்கும் நிகரான சுக்ரீவன், தனது சேவையையே வாழ்வின் லட்சியமாகக் கொண்ட ஆஞ்சநேயன், வாலி மைந்தன் அங்கதன், 56 தேசத்து அரசர்கள், கங்கையைக் கடக்க உதவிய குகன் ஆகியோருக்கு ஏவலர்கள் அழைப்புக் கடிதங்களை எடுத்துச் சென்றனர். பின்னர், மதுகை நகரை ஆண்டு கொண்டிருந்த தனது தம்பி சத்ருக்கனனுக்கும் அழைப்பு அனுப்பி வைத்த ராமன், அவனை உடனடியாக யாகத்திற்கு வரும்படி எழுதியிருந்தார். தூதுவர்கள் அவற்றை விரைந்து சென்று கொடுக்க அவர்கள் எல்லாருமே விரைவில் வந்து சேர்ந்தனர். அனைவரையும் வரவேற்ற ராமபிரான், விருந்தினர்களே! நீங்கள் அனைவரும் கடல்நீர், புண்ணியநதிகளின் நீரை கொண்டு வாருங்கள், என அன்புடன் சொல்லியனுப்பினார். பறையறைவோரை அழைத்து, இன்னும் ஏழு நாட்களில் யாகம் தொடங்கப் போவது உறுதி, என்பதை நாட்டு மக்களுக்கு அறிவியுங்கள், என்று உத்தரவிட்டார். இந்நேரத்தில் தம்பியைத் தேடி சாந்தா வந்தாள்.