Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞானபோதம் பகுதி-8 சிவஞானபோதம் பகுதி-10
முதல் பக்கம் » சிவஞானபோதம்
சிவஞானபோதம் பகுதி-9
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
02:11

மூன்றாம் கூறு

இந்திரியான்ம வாத மறுப்பு

உடம்பில் அமைந்துள்ள செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்னும் ஐம்பொறிகளே ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய புலன்களை அறிகின்றன. ஆதலால் அவைகளே அறிவாகிய ஆன்மாவாம் என்பர். இந்திரியங்களே ஆன்மா என்னும் அவர் கூற்று இந்திரியான்ம வாதம் எனப்படும். அதனை இம்மூன்றாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனி, ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது - என்றது.

இதன் பொருளை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:

பொழிப்புரை

ஐம்புலனாகிய சத்தப் பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்று அறிந்தது ஒன்று அறியாமையின் இவ்வைந்தினாலும் ஐம்பயனும் அறிவது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது.

விளக்கம்

ஐம்பொறிகள் ஐம்புலன்களை அறியுமாயினும், ஒரு பொறி அறிந்த புலனை மற்றொரு பொறி அறியமாட்டாது நிற்கிறது. ஓசையைச் செவி அறியுமேயன்றிக் கண் முதலியன அறியா என்பது கண்கூடு. மேலும் ஒவ்வொரு பொறியும் ஒவ்வொரு புலனை மட்டுமே அறியும். ஒவ்வொரு புலனை மட்டுமே அறிகின்ற இந்திரியங்கள் எப்படி ஆன்மாவாக இருக்க முடியும்?

இவ் ஐம்பொறிகளைக் கொண்டு ஐம்புலன்களையும் அறிவதாகிய ஒரு பொருள் உண்டு. யான் இன்ன பொருளைக் கண்டேன்; அதனைத் தொட்டேன்; அதனை மோந்தேன்; அதனை சுவைத்தேன் என இவ்வாறு ஒரு பொருளே ஐம்புலன்களையும் அறிவதாக அனுபவம் நிகழ்தலின் அவ்வொரு பொருளே ஆன்மாவாம்.

எடுத்துக்காட்டு
வெண்பா

18. ஒன்றறிந்தது ஒன்று அறியா தாகி உடல்மன்னி
அன்றும் புலன் ஆய் அவ் அஞ்செழுத்தை - ஒன்றறிதல்
உள்ளதே யாகில் அதுநீ; தனித்தனி கண்டு
உள்ளல் அவை ஒன்றல்லை ஓர்.

இதன் பொருள்:

ஐம்பொறிகளும் ஓர் உடம்பிலே நிலை பெற்று நின்று அறியும். ஒரு பொறி அறிந்த புலனை மற்றொரு பொறி அறியமாட்டாத இயல்பினை உடையதாகும்.

தம்முள்  மாறுபட்ட சத்தம் முதலிய புலன்களை அறிகின்ற இவ்வைம் பொறிகளின் தொழிற்பாட்டினை அறிகின்ற ஒன்று உளதா? இல்லையா? கண் உருவத்தை யறிவது செவி ஓசையை அறிவது என இவ்வாறு அறிந்து நிற்கின்ற ஒன்று உள்ளதேயாகும்.

அவ்வாறு அறிவதும் ஐம்பொறியே எனக் கொண்டால் என்னை? எனில், ஐம்பொறிகள் தனித் தனியே ஒவ்வொரு புலனை இஃது ஓசை இஃது உருவம் என அறியும் அளவில் நிற்குமேயன்றி அதற்கு மேற் சென்று யான் ஓசையை அறிந்தேன். யான் உருவத்தை அறிந்தேன் எனத் தம் தொழிற்பாட்டினை அறியமாட்டா.

ஆதலால், இவ்வைம் பொறிகளைக் கொண்டு ஐம்புலன்களை அறிந்தும், அப்பொறிகளின் தொழிற்பாட்டினையும் அறிந்தும், அவற்றால் பயன்பெற்று நிற்கின்ற ஆன்மாவாகிய நீ அப்பொறிகளுக்கு வேறாவாய். இதனை ஆராய்ந்து அறிவாயாக.

பதவுரை:

உடல் மன்னி - (ஐந்து இந்திரியங்களும்) உடலில் நிலை பெற்று

ஒன்று அறிந்தது ஒன்று அறியாதாகி  - ஓர் இந்திரியம் அறிந்த புலனை மற்றோர் இந்திரியம் அறியமாட்டாத இயல்பினை உடையதாகி நிற்கும்

அன்றும் - தம்முள் மாறுபட்ட

புலன் - ஓசை, உருவம் முதலிய புலன்களை

ஆய் - அறிகின்ற

அவ் அஞ்செழுத்தை - அவ் விந்திரியங்களின்  தொழிற்பாட்டை

அறிதல் ஒன்று - அறிவதாகிய ஒரு பொருள்

உள்ளதேயாகில் - (அவ் விந்திரியங்களுக்கு வேறாக) உள்ளதேயாகலின்

அது நீ - அந்த ஒரு பொருளே நீயாகி ஆன்மா

அவை - அவ்விந்திரியங்கள்

தனித்தனி கண்டு உள்ளல் - புலன்களில் ஒவ்வொன்றை உணருமேயன்றி யான் ஓசையை உணர்வேன்; யான் உருவத்தை உணர்வேன் என இவ்வாறு தம் இயல்பை உணரமாட்டா ஆதலால்.

ஒன்று அல்லை - அவ்விந்திரியங்களால் உணரப்படும் புலன்களோடு, அவ்விந்திரியங்களின் இயல்பையும் நன்கு உணர்ந்து அவற்றால் பயன் எய்தி வருகின்ற நீ அவ்விந்திரியங்கள் ஆகாய்; அவற்றின் வேறாவாய்.

ஓர் - இதனை ஆராய்ந்து உணர்வாயாக

(இந்திரியங்கள் ஆன்மா அல்ல; அவை வேறாக இருந்து ஆன்மாவை மயக்குகின்றன. ஆன்மா அவற்றின் வேறாக இருந்தும் அதனை உணராமல் அவையே தானாகக்  கருதி அவை காட்டும் புலன்களின் வயப்பட்டு மயங்குகின்றது. ஆன்மா தன்னை வேறாகக் கண்டு தனது உண்மையை உணர்தலே ஆன்ம ஞானம் ஆகும்.)

விளக்கம்

அஞ்செழுத்து என்றது சூக்கும ஐந்தெழுத்தாகும். அவை அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்பன. அவற்றால் செலுத்தப்படுவன இந்திரியங்கள். அவ்வொற்றுமை பற்றி, இந்திரியங்களின் தொழிற்பாட்டினை அஞ்செழுத்து என்றே குறித்தார்.

நான்காம் கூறு

சூக்கும தேகான்ம வாத மறுப்பு

புறத்தே புலப்படாமல் அகத்தில் நிற்பதாகிய சூக்கும தேகமே ஐம்பொறிகளைச் செலுத்திப் புறப்பொருள்களை அறியும். ஆகையால் சூக்கும தேகமே ஆன்மா என்று கூறுவர். அவர் கூற்று சூக்கும தேகான்ம வாதம் எனப்படும். அதனை இந் நான்காம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனி ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றது. இதன் பொருளை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:

பொழிப்புரை

நனவின்கண் கனவு கண்டாம் என்றும் கண்டிலம் என்றும் நிற்பது
உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.

விளக்கம்:

ஏதுவில் உள்ள ஒடுக்கம் என்பது ஐம்பொறிகளும் செயற்படாமல் ஒடுங்கி  நிற்கும் கனவு நிலையைக் குறிப்பதாகும். ஒடுக்கம் அறிதல் என்பதன் பொருளைப் பொழிப்புரையில் சுட்டுகிறார் ஆசிரியர்.

விழித்தெழுந்தபோது சற்று முன் கண்ட கனவை நம்மால் தெளிவாக அறிந்து சொல்ல முடிவதில்லை. கனவு கண்டோமா என்பது குறித்தே சிலருக்கு ஐயம் தோன்றும். பலர் என்ன கனவு கண்டோம் என்பதை அறியாது மயங்கி நிற்பர். கனவில் இப்படி நடந்ததா, அப்படி நடந்ததா என்று சொல்லத் தெரியாமல் திகைப்பர் பலர். இவ்வாறு கனவைக் குழப்பமாக அறிதலையே ஆசிரியர் சுட்டுகிறார்.

சற்று முன்பு நடந்த நிகழ்ச்சியொன்றை அறிந்த நாம் சற்று நேரம் கழித்த பின்பும் அதனைக் குழப்பமின்றி நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது. அதுபோல, சூக்கும தேகமே ஆன்மாவாயின் கனவிலே சற்று முன் கண்டவற்றை விழித்த பின்பும் தெளிவாக அறிந்து சொல்ல வேண்டும். அவ்வாறு தெளிவாக அறிந்து சொல்ல இயலாமையினால் சூக்கும தேகம் ஆன்மாவன்று என்பது புலனாகும்.

இனி, கண்ட கனவைத் தெளிவாக அறிந்து சொல்ல இயலாமைக்கு என்ன காரணம் எனில், ஆன்மா என்பது பருவுடம்பு, சூக்குமவுடம்பு ஆகிய இரண்டுக்கும் வேறாய் உள்ளது. விழிப்பு நிலையில் அது பருவுடம்பில் நின்று புறத்து நிகழ்ச்சிகளை அறிகிறது. கனவு நிலையில் அப்பருவுடம்பு செயலற்றுக் கிடக்க, ஆன்மா அகத்தேயுள்ள சூக்கும வுடம்போடு கூடி நின்று அகத்து நிகழ்ச்சிகளை அறிகிறது.

பின் விழிப்பு ஏற்படும்பொழுது ஆன்மா சூக்கும வுடம்பை விட்டுப் பருவுடம்பிற் சென்றடைவதால் அவ்வுடல் அது சூக்கும வுடம்பில் நின்று கண்டவற்றை மறந்து விடுகிறது; அல்லது இப்படிக் கண்டோமா அப்படிக் கண்டோமா என்று குழம்பி நிற்கிறது.

ஆகவே ஆன்மா சூக்கம தேகத்தின் வேறாய் உள்ளது என்பது தெளிவாகும்.

எடுத்துக் காட்டு
வெண்பா

19. அவ்வுடலின் நின்று உயிர்ப்ப ஐம்பொறிகள் தாம்கிடப்ப
செவ்விதின் அவ்வுடலிற் சென்று அடங்கி- அவ்வுடலின்
வேறொன்று கொண்டு விளையாடி மீண்டு அதனை
மாறல் உடல் நீயல்லை மற்று.

இதன் பொருள்:

பருவுடம்பில் நின்று செயற்படுவனவாகிய ஐம்பொறிகள் செயலற்றுக் கிடக்க, அந்தப் பருவுடம்பிற்கு உள்ளே சென்று வேறோர் உடம்பாகிய சூக்கும தேகத்தை எடுத்துக்கொண்டு, அகத்து நிகழும் கனவு நிகழ்ச்சிகளில் திளைத்து, மீண்டும் அவ்வுடலை விட்டு மாறிப் பருவுடம்பை அடைதலால் நீ சூக்கும தேகம் ஆகாய்.

பதவுரை:

அவ்வுடலின் நின்று உயிர்ப்ப - முன்பு ஆன்மா அன்று என விலக்கப்பட்ட அந்தப் பருவுடம்பில் நின்று செயற்படுவனவாகிய

ஐம்பொறிகள் - ஐம்பொறிகள்

தாம் கிடப்ப - தாம் செயலற்றுக் கிடக்க

அடங்கி - அதனால் புறச்செயல் ஏதும் நிகழாது அடங்கப் பெற்று

செவ்விதின் - இயல்பாக

அவ்வுடலிற் சென்று - அப்பருவுடம்பிற்கு உள்ளே சென்று

அவ்வுடலின் வேறொன்று கொண்டு - அந்தப் பருவுடம்பைப் போல வேறோர் உடம்பை (சூக்கும தேகத்தை) எடுத்துக் கொண்டு

விளையாடி - கனவு நிகழ்ச்சிகளில் திளைத்து

மீண்டு அதனை மாறல் - மீண்டும் அந்தச் சூக்கும தேகத்தை விட்டு மாறிப் பருவுடம்பை அடைதலால்

நீ உடல் அல்லை - நீ பற்றியும் விடுத்தும் செல்லுகின்ற அவ்வுடம்புகளுள் ஒன்றாகிய சூக்கும தேகம் ஆகமாட்டாய்.

மற்று - அதனின் வேறு ஆவாய்.

ஐந்தாம் கூறு

பிராணான்ம வாத மறுப்பு:

பிராண வாயுவின் இயக்கத்தை வைத்தே உயிர் உண்டு என்று சொல்கிறார்கள்; பிராண வாயுவின் இயக்கம் நின்று போனால் உயிர் போயிற்று என்கிறார்கள். இது பற்றியே பிராண வாயுவே உயிர் என்னும் கருத்து ஏற்படலாயிற்று. அக்கருத்தினை உடையோர் பின் வருமாறு கூறுவர்.

விழிப்பு நிலையிலும், கனவு நிலையிலும், அதனைக் கடந்து உறக்க நிலையிலும் பிராணவாயுவே தொழிற்பட்டு நிற்பது. ஆதலால் அதுவே ஏனைக் கருவிகளை இயக்கி, அந்நிலைகளில் நிகழ்ந்தனவற்றை அறிந்து இன்பத் துன்பங்களை எய்தும் ஆன்மாவாம் என்பர். அவர் கூற்றுப் பிராணான்ம வாதம் எனப்படும். அதனை இவ்வைந்தாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனிக் கண்படில் உண்டி, வினை இன்மையின் ஆன்மா உளது- என்றது.
இதன் பொருளை விளக்கிப் பின் வருமாறு பொழிப்புரை செய்கின்றார் ஆசிரியர்.

பொழிப்புரை

ஒடுங்கின இடத்து இன்பத்துன்பம், சீவனம் பிரகிருதிக்கு இன்மையின், ஒடுங்காத இடத்து இன்பத்துன்பம், சீவியா நிற்பது உளது ஆகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது.

விளக்கம்

உறங்குங் காலத்தில் ஓசை முதலிய புலன்களை அறிந்து அனுபவித்தல் ஆகிய புலன் நுகர்ச்சி இல்லை; கொடுத்தல், நடத்தல் முதலிய செயற்பாடுகள் உடம்பின்கண் இல்லை. உறங்காத விழிப்புக் காலத்தில் புலன் நுகர்ச்சி, உடம்பின் செயற்பாடு ஆகிய இரண்டும் நிகழ்கின்றன.

இதனால் ஓர் உண்மை புலனாகிறது. உறங்காத காலத்தில் ஓசை முதலிய புலன்களை அறிவனவாகிய செவி முதலிய அறி கருவிகளையும், கொடுத்தல், நடத்தல் முதலியவற்றைச் செய்வன வாகிய கை, கால் முதலிய செயற் கருவிகளையும் இயக்கி நிற்கின்ற ஒன்று உறங்குங் காலத்தில் அவற்றை இயக்காமல் மடிந்திருக்கிறது என்பது புலனாகிறது. அவ்வாறு ஒடுங்காதும், ஒடுங்கியும் நிற்பதாகிய அந்த ஒன்று எது? அதுவே ஆன்மாவாம்.

பிராண வாயுவே ஆன்மாவாயின், விழிப்பிற் போலவே உறக்கத்திலும் அஃது இயங்கிக் கொண்டிருப்பதால், விழிப்பில் நிகழ்கின்ற புலன் நுகர்ச்சியும் உடம்பின் செயற்பாடுகளும் உறக்கத்திலும் நிகழ்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமையால் பிராண வாயு ஆன்மா அன்று என்பதாம்.

பொழிப்புரையில் பிரகிருதி என்றது பருவுடம்பைக் குறிக்கும். சீவனம், சீவியா நிற்பது என்ற சொற்கள் இரண்டும் இயங்கி நிற்றல் என்ற பொருளில் வந்தன.

எடுத்துக் காட்டு
வெண்பா

20.  கண்டறியும் இவ்வுடலே  காட்டு ஒடுங்கக் காணாதே
உண்டி வினை யின்றி உயிர்த்தலால் - கண்டறியும்
உள்ளம்வேறு உண்டு; ஆய்; ஒடுங்காது உடல் நண்ணில்
உள்ளதாம் உண்டி வினை ஊன்.

இதன் பொருள்:

உறக்கத்தில், அறிதற்குக் கருவியாய் உள்ளவை செயற்படாமல் ஒடுங்கி நிற்க, அதனால் புலன் நுகர்ச்சியும் உடம்பிற்குச் செயற்பாடும் இல்லாது போக, பிராண வாயு மட்டும் இயங்கிய வண்ணம் இருக்கிறது.

பிராணவாயு இருக்கவும் அக்கருவிகள் செயலற்று மடிவதால், அக்கருவிகளைச் செயற்படுத்துவது பிராண வாயு அன்று என்பது விளங்கும். அக்கருவிகளைச் செயற்படுத்துகின்ற வேறொன்று உளது என்பதும், அஃது உறக்கத்தில் ஒடுங்கின மையால் அக்கருவிகளும் செயலற்றுப் போயின என்பதும் புலனாகும். அதுவே உயிராம்.

அவ்வுயிர் ஒடுங்கிய நிலையினின்றும் மீண்டு உடம்பில் பொருந்துமாயின் முன் போலப் புலன் நுகர்ச்சியும் கருவிகளின் இயக்கமும் உடம்பின்கண் நிகழ்வனவாம்.

ஆகவே, எல்லாவற்றையும் கண்டறிதற்கு உரிய உயிர் அந்தப் பிராண வாயுவுக்கு வேறாய் உண்டு. அதனை நீ ஆராய்ந்து உணர்வாயாக.

பதவுரை:

கண்டறியும் இவ்வுடலே - புறப் பொருள்களைக் கண்டறிதற்கு இடமாகிய இவ்வுடம்பின்கண்

காட்டு -  கண்டறிதற்குக் கருவியாய் உள்ளவை

காணாதே ஒடுங்க - உறக்கத்தில் செயற்படாமல் ஒடுங்கிப் போகவும்

உண்டி வினை - அதனால் உடம்பில் புலன் நுகர்ச்சியும் யாதொரு இயக்கமும்

இன்றி - இல்லாமற் போகவும்

உயிர்த்தலால் - பிராணவாயு ஒழியாமல் இயங்குகிறது. ஆதலால் (உறக்கத்தில் பிராணவாயு இயங்கவும், கருவிகள் செயற்படாமல் ஒடுங்குதலால் அக்கருவிகளை இயக்குவது பிராணவாயு அன்று என்பது விளங்கும்)

கண்டறியும் உள்ளம் வேறு உண்டு - எல்லாவற்றையும் கண்டறிவதாகிய ஆன்மா அந்தப் பிராண வாயுவுக்கு வேறாய் உண்டு (கருவிகளை இயக்குவதாகிய அவ்வான்மா உறக்கத்தில் ஒடுங்கினமையால் அக்கருவிகள் செயற்படாமலும், உடம்பில் புலன் நுகர்ச்சியும் இயக்கமும் இல்லாமலும் போயின.)

ஒடுங்காது உடல் நண்ணில் - அவ்வான்மா ஒடுங்கிய நிலையினின்றும் மீண்டு உடம்பிற் பொருந்துமாயின்.

ஊண் - (முன்போல) உடம்பின் கண்

உண்டி வினை உள்ளதாம் - புலன் நுகர்ச்சியும் இயக்கமும் உளதாகும்.

ஆய் - இதனை நீ ஆராய்ந்து உணர்வாயாக.

ஆறாம் கூறு

பிரமான்ம வாத மறுப்பு:

பருவுடம்பு, ஐம்பொறி, நுண்ணுடம்பு, பிராண வாயு முதலிய யாவும் அறிவற்ற சடம் ஆதலின் அவற்றுள் ஒவ்வொன்றை ஆன்மா என்றல் பொருந்தாது. ஆயின் பரம்பொருளாகிய பிரமம் அறிவாய் நிற்பது ஆதலின் அதுவே ஆன்மாவாம் என்பர்.

பிரமமே ஆன்மா என்னும் அவர் கூற்று பிரமான்ம வாதம் எனப்படும். பிரமம் பேரறிவு எனக் கூறி, அவ்வறிவே ஆன்மா என்பதனால் விஞ்ஞானான்ம வாதம் என்றும் சொல்லப் பெறும். விஞ்ஞானம் - பேரறிவு; அவ்வாதத்தை இவ் ஆறாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனி, உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது- என்றது. இதன் பொருளை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு.

பொழிப்புரை:

அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம்- என்றது.

விளக்கம்:

உயிர் விழிப்பு நிலையில் அறிகருவிகள், தொழிற் கருவிகள் முதலிய பலவற்றோடும் கூடி நின்று அறிவு விளங்கப் பெற்று வரும். விழிப்பு நிலையிலிருந்து கனவு, உறக்கம் முதலிய நிலைகளுக்குச் செல்லும்போது அவ்வக் கருவிகள் செயற்படாது போக, அறிவு குறைந்து துரியாதீதம் என்னும் உயிர்ப்பு அடங்கிய நிலையில் கருவிகள் எல்லாம் ஒடுங்கிப் போதலின் அறிவேயின்றிக் கிடக்கின்றது. பின் மீண்டும் அந்தந்தக் கருவிகள் கூடி அறிவிக்க அறிந்து வருகிறது.

இவ்வாறு அறிவிக்கும் கருவிகள் உள்ளபொழுது அறிவுடையதாயும், அவையில்லாதபொழுது அறிவின்றியும் நிற்றல் உயிரின் இயல்பாகும்.

பிரமப் பொருளோ பேரறிவு ஆதலின் அஃது எக்காலத்தும் எல்லாவற்றையும் தானே அறிந்து நிற்பது. அது கருவிகளின் துணையைப் பெற்றே அறியும் என்பது எவ்வகையிலும் பொருந்தாது.

ஆதலால், கருவிகள் உணர்த்த உணர்வதாகிய ஆன்மா அப்பிரமத்தின் வேறாய் இருத்தல் விளங்கும். இதுவரை கூறியது நூற்பாவில் உள்ள தொடரின் கருத்தாகும்.

இதற்குப் பிரமான்ம வாதிகள் பின்வருமாறு விடை கூறுவர்; பிரமம் தன் நிலையில் தானே எல்லாவற்றையும் அறியுமாயினும், அஞ்ஞானத்தின் வசப்பட்டுப் பந்தம் உற்றமையால் தனக்கு அறிவிக்கும் கருவிகளைப் பெற்று அறிவதாயிற்று. அதுபற்றி, பிரமமே ஆன்மா எனக் கொள்வதற்கு இழுக்கில்லை என்பர்.

பேரறிவாகிய பிரமம் அறியாமையுட்படுமா? பிரமத்தை அறியாமை பற்றியது என்றால் ஒளிமயமாகிய சூரியனை இருள் பற்றியது என்று சொல்வதற்கு ஒப்பாகும் என்று இவ்வாறு கூறி அவர் கூற்றை மறுத்துவிடலாம். ஆசிரியர் அவ்வாறு செய்யவில்லை. வாதத்திற்காக அவர்கள் கூறுவதை- அஃதாவது, பிரமம் அறியாமை வயப்பட்டது என்பதை உடன்பட்டு, அப்பொழுதும் அவர் கூற்றுப் பொருந்தாது போதலைப் பொழிப்புரையில் காட்டுகிறார்.

அவர்கள்கூற்றுப்படி பிரமம் அறிவிக்கும் கருவிகளைப் பெற்று அறிவதாயிற்று என்றே கொண்டாலும், அஃது ஐம்புல விடயங்களை மட்டுமே அறிகிறது. தன்னியல்பை அறியமாட்டாது நிற்கிறது. நல்லாசிரியர் தோன்றி மெய்ப்பொருளின் இயல்பை அறிவுறுத்த அவ்வுபதேசத்தைப் பெற்ற பின்பு அது தன்னியல்பை அறிவதாகிறது. இவையெல்லாம் பிரமத்திற்கு ஏற்குமோ?

பேரறிவுடைய பிரமத்திற்கு வேறாகச் சிற்றறிவுடைய ஆன்மாவே ஆசிரியரின் அருளுரையைப் பெற்றுத் தன்னியல்பை அறிகிறது என்று கொள்வதே பொருத்தமாகும்.

ஆன்மா பொருள்களை ஒவ்வொன்றாகவே அறியும்; அவ்வாறு அறிந்தவற்றையும் மறந்து, மீள அறிந்து வரும். பிரமம் அவ்வாறின்றி எல்லாவற்றையும் ஒருங்கே இடைவிடாமல் அறிந்து நிற்கும் பேரறிவுடையது என்று இவ்வாறு ஆசிரியர் அறிவுறுத்த, அவ்வுபதேசத்தைப் பெற்றுத் தன்னியல்பை அறிவதாகிய ஆன்மா பிரமத்திற்கு வேறாய் உள்ளது என்று பொழிப்புரையில் கூறுகிறார் ஆசிரியர்.

உயிர் அறியும் தன்மையை விளக்குவாராய் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக் காட்டு
வெண்பா

21. அறிந்தும் அறிவதே யாயும் அறியாது
அறிந்ததையும் விட்டுஅங்கு அடங்கி- அறிந்தது
எது அறிவும் அன்றாகும்; மெய்கண்டான் ஒன்றின்
அதுஅது தான் என்னும் அகம்.

இதன் பொருள்:

ஒரு காலத்தில் ஒரு பொருளையே  அறிந்தும், மற்றொரு காலத்தில் மற்றொரு பொருளை அறிய முற்பட்டும், முன்பு அறிந்ததைப் பின்பு மறந்தும், ஒன்றை அறியும் போதும் இடைவிடாமல் தொடர்ச்சியாய் அறியமாட்டாது பற்றியும் விட்டும், பற்றியும் விட்டும் இவ்வாறு வேறுபட்ட பல வகையில் திரிபுற்று அறிந்து வரும் பொருள் எல்லாவற்றையும் தானே இயல்பாக ஒருங்கே அறிவதாகிய பிரமப் பொருளாயிருத்தல் கூடாது அன்றோ?

அப்பொருள் யாது எனச் சித்தாந்த உண்மையை உணர்ந்தோன் மனம் ஒன்றி ஆராய்வனாயின், அறியப்படும் பொருளின் வேறு நில்லாது, அது அதுவே தானாய் அதன்கண் அழுந்தி நின்று அறிவதாகிய ஆன்மா என்பது புலனாகும்.

பதவுரை

அறிந்தும் - ஒரு காலத்தில் ஒரு பொருளை மட்டுமே அறிந்தும்

அறிவதேயாயும் - மற்றொரு காலத்தில் மற்றொரு பொருளை அறிய இருப்பதாயும்

அறியாது - முன்பு அறிந்ததைப் பின்பு மறந்தும்

அறிந்ததையும் விட்டு - ஒன்றை அறிந்த காலத்தில் அதனை இடை விடாது தொடர்ச்சியாய் அறியமாட்டாது, பற்றியும் விட்டும் பற்றியும் விட்டும் அறிந்தும்

அங்கு அடங்கி - அறியப்பட்ட பொருளின் வேறாக நில்லாது அதனிடத்தில் அழுந்தியும்

அறிந்தது  எது- இவ்வாறு அறிந்து வருகின்ற பொருள் யாது எனில்

அறிவும் அன்றாகும் - எல்லாவற்றையும் தானே இயல்பாக ஒருங்கே அறிவதாகிய பேரறிவுப் பொருளான பிரம்மமாக இருத்தல் இயலாது.

மெய்கண்டான் ஒன்றின் - சித்தாந்த நெறியை உணர்ந்தோன் மனம் ஒன்றி ஆராய்வானாயின்

அது அது தான் என்னும் அகம் - எந்தப் பொருளையும் அது அதுவே தானாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் நின்று அறிவதாகிய ஆன்மாவாம் என்பது புலனாகும்.

(எனவே பிரம்மமே அவிச்சையுட்பட்டு ஆன்மாவாய் நிற்கும் என்றல் பொருந்தாவுரையாம்.)

விளக்கம்

பிரமான்மவாதிகள் இங்கே மறுக்கப்படுகின்றனர். பிரமம் தானே அறிதலாகிய தன்னியல்பு உடையது. அஃது அறியாமையின் வயப்பட்டமையால் அத்தன்னியல்பு நீங்கிக் கருவிகள் அறிவிக்கவே அறிவதாயிற்று என்று அவர்கள் கூறுவதை முன்னரே பார்த்தோம்.

தானே அறியமாட்டமைக்கு அஞ்ஞானம் காரணம் என்பது ஒருவாறு பொருந்தும். ஆனால், ஒவ்வொன்றாகவே அறிதல், அறிவதையும் விட்டு விட்டு அறிதல், அறியப்படும் பொருளில் அழுந்தி அது அதுவாய் நின்று அறிதல் ஆகியவற்றிற்கும் அறியாமையே காரணம் என்றல் பொருந்தாது.

அறியாமையின் விளைவாய் அறிய முடியாது நிற்றலும், மயங்கி அறிதலும் நிகழுமேயன்றி ஒன்றொன்றாய் அறிதலும் விட்டுவிட்டு அறிதலும் நிகழாவாம். ஆதலால் இவையெல்லாம் உயிரின் அறிவிற்கு இயற்கையாய் உள்ள தன்மை என்பது புலனாகும்.

எல்லாவற்றையும் ஒரு காலத்திலே ஒருங்கே இடையீடின்றி அறிந்து நிற்பது பிரமத்தின் தன்மையும், மேற்கூறியவாறு அறிவது ஆன்மாவின் தன்மையும் ஆகும். அவ்வாறாகவே, பிரமம் பேரறிவுடைய பெரும் பொருள் என்பதும், ஆன்மா அதன் வழி நிற்றற்குரிய சிறு பொருள் என்பதும் விளங்கும், விளங்கவே ஆன்மா பிரமம் ஆகாது அதனின் வேறாய் உள்ளது என்பது துணியப்படும்.

இதுகாறும் விளக்கி வந்த பிரமத்தின் இயல்பையும், ஆன்மாவின் இயல்பையும் பின்வருமாறு நிரல்படுத்தி நினைவிற் கொள்ளலாம்.

பிரமத்தின் இயல்பு                   ஆன்மாவின் இயல்பு
1. தானே அறிவது                     1. அறிவிக்க அறிவது
2. ஒருங்கே அறிவது                 2. ஒவ்வொன்றாகவே அறிவது
3. இடைவிடாது அறிவது           3. விட்டு விட்டு அறிவது
4. அழுந்தாது அறிவது                4. அழுந்தி அறிவது

ஆன்மா விட்டு விட்டு அறிதல் நான்காம் நூற்பாவிலும் அழுந்தி நின்றறிதல் ஏழாம் நூற்பாவிலும் கூறப்படும்.

வடமொழியில் உயிரைப் படர்க்கையில் வைத்துக் கூறும் போது ஆன்மா எனவும், தன்மையில் வைத்துக் கூறுங்கால் அகம் எனவும் வழங்குவர். எனவே, தன்மை பற்றி இங்கு உயிரை அகம் என்றார்.

ஏழாம் கூறு

சமூகான்ம வாத மறுப்பு:

பருவுடம்பு முதலியவற்றுள் ஒன்று செயற்படாது நிற்பினும் அறிவு செம்மையாக நிகழாது, அனைத்தும் ஒருங்கே கூடிச் செயற்படும் போதுதான் அறிவு நிகழ்கிறது. ஆதலால் அவை அனைத்தும் ஒருங்கு கூடிய கூட்டமே ஆன்மாவாம் என்பர். அவர் கூற்று சமூகான்ம வாதம் எனப்படும். அதனை இவ் ஏழாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோள்

இனி, மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது- என்றது. இது நூற்பாவில் உள்ள தொடர்.

ஏது

அவைதாம் வெவ்வேறு பெயர் பெற்று நிற்றலான்.

விளக்கம்

மேற்கோளில், ஆன்மாவுக்கு இடமாகிய உடம்பினை மாயா இயந்திர தனு என அடைமொழி சேர்த்துக் கூறினார். உடம்பு ஓர் இயந்திரம் போன்றது. இயந்திரத்தில் பல உறுப்புக்கள் அமைந்திருப்பது போல மாயை என்னும் பொருளால் ஆக்கப் பெற்ற இவ்வுடம்பிலும் பல உறுப்புக்கள் பொருந்தியுள்ளன. உறுப்புக்கள் எல்லாம் நல்ல நிலையில் இருந்தால்தான் இயந்திரமும் இயங்கும்; உடம்பும் இயங்கும்.

இனி, அனைத்து உறுப்புக்களும் சீராக அமைந்திருந்தாலும் இயந்திரம் தானே ஒரு குறிப்பிட்ட முறையில் இயங்காது. அதனை நெறிப்படுத்திச் செலுத்துவதற்கு இயக்குபவன் ஒருவன் இருத்தல் வேண்டும். அவன் இயக்கிய வழியிலே இயந்திரமும் இயங்குவதாகும். அதுபோல உடம்பும் தன்னை இயக்குபவனாகிய உயிர் வேறிருந்து செலுத்த, அந்நெறியிலே இயங்குவதாகும். ஆதலால் அனைத்து உறுப்புக்களின் தொகுதியே ஆன்மா என்றல் பொருந்தாது. அவற்றையெல்லாம் இயக்கி நிற்பதாகிய ஒன்றே ஆன்மாவாம் என உவமையில் வைத்துக் குறிப்பாய் உணர்த்தியுள்ளார் ஆசிரியர்.

சமூகான்மவாதிகள் இதனைப் பின்வருமாறு மறுப்பர். இயந்திரத்தை இயக்குபவன் ஒருவன் இருத்தல் காட்சியினாலே புலப்படுகிறது. உடம்பை இயக்குவது ஒன்று இருப்பது அவ்வாறு புலப்படவில்லை. அனைத்து உறுப்புக்களின் தொகுதிக்கு வேறாய் ஆன்மா என ஒன்று உண்டு என்று துணிவதற்கு இங்குக் காட்டிய உவமை அமையாது எனக் கூறுவர். அதுபற்றி வேறோர் ஏதுவை வெளிப்படையாகக் கூறி அவர் கருத்தை மறுக்கின்றார், அவைதான் வெவ்வேறு பெயர் பெற்று நிற்றலான் என மேற்காட்டியதே அவ்வெளிப்படை ஏது.

அவர்கள் கூறும் அனைத்துறுப்புக்களின் தொகுதியில் உள்ள ஒவ்வொன்றும் வேறு வேறு பெயரைப் பெற்று நிற்கின்றன. அவற்றுள் ஒன்றாயினும் உயிர் என்னும் பெயரைப் பெறவில்லை. ஆதலால் உயிர் என்னும் பொருள் அவை அனைத்திற்கும் வேறாதல் விளங்கும் என்பதாம்.

இனி, கருவிகள் காரியங்கள் ஆதலின் அவை நிலைபேறு உடையன அல்ல. ஆதலால் அவை என்றும் உள்ளதாகிய ஆன்மா ஆகமாட்டா என்பதை வலியுறுத்தி எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு
வெண்பா

22. கலையாதி மண் அந்தம் காணில் அவை மாயை
நிலையாவாம்; தீபமே போல- அலையாமல்
ஞானத்தை முன் உணர்ந்து நாடில் அது தனுவாம்;
தான் அத்தின் வேறாகும் தான்.

இதன் பொருள்:

நீ கூறும் தொகுதியில் உள்ள பொருள்கள் கலை முதல் நிலம் ஈறாகச் சொல்லப்படும் பெயர்களை உடையனவாம். அவை மாயையின் காரியங்களாகும். ஆதலால் நிலையில்லாதனவாகும். அவற்றின் இயல்பை ஆராய்ந்தால், அவை கண்ணொளியை விளங்கச் செய்கின்ற விளக்குப் போல உயிரினது அறிவை விளக்க வந்த உடம்பேயாம் என்பது விளங்கும். விளக்கொளியால்  விளங்கிப் பொருளைக் காணும் கண் போன்றது ஆன்மா என்பதும் புலனாகும். ஆதலால் ஆன்மா, உடம்பாய் நிற்கின்ற அத்தொகுதியின் வேறாம்.

அனைத்து உறுப்புக்களும் ஒருங்கு கூடியபோதும் அவை  உடம்பு எனப் பெயர் பெறுமேயன்றி ஆன்மா எனப்படா என்பது கருத்து.

பதவுரை:

காணின் - நீ கூறும் அனைத்தும் கூடிய தொகுதியில் உள்ளவை யாவை என ஆராயின்

கலை ஆதிமண் அந்தம் - அவை கலை முதலாக நிலம் ஈறாகச் சொல்லப்படும் தத்துவங்களேயாகும்.

அவை மாயை - அவை மாயையின் காரியங்களாம் (ஆதலால்)

நிலையாவாம் - நிலையில்லாதனவேயாம்

அலையாமல் - மனத்தை ஒரு வழிப்படுத்தி

முன் - முதற்கண்

ஞானத்தை உணர்ந்து - அத்தத்துவக் கூட்டத்தினால் தோன்றும் அறிவின் இயல்பை உணர்ந்து

நாடில் - பின்னர் அக்கூட்டத்தின் இயல்பை ஆராயின்

அது - அக்கூட்டம்

தீபமே போல - கண்ணொளியை விளங்கச் செய்கின்ற விளக்குப் போன்றதாய்

தனு ஆம் - ஆன்மாவினது அறிவை விளக்கி நிற்கின்ற உடம்பேயாம்

தான் - ஆன்மா

அத்தின் - அத்தொகுதியின்

வேறு ஆகும் - வேறாய் உள்ளதாகும்.

இந்நூற்பாவில் கூறப்பட்ட மாறுபட்ட கொள்கைகள், அவற்றின் மறுப்புகள் ஆகியவற்றின் சுருக்கம்:

மாறுபட்ட கொள்கை - மறுப்பு
 
1. அனைத்தும் சூனியம்; அதனால் ஆன்மாவும் சூனியம்.- 1. அவ்வாறு கூறுகின்ற அறிவு உள்ளது, அதுவே ஆன்மா     

2. அறிவு உடம்பில் நிகழ்தலால் பருவுடம்பே ஆன்மா - 2. பருவுடம்பை உடைமையாகக் கொண்டு எனது உடல் என்று கூறுகின்ற ஒன்று அதற்கு வேறாக உள்ளது.  அதுவே ஆன்மா.

3. புறப்பொருள்களை அறிவன ஐம்பொறிகளே யாதலின் அவையே ஆன்மா - 3. ஐம்பொறிகள் ஒன்று அறிந்ததை மற்றொன்று அறியா; தம் இயல்பையும் தாம் அறியா. அவ்வைந்தினையும் கொண்டு ஐம்புலன்களையும் அறிவதாகிய வேறொன்று உளது. அதுவே ஆன்மா.  

4. சூக்கும உடம்பே ஐம்பொறிகளைச் செலுத்தி அறியும். அதுவே ஆன்மா -  4. சூக்கும உடம்பே ஆன்மாவாயின், கனவிற் கண்டதை நனவிலும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வாறு இல்லை ஆதலால் சூக்கும உடம்பு ஆன்மா அன்று.

5. பிராணவாயுவே ஏனைய கருவிகளை இயக்கி அறியும். அதுவே ஆன்மா - 5. உறக்கத்தில் பிராணவாயு இயங்கிக் கொண்டிருக்க, ஏனைய கருவிகள் செயலற்று மடிந்திருத்தலால் பிராண வாயு ஆன்மா அன்று.

6. அறிவாய் நிற்பது பிரமமேயாதலின் அதனையே ஆன்மா என்றல் அமையும் - 6. கருவிகளின் துணையைக் கொண்டே அறிதலும், ஆசிரியனது அறிவுரையைப் பெற்றே தன்னியல்பை அறிதலும் ஒன்றொன்றாய் அறிதலும், விட்டு விட்டு அழுந்தி நின்று அறிதலும் ஆகிய இவையெல்லாம் பிரமத்திற்கு ஏலா. அவ்வாறு அறிகின்ற  சிற்றுயிராகிய ஆன்மா வேறு உளது.

7. அனைத்துக் கருவிகளின் கூட்டமே ஆன்மா - 7. அக்கூட்டம் உடம்பு என்றே பெயர்பெறும்; ஆன்மா என்ற பெயர் பெற்றது.  
 
மூன்றாம் நூற்பா முடிந்தது.

 
மேலும் சிவஞானபோதம் »
temple news
நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு ... மேலும்
 
இருவகை இயல்புகள்சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, ... மேலும்
 
முதல் நூற்பாமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் ... மேலும்
 
அம் முதல்வன் அழித்தற்  கடவுளே:இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு ... மேலும்
 
இரண்டாம் நூற்பாமுதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar