பல்லடம்; பல்லடம் அருகே, கந்தசஷ்டி பாடலுக்கு ஏற்ப வள்ளி கும்மி ஆட்டம் ஆடிய கலைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றனர்.
பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு, வள்ளிக் கும்மி அரங்கேற்றம் நடந்தது. இதில், பல்லடம் திணை குயில் வள்ளி கும்மி ஆட்ட குழுவினர், கந்தசஷ்டி பாடலுக்கு ஏற்ப கும்மியாட்டம் ஆடி அசத்தினர். கும்மியாட்ட ஆசிரியர் மனோப்ரியா மற்றும் துணை ஆசிரியர் ஜெகதீஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர் கிருத்திகை வார வழிபாட்டு குழுவின் சார்பில் சுந்தர்ராஜன் வரவேற்றார். முன்னதாக, கந்த சஷ்டி பாடல் முழுமையாக இசைக்கப்பட, அதற்கு ஏற்ப கலைஞர்கள் கும்மியாட்டம் ஆடி, பக்தர்கள், பொதுமக்களின் பாராட்டைப் பெற்றனர். 23 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்ட கந்தசஷ்டி பாடலுக்கு, கும்மியாட்டத்தின் அனைத்து நடனத்தையும் ஒருங்கிணைத்தபடி கலைஞர்கள் கும்மியாட்டம் ஆடினர். முருகப்பெருமான், வள்ளி வேடமிட்டபடி குழந்தைகளும் நடனம் ஆடியது, கும்மியாட்டத்தை மேலும் மெருகேற்றியது. முதல்முறையாக கந்த சஷ்டி பாடலுக்கு கும்மியாட்டம் ஆடியுள்ளதாகவும், ஒரு மாதத்துக்கு மேல் இதற்காக பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், கும்மியாட்ட ஆசிரியர்கள் கூறினர். கும்மியாட்ட ஆசிரியர்கள் உட்பட நடனம் ஆடிய கலைஞர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.