பதிவு செய்த நாள்
15
மார்
2011
05:03
அயோத்தியில் இவ்வாறு மிகச்சிறப்பாக வேள்வி நடந்து கொண்டிருக்க, காட்டில் இருந்த வால்மீகி முனிவர், ராமனின் மைந்தர்களான லவகுசர்களை அழைத்தார். இப்போது வலகுசர்கள் வளர்ந்திருந்தார்கள். தந்தையைப் போலவே இருவரும் கரிய நிறம். வெண்பற்கள் ஒளி வீசின. வாய் பவளம் போல் சிவந்திருந்தது. கண்களும் சிவந்திருந்தன. அவற்றில் தீர்க்கமான பார்வை இருந்தது. சுருள் சுருளான சிகை அவர்களின் அழகுக்கு அழகு சேர்த்தது. அந்த அன்பு மைந்தர்கள் தான் இப்போது சீதாவுக்கு ஆறுதல். அவர்களின் முகத்திலே, தன் பர்த்தா ஸ்ரீராமனின் முகத்தை தரிசித்துக் கொண்டிருந்தாள். அந்த இளம் சிறுவர்கள் வால்மீகியின் முன்னால் வந்து நின்று அவரது கட்டளையை எதிர்நோக்கி பணிவுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம், குழந்தைகளே! நீங்கள் அயோத்திக்கு கிளம்புங்கள். அங்கே ராமபிரான், அஸ்வமேத யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார். எல்லா தேசத்து அரசர்களும் அங்கே கூடியிருக்கிறார்கள். நீங்கள் அங்கு சென்று, ஸ்ரீராமச்சந்திர பிரபுவின் கதையைப் பாடுங்கள். ராமனின் கதையை வடமொழியில் மிக அருமையாக எழுதியிருக்கிறேன். அதை அரசர்கள் கூடியிருக்கும் அந்த அவையில் சென்று பாடுங்கள். மேலும், அங்கேயுள்ள அந்தணர்கள் மத்தியிலும் நீங்கள் பாட வேண்டும். ஆனால், அயோத்தி செல்ல ஒரு நிபந்தனை... என புள்ளி வைத்தார் வால்மீகி. குழந்தைகள் ஆவலுடன் அவர் முகத்தை எதிர்நோக்கினர். அந்தப் பார்வையே நிபந்தனை என்ன? என்பதைத் தெளிவாகக் கேட்டது.
முக்காலத்தையும், நான்கு வேதத்தையும் குறைவற்று தெளிந்த வால்மீகி அவர்களது பார்வையின் பொருளைப் புரிந்தவராய், குழந்தைகாள்! நீங்கள் சீதாவின் புத்திரர்கள் என்பது அயோத்தியில் யாருக்கும் தெரியக்கூடாது. யாகத்தைக் காண வந்தவர்கள் போல் காட்டிக் கொள்ள வேண்டும், என்றார். முனிவரின் கட்டளையை ஏற்ற லவகுசர் அயோத்தி புறப்பட்டனர். அவர்கள் முனிவரைப் போல தங்களை உருமாற்றிக் கொண்டனர். தங்கள் ஜடாமுடியில் குளிர்ந்த மலர்களை சூடிக்கொண்டனர். பெரிய மலையில் இருந்து விழும் அருவி, எத்தகையை வெண்மை நிறமுடையதாக இருக்குமோ அதுபோல அவர்கள் அணிந்திருந்த பூணூல் விளங்கிற்று. காமனாகிய மன்மதன் போல் குசனும், அவனது தம்பியான சாமன் போல லவனும் அழகுற விளங்கினர். இளமை பொங்கும் காளைகள் போன்ற தோற்றத்துடன். குசனும் லவனும் தங்கள் மார்பில் அழகிய வீணை ஒன்றையும் குறுக்காக கட்டியபடி, தாய் சீதாவிடம் சென்றனர். குழந்தைகளின் பேரழகு கண்டு அவள் கண்ணீர் வடித்தாள். இந்த இனிய காட்சியைக் காண உங்கள் தந்தைக்கும், பாட்டிமார்களுக்கும், என் தந்தை ஜனகருக்கும், தாய் சுனைநாவுக்கும் கொடுத்து வைக்கவில்லையே என வருந்தினாள். வருத்தம் பெருமூச்சாக வெளிப்பட்டது. என் அன்புச் செல்வங்களே! இன்றென்ன புதிய கோலம்? என்றாள் சீதா. அம்மா! குருஜி வால்மீகி முனிவர் எங்களை அயோத்திக்கு புறப்படச் சொல்லியுள்ளார். அங்கே ஸ்ரீராமபிரான் அஸ்வமேத யாகம் நடத்துகிறாராம். அந்த யாகத்திற்கு வந்திருக்கும் அரசர்கள், அந்தணர்கள் முன்னால் ராமகதை பாடும்படி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அங்கே கிளம்புகிறோம், அன்னையே, என்றனர் குழந்தைகள். சீதாவுக்கு பயம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
அயோத்திக்கு தனிமையில் குழந்தைகளை அனுப்புவதில் தயக்கம் ஒரு பக்கம்...மறுபுறம் குழந்தைகள், தங்கள் தந்தையைக் காணும் பாக்கியமும், ஸ்ரீராமன் தன் பிள்ளைகளைக் காணும் பாக்கியமும் கிட்டுமே எனக் கருதினாள். அதே நேரம், மனைவியின்றி யாகம் நடத்தும் ஸ்ரீராமன் மீது வருத்தமும் கொண்டாள். குழந்தைகள் புறப்பட்டனர். அவர்கள் சென்ற வழியில் ஒரு பாலைவனம் குறுக்கிட்டது. அங்கே மலை ஆடுகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. பல வரிகளையுடைய புலிகளின் உறுமல் சத்தம் ஆங்காங்கே கேட்டது. அவற்றுக்கு பயந்த மான்கள், கண்களை மூடாமல், ஒரு வகை அச்சத்துடன் மிரட்சி பார்வையுடன் நின்றன. எங்கும் கற்கள் குவிந்து கிடந்தது. சில இடங்களில் வேடர்கள், மிருகங்களைக் கொல்வதற்காக தங்கள் அம்புகளை கூராக்கும் பொருட்டு, கற்களில் தேய்த்துக் கொண்டிருந்தனர். இப்படியே நடந்த போது ஓரிடத்தில் வாழை மரங்கள் அடர்ந்த காடு தென்பட்டது. அந்தக் காட்டின் நடுவே மிகப்பெரிய நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் கங்கை. கங்கைக்கரையில் குசலவர்கள் வந்து நின்று, அதன் அழகை தங்கள் கண்களால் பருகினர். பின்னர் அங்கிருந்த படகொன்றில் ஏறினர். குழந்தைகள் இல்லையா? கங்கையின் பிரளய நீரைக் கடக்கும் போது, ஆரவாரம் செய்தனர். இந்த புதுமையான அனுபவத்துடன் மகிழ்ச்சி பொங்க கங்கையின் மறுகரையை அடைந்தனர். அங்கிருந்து, வேள்விச்சாலை இருக்குமிடத்தை அவர்கள் அடைந்த போது, அந்தணர்களின் யாகப்பணிகளில் தீவிரமாக இருந்தனர். பலநாட்டு அரசர்களும் தங்கள் பிரதாபத்தை காட்டும் வகையில் செல்வமிடுக்குடன் அலங்காரம் செய்து வந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் மத்தியில் சென்ற லவகுசர்கள், அழகுமிக ராமனின் கதையை ஆரம்பித்து பாடினர். இப்படியொரு தேவகானத்தை தாங்கள் இதுவரை கேட்டதில்லை என அரசர்கள் கூறினர். பொதுமக்களோ தங்கள் மன்னாதி மன்னரின் வரலாறு கேட்டு உளம் உருகி நின்றனர். இசையில் வல்லவர்களான தும்புருவும், நாரதரும் கூட இப்படி வீணை இசைக்க முடியாது என்று இசையறிந்த பலரும் ஆச்சரியம் கொண்டனர். இந்தக் குழந்தைகளின் செயல்பாட்டைக் கவனித்த சிலர் சந்தேகம் கொண்ட சிலர், ராமபிரானிடம் சென்று, எங்கள் தெய்வமே! நம் வேள்விச்சாலைக்கு இரண்டு சிறுவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் வீணை மீட்டி தங்கள் கதையைப் பாடுகிறார்கள். அது சாமகானத்தினும் இனிமையாக உள்ளது, என்றனர். அப்படியா? என்ற ராமன், காவலர்களை அழைத்து, அந்தக் குழந்தைகளை இங்கே அழைத்து வாருங்கள், என உத்தரவிட்டார்.