வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சதுர்த்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2025 01:08
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவ்வையார் அகவல் பாடிய பெரியானை கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள பெரியானை கணபதியை, அவ்வையார் வணங்கிக் கொண்டிருந்த பொழுது, சுந்தரரும், சேரமான் பெருமானும் முக்தி பெறுவதற்காக குதிரையில் ஏறி வேகமாக கைலாயம் சென்று கொண்டிருந்தனர். இதனைகண்ட அவ்வையார் சீதக்களப செந்தாமரைப் பூம் என பெரியானை கணபதியை, விநாயகர் அகவல்பாடி மிக வேகமாக பூஜை செய்தார். பூஜையை பொறுமையாக செய்யுமாறு பனித்த விநாயகர் தனது துதிக்கையால் அவ்வையாரை, சுந்தரர், சேரமான் பெருமாளுக்கு முன்னதாக கைலாயம் கொண்டு சேர்த்தார் என்பது ஐதீகம். சிறப்புமிக்க அவ்வை அகவல் பாடிய பெரியானை கணபதிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜை, கடம் புறப்பாடாகி சிறப்பு அபிஷேகம், வெள்ளிகவச அலங்காரம், ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் மூஷிக வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.