பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா; தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2025 06:08
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் தேதி) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
நகரத்தார் கோயிலான இங்கு சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். ஆக.18 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் வாகனத்தில் கற்பகவிநாயகர் திருவீதி உலா நடைபெறுகிறது. இரண்டாம் நாள் துவங்கி நேற்று வரை காலையில் வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் வலம் வந்தார். ஒன்பதாம் திருநாளான இன்று காலை 9:00 மணிக்கு விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்களில் எழுந்தருளினார். இந்த ஆண்டு முதல் புதிதாக செய்யப்பட்டுள்ள தேரில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி வலம் வந்தார். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தொடர்ந்து மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். பக்தர்கள் மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவரை சந்தனக்காப்பில் தரிசிக்கலாம். நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 10:00 மணி அளவில் கோயில் திருக்குளத்தில் தெற்கு படித்துறையில் அங்குசத்தேவருக்கு சிவாச்சார்யர்களால் தீர்த்தவாரி நடைபெறும். உச்சிக்கால பூஜையில் மதியம் 1:00 மணிக்கு மேல் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.