விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் தென்பெனையாற்றில் தமிழரின் பாரம்பரிய பொங்கல் திருவிழா முடிந்த பின்னர் ஆற்றுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு ஆற்றுத் திருவிழா நேற்று நடந்தது. விழாவில் பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி சாமி, பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி, மேலமங்கலம் பெருமாள் சாமி, ஆலங்குப்பம் பாண்டுரங்கசாமி உட்பட தடுத்தாட்கொண்டூர், கீரிமேடு, பிடாகம் குச்சிபாளையம், காரப்பட்டு, பொய்கை அரசூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து உற்சவ சாமிகளை தீர்த்தவாரிக்காக ஆற்றுக்கு கொண்டு வந்தனர். தீர்த்தவாரி முடிந்த பின்னர் உற்சவர் சுவாமிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று மகிழ்ச்சியோடு கொண்டாடினர். விழாவில் பேரங்கியூர், அரசூர், மடப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். ஏ.எஸ்.பி., ரவீந்திர குமார குப்தா, திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.