பதிவு செய்த நாள்
13
நவ
2013
02:11
நான்காம் நூற்பா
முந்திய மூன்றாம் நூற்பாவில் ஆன்மா உண்டு என்பதை நிறுவிய ஆசிரியர் இந்நூற்பாவில் அதன் இலக்கணத்தைக் கூறப் புகுகின்றார். அதனால் இவ்விரு நூற்பாக்களுக்கிடையே உள்ள இயைபு புலனாகும்.
நூற்பா
அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று; அவை
சந்தித்தது ஆன்மா சகச மலத்து உணராது
அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத் தைத்தே.
ஆசிரியர் கூறும் கருத்துரை:
என்பது சூத்திரம். என் நுதலிற்றோ எனின், இதுவும் அது.
கருத்துரை விளக்கம்.
நான்காம் நூற்பாவாகிய இதுவும் முந்திய மூன்றாம் நூற்பாவின் பொருளையே கூறுவதாய்த் தொடர்ந்து நிற்கிறது என்பதை உணர்த்துவாராய் இதுவும் அது என்றார்.
ஆன்மப் பிரகாசம் என்னும் பொருள் முன்னை நூற்பாவில் இருப்பினை விளக்குதல் என்ற முறையில் கூறப் பெற்றது. அப்பொருள் இந்நூற்பாவில் இலக்கணத்தை விளக்குதல் என்ற முறையில் கூறப்பெறுகிறது.
நூற்பாவின் பொருள்
ஆன்மா மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ப்படும் அந்தக் கரணம் நான்கினுள் ஒன்றன்று; ஆயினும் தன்னை இயற்கையிலே பற்றியுள்ள ஆணவ மலம் என்னும் மாசினால் அறிவையிழந்து நிற்பதனால், அமைச்சர்களோடு கூடிச் செயல் புரியும் அரசனைப்போல அம் மாசினைச் சிறிது நீக்கி அறிவை விளக்குவனவாகிய அந்தக் கரணங்களோடு கூடி நின்று ஐந்து நிலைகளை உடையதாகும்.
பதவுரை
ஆன்மா அநதக் கரணம் அவற்றின் ஒன்று அன்று - ஆன்மா அகக் கருவிகளாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பவற்றுள் ஒன்றன்று, அவற்றின் வேறானது.
சகச மலத்து உணராது - அவ்வான்மா தன்னை இயல்பிலே பற்றியுள்ள ஆணவ மலத்தினால் அறியமாட்டாது நிற்றலால்,
அமைச்சு அரசு ஏய்ப்ப - நுண்ணறிவு இல்லாத அரசன் அதனையுடைய அமைச்சரோடு கூடி ஆட்சி நடத்துவது போல,
அவை சந்தித்தது நின்று - தனது அறிவு விளங்குதற் பொருட்டு அவ்வந்தக் கரணங்களோடு கூடி நின்று
அஞ்சு அவத்தைத்து - ஐந்து நிலை வேறுபாடுகளை உடையதாகும்.
சிறப்புரை:
ஆன்மா என்னும் எழுவாய் இரண்டாம் அடியில் உள்ளது. அதனை எடுத்து நூற்பாவின் முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
முந்திய மூன்றாம் நூற்பாவில் ஆன்மா உளது என ஒருமையாற் கூறியது போலவே இந்நூற்பாவிலும் ஆன்மா சந்தித்தது எனவும், அவத்தைத்து எனவும் ஒருமையாற் கூறினார். ஆயினும் ஆன்மா எண்ணில என்றே இங்கும் நாம் கொள்ள வேண்டும்.
ஆன்மா அந்தக் கரணம் அவற்றின் ஒன்றன்று ஆயினும், சகச மலத்தினால் உணராமையால், அமைச்சரோடு கூடிய அரசன் போல அவற்றோடு சந்தித்தது; அங்ஙனம் சந்தித்து நின்று ஐந்து அவத்தைகளை உடையதாயிற்று என வேண்டும் சொற்களைக் கூட்டி நூற்பாவை அமைத்துக் கொண்டால் பொருள் இனிது விளங்கும்.
உணராது அவை சந்தித்தது எனக் கூட்ட வேண்டும். உணராது என்பதற்கு உணராமையால் எனப் பொருள் கொள்ளப்பட்டது. இதில் உணராது என்பது காரணம்; சந்தித்தது என்பது காரியம். வேலை கிடைக்காது திருடினான் என்பதில் கிடைக்காமை காரணமும், திருடுதல் அதனால் நிகழும் காரியமும் ஆதல் போல இங்கும் உணராது சந்தித்தது என்பன காரணமும் காரியமுமாய் நின்றன.
ஏய்ப்ப என்பது பழைய இலக்கியங்களில் வரும் ஓர் உவம உருபு ஆகும். போல என்பது அதன் பொருள்.
அவத்தை என்ற வடசொல் நிலை எனப் பொருள்படும். அவத்தை என்பது பெயர்ச்சொல். அதனையே அவத்தைத்து என வினைமுற்றாக ஆக்கிவிட்டார் ஆசிரியர். நிலையை உடையது என்பது அதன் பொருள்.
கூறுகள்:
இந்நூற்பாவின் பொருளைமூன்று கூறுகளாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார். அக் கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு:
கூறு பொருள்
1. முதற் கூறு - ஆன்மா அந்தக்கரணங்களின் வேறு;
2. இரண்டாம் கூறு - சகசமலம் எனப்படும் ஆணவ மலத்தின் இயல்பு
3. மூன்றாம் கூறு - ஆன்மா கருவிகளோடு கூடி ஐந்து நிலைகளை அடைதல்
முதற் கூறு
அந்தக் கரணான்ம வாத மறுப்பு
அகக் கருவிகளாகிய அந்தக் கரணங்களே ஆன்மா எனக் கொள்பவர் அந்தக் கரணான்மவாதிகள் எனப்படுவர். அவர் பின்வருமாறு கூறுவர்.
கருவிகள் யாவும் வேறு வேறு பெயரையே பெற்று நிற்கின்றன என்றும், அவற்றுள் ஒன்றேனும் ஆன்மா எனப் பெயர் பெறுதல் இல்லை என்றும் கூறியது பொருந்தாது. மனம் முதலிய அந்தக் கரணங்கள் ஆன்மா என்னும் பெயரால் கூறப்படுதலைச் சித்தாந்த நூல்களிலேயே காணலாம். ஆகவே அந்தக் கரணங்கள் தனித்தோ, ஒருங்கு கூடியோ ஆன்மாவாம் எனக் கொள்ளுதல் பொருந்தும் என்பர்.
அவர் கூற்று அந்தக் கரணான்ம வாதம் எனப்படும். அதனை மறுத்து, ஆன்மா அந்தக் கரணங்களில் ஒன்று அன்று என்பதனை மேற்கோளாக வைத்து ஏதுக் காட்டி நிறுவுகிறார் ஆசிரியர்.
மேற்கோள்
ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக் கரணங்களாய் உள்ள மனோ
புத்தி அகங்கார சித்தங்களில் ஒன்றன்று- என்றது.
ஏது
அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.
ஏது விளக்கம்
பிரகாசம் என்பதற்கு அறிவு என்பதும், அப்பிரகாசம் என்பதற்கு அறிவின்மை என்பதும் பொருள்.
அறிவுடைய பொருள் சித்து எனப்படும். அறிவில்லாத பொருள் அசித்து எனப்படும்.
எனவே அந்தக் கரணங்கள் சித்தாய் நின்றே அசித்தாய் நிற்கும் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர்.
அந்தக் கரணங்கள் சித்தாய் நின்றே அசித்தாய் நிற்றல்:
அவை சித்தாய் நின்றே அசித்தாய் நிற்றல் எவ்வாறு என்பதை நோக்குவோம். அந்தக் கரணங்களுக்குக் கீழ் உள்ள கருவிகளாகப் புறக்கருவிகள் உள்ளன. செவி, தோல், கண், கை, கால் முதலியனவாக அமைந்த இப் புறக்கருவிகள் அசித்து என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கரணங்கள் அவ்வாறின்றி, ஆன்மாவிற்கு மிக அணுகிய கருவிகளாய் நின்று, ஐயுறுதல் சிந்தித்தல் நிச்சயித்தல் முதலியவற்றைச் செய்கின்றன. எனவே, புறக்கருவிகளை நோக்க அவை சித்து என்று சொல்லும் படியாக நிற்கின்றன. ஆயின் அவ்வந்தக்கரணங்கள் யான் ஐயுறுகிறேன், யான் சிந்திக்கிறேன், யான் நிச்சயிக்கிறேன் என்று தம்மைத் தாம் அறியமாட்டா. ஆகவே தம்மை நோக்க அவை அசித்தேயாதல் விளங்கும்.
இவ்வாறு அந்தக் கரணங்கள் தமக்குக் கீழ் உள்ள கருவிகளை நோக்கச் சித்தாயும், தம்மை நோக்க அசித்தாயும் நிற்கின்றன.
ஆன்மா இவ்வாறின்றி யான் சிந்தித்தேன் யான் நிச்சயிக்கிறேன் எனத் தன் செயலையும் தான் உணர்ந்து நிற்கும். அது தன்னை நோக்கவும் சித்தாயே நிற்றல் தெளிவாகும்.
ஆகவே, எவ்வகையில் நோக்கினும் எவ்விடத்தும் சித்தாய் நிற்பதாகிய ஆன்மா, ஒரு வகையில் சித்தாயும் பிறிதொரு வகையில் அசித்தாயும் நிற்கின்ற அந்தக் கரணங்களில் ஒன்றன்று என்பது துணியப்படும்.
அவ்வாறாயின், சித்தாந்த நூல்கள் சில விடங்களில் அந்தக் கரணங்களை ஆன்மா எனும் நிலையில் வைத்துக் கூறுதல் ஏன் எனில், பிற பணியாளர்களை விட அமைச்சர் அரசனுக்கு மிக நெருங்கியவர் என்பது பற்றிச் சில இடங்களில் அவரையே அரசர் என ஒரு பேச்சுக்குக் கூறுதல் போல, ஏனைய கருவிகளை நோக்க அந்தக் கரணங்கள் ஆன்மாவுக்கு மிக அணுக்கமான கருவிகளாய் இருத்தல் பற்றி அவையே ஆன்மா என உபசரித்துக் கூறப்படும் அவ்வளவேயாம்.
இனி அந்தக் கரணங்களின் இயல்புகளை விளக்கிக் கூறுவாராய் எடுத்துக் காட்டு வெண்பாக்களைச் செய்கின்றார்.
எடுத்துக் காட்டு- 1
வெண்பா
23. மனம் ஆதி யால் உணர்தல் மன்னு புலன்கள்;
மனம் ஆதி மன்புலனின் அல்லன்;- மனமேல்
உதித்தொன்றை உள்ளம் உணர்தல்; அதனின்
உதிக்கும் கடல்திரையே ஒத்து.
இதன் பொருள்:
புறத்தே நிலைபெற்றுள்ள ஓசை முதலிய புலன்களை ஐம்பொறிகள் கவர்ந்து கொடுக்க மனம் முதலிய அந்தக் கரணங்கள் அவற்றை ஆராய்ந்து உணர்கின்றன.
மனத்திற்கு மேல் உள்ளதாகிய புத்தி இஃது இன்ன புலன் என்பதை நிச்சயிக்க, அதனால் உண்டாகும் இன்பத் துன்பங்களை ஆன்மா உணர்கிறது.
ஐம்பொறிகளால் உண்டாகும் பொதுவுணர்வும் அந்தக் கரணங்களால் உண்டாகும் சிறப்புணர்வும் ஆன்மாவை, வந்தடைதல், கடலின் நடுவிலே எழுந்த அலையானது தொடர்ச்சியாய்க் கரையை வந்து அடைதல் போன்றது.
அதனால், அந்தக் கரணங்கள் அந்த ஐம்பொறிகளினின்றும் வேறாதல், போல, ஆன்மாவும் அவ்வந்தக்கரணங்களினின்றும் வேறானதேயாம்,
பதவுரை
மனம் ஆதியால் உணர்தல் - மனம் முதலிய அந்தக் கரணங்களால் உணரப்படுவன
மன்னு புலன்கள் - ஐம்பொறிகளால் கவர்ந்து தரப்பட்டு, புறத்தே நிலை பெற்றுள்ள சத்தம் முதலிய ஐம்புலன்களாகும்.
உள்ளம் உணர்தல் - ஆன்மா உணர்வது
மனமேல் உதித்த ஒன்றை -மனத்திற்கு மேல் உள்ளதாகிய புத்தியின் கண் தோன்றிய புலன்களின் பயனாகிய இன்பத் துன்ப மயக்கங்களுள் ஒன்றையாம்.
கடல் திரையை ஒத்து உதிக்கும் - ஐம்பொறிகளால் உண்டாகும் பொதுவுணர்வும், மனம் முதலிய அந்தக் கரணங்களால் உண்டாகும் சிறப்பு உணர்வும் கடலில் எழுந்த அலை தொடர்ச்சியாய்க் கரையை வந்து அடைதல் போல ஆன்மாவை வந்து அடையும்.
அதனின் - ஆதலால்
மனம் ஆதி மன்புலனின் - மனம் முதலிய அந்தக் கரணங்கள் புலன்களைப் பொதுவாகப் பற்றுகின்ற ஐம்பொறிகளின் வேறாதல் போல்
அல்லன் - ஆன்மாவும் அவ் அந்தக் கரணங்களின் வேறேயாம்.
விளக்கம்
பொதுவுணர்வு:
செவி முதலிய பொறிகள் ஓசை முதலிய புலன்களைப் பொதுவாகவே அறியும். அஃதாவது, செவி இஃது ஓர் ஓசை என்பதை மட்டுமே அறியும். இது நாதசுர இசை என்றோ, வீணையின் இசை என்றோ பாகுபடுத்தி அறியமாட்டாது. இஃது ஓர் உருவம் என்பதை மட்டுமே கண் அறியும். ஆண் என்றோ பெண் என்றோ பாகுபடுத்தி அறியமாட்டாது. இவ்வாறு உணரும் பொதுவுணர்வே பொறிகளால் உண்டாவது.
பொதுவுணர்வை நிருவிகற்பவுணர்வு என்பர். விகற்பம்- வேறுபாடு; நிர்விகற்பம்- வேறுபாடு தோன்றாதது. எனவே, வேறுபடுத்திச் சிறப்பாக அறியாமல் இஃது ஒன்று என்ற அளவில் பொதுவாக அறிவதாகலின் நிருவிகற்பவுணர்வு எனப்பட்டது.
சிறப்புணர்வு:
கண் முதலிய பொறிகளால் பொதுவாக அறிகின்ற அளவில் நின்று விட்டால், பொருள்களை இன்னவை என்பது புலப்படாது. அவை நம் நினைவிலும் நில்லா. பொருள்களைச் சிறப்பாக உணரும்போதே அவை இன்னவை என்பது விளங்கும். சிறப்புணர்வைச் சவிகற்பவுணர்வு என்பர். சவிகற்பம்- வேறுபாட்டோடு கூடியது.
இஃது ஓர் உருவம் என்று முதலில் பொதுவாக உணர்ந்து பின்னர் இவ்வுருவம் ஆண் என்றும், முருகன் என்ற பெயரையுடையவன் என்றும், நல்லவன் என்றும், பணிவு தோன்ற நிற்கிறான் என்றும், வேலை கேட்டு வந்துள்ளான் என்றும் இவ்வாறு பல வகையில் பாகுபடுத்தி உணர்தலின் இச்சிறப்புணர்வு. சவிகற்பவுணர்வு எனப்பட்டது. இச்சிறப்புணர்வை உண்டாக்குவன உட்கருவிகளாகிய மனம் முதலிய அந்தக் கரணங்களேயாகும்.
அந்தக்கரணங்களின் செயற்பாடு:
அந்தக் கரணங்களின் செயற்பாட்டினை இனிக் காண்போம். ஐம்பொறிகளுள் ஒன்றால் தரப்பட்ட புலனை மனம் பற்றும்; அவ்வாறு பற்றி, இஃது இன்னது ஆகலாம் எனவும், இன்னது தானோ அன்றோ எனவும் ஐயுற்று நிற்கும். அகங்காரம் அதனை இன்னது எனத் துணிவேன் என்ற எழுச்சியைக் கொடுக்கும். பின்பு புத்திபெயர். குணம் முதலியவற்றால் பாகுபடுத்தி அப்பொருள் இன்னது என நிச்சயிக்கும். சித்தம், அறிந்த பொருளை மீளமீளப் பலகாலும் சிந்திக்கும்.
அந்தக் கரணங்களின் செயற்பாட்டினைப் பின்வருமாறு நிரல் படுத்திக் காட்டலாம்.
அந்தக்கரணங்கள் செயல்கள்
1. மனம் - பொறி வழியே வந்தவற்றைப் பற்றுதல்
2. அகங்காரம் - அவற்றை அறிதலில் எழுச்சியை விளைவித்தல்
3. புத்தி - அவற்றை இன்னதென நிச்சயித்தல்
4. சித்தம் - அறிந்தவற்றை மீள மீளச் சிந்தித்தல்
புலன்களைப் பொறிகளால் முதலில் பொதுவாக உணர்தல் வாயிற் காட்சி எனப்படும். அவற்றை மனம் முதலியவற்றின் வழியே புத்தியினால் சிறப்பாக உணர்தல் மானதக்காட்சி எனப்படும். சிறப்பாக உணர்ந்தவற்றால் விளையும் இன்பத் துன்பங்களை நுகர்தல் தன் வேதனைக் காட்சி எனப்படும்.
(வேதனை என்ற சொல்லைத் துன்ப அனுபவத்திற்கு மட்டுமே வழங்குகிறோம். ஆயின், அஃது இன்ப அனுபவம், துன்ப அனுபவம் ஆகிய இரண்டையும் குறிக்கும் பொதுச் சொல்லேயாகும்.)
இங்ஙனம் புலனுணர்வு ஐம்பொறிகளில் தோன்றிப் பின் அந்தக்கரணங்கள் நான்கினையும் ஒவ்வொன்றாக அடைந்து முடிவில் ஆன்மாவைச் சேர்தல் பற்றி உதிக்கும் கடல்திரையே ஒத்து என்றார்.
அந்தக்கரணங்கள் தம்மளவில் அசித்தேயாதல்:
அந்தக்கரணங்கள் புலன்களைச் சிறப்பாக அறியினும், அவற்றால் விளைகின்ற இன்பத் துன்பமாகிய பயன்களை உணரமாட்டா. அவை தம்மளவில் அசித்தேயாம். ஆன்மாவே அப்பயன்களை அறிந்து நுகரும்; அஃது என்றும் சித்தாயே நிற்கும். ஆதலால், புலன்களின் பயன்களை நுகர்கின்ற ஆன்மா, அவற்றைத் தன்பால் சேர்க்கின்ற அந்தக் கரணங்களின் வேறேயாதல் தெளிவாகும்.
முந்திய எடுத்துக்காட்டில் அந்தக் கரணங்களில் இயல்பைப் பொதுவாகச் சொன்னவர். அவற்றுள் ஒவ்வொன்றின் இயல்பையும் சிறப்பாகக் கூற வேண்டி இரண்டாம் எடுத்துக்காட்டினைச் செய்கின்றார்.
எடுத்துக் காட்டு - 2
வெண்பா
24. சிந்தித்தாய் சித்தம், தெளியாதாய் ஆங்காரம்,
புந்தியாய் ஆய்ந்து, மனமாகிப் - பந்தித்து
வெவ்வேறு தானே துணிந்து உள்ளம் இவ்வேறாம்
அவ்வேறாம் போதுபோல் ஆங்கு.
இதன் பொருள்:
ஐம்பொறிகளுள் ஒன்றால் தரப்பட்ட புலனை, ஆன்மா முதலில் மனத்தோடு கூடி மனமாய் நின்று பற்றி, இஃது யாதாகலாம் எனவும் இன்னது ஆகுமோ அன்றி, அன்னது ஆகுமோ எனவும் ஐயுற்று நிற்கும்.
பின் அகங்காரத்தோடு கூடி அதுவாய் நின்று அப் புலனை இன்னது எனத் தெளியமாட்டாது, எவ்வாறேனும் இதனைத் தெளிவேன் என எழுச்சியுற்று நிற்கும்;
பின்பு புத்தியைச் சார்ந்து அதுவாய் நின்று அப்புலனை இன்னது எனத் தெளியும்;
பின்பு சித்தமாய் நின்று, அப்புலனினது பெருமை சிறுமைகளையும் அருமை எளிமைகளையும், இவை போன்றுள்ள பிறவற்றையும் பலகாலும் சிந்திக்கும்;
இவ்வாறு பலவகைப்பட்ட உணர்கின்ற ஆன்மா இம் மனம் முதலிய அந்தக் கரணங்களின் வேறேயாம். இதனை ஓர் உவமை மூலம் விளக்குகிறார்.
கால தத்துவம் ஞாயிறு, நிலவு, விண்மீன் முதலியவற்றின் சார்பினால் பகல் எனவும், இரவு எனவும், நாள் எனவும், மாதம் எனவும் பல வகையில் வேறுபடுத்திச் சொல்லப் பெறுகிறது. அவ்வாறு வேறுபடுகின்ற காலம் ஞாயிறு, நிலவு முதலியவற்றின் வேறானதேயன்றோ? அதுபோல ஆன்மா மனம் முதலாகிய அந்தக் கரணங்களைச் சார்ந்து, அச்சார்பினால் வேறுபட்ட பலவுணர்வுகளை உடையதாகின்றது. அவ்வாறு பல நிலைப்பட உணர்வதாகிய ஆன்மா அவ்வந்தக் கரணங்களின் வேறானதேயாகும்.
பதவுரை
உள்ளம் - ஆன்மா
ஆங்கு - அந்தக்கரணங்களின் வழியாக அறியுமிடத்து
மனம் ஆகிப் பந்தித்து - முதலில் மனத்தோடு கூடி அதுவாய் நின்று ஐம்பொறிகளுள் ஒன்றால் தரப்பட்ட புலனைப் பற்றி நின்று இஃது இதுவோ? அதுவோ? என இவ்வாறு ஐயுற்று
ஆங்காரமய்த் தெளியாது - பின் அகங்காரத்தோடு கூடி அதுவாய் நின்று இதனை இன்னது எனத் துணிவேன் என எழுச்சியுற்று
புந்தியாய் ஆய்ந்து - பின் புத்தியோடு கூடி அதுவாய் நின்று அப்புலனை இன்னது எனத் துணிந்து
சித்தமாய்ச் சிந்தித்து - பின் சித்தத்தோடு கூடி அதுவாய் நின்று அப்புலனின் அருமை பெருமை முதலியவற்றை மீள மீள நினைந்து
வெவ்வேறு தானே துணிந்து - இங்ஙனம் ஒரு நிலையில் நின்று உணராது பல நிலைப்பட்டுப் பலவகையால் உணர்தலால்
இவ்வேறாம் - அவ்வாறு உணர்கின்ற ஆன்மா இம்மனம் முதலிய அந்தக் கரணங்களின் வேறானதேயாகும். (அஃது எதுபோல எனின்)
அவ்வேறாம் போதுபோல் - கால தத்துவம் சூரியன், சந்திரன், நட்சத்திரம் முதலியவற்றோடு கூடி அவற்றின் சார்பு பற்றிப் பகல் என்றும் இரவு என்றும் நாள் என்றும், மாதம் என்றும் ஆண்டு என்றும் பலவாறாக உணரப்பட்டாலும் உண்மையில் அக்காலம் வேறுபடுதல் இன்றிச் சூரியன் முதலியவற்றிற்கு வேறாதல் போலும்.
உவமை பொருள்
1. கால தத்துவம் - ஆன்மா
2. ஞாயிறு முதலிய சார்பு - மனம் முதலிய கருவிகளின் சார்பு
3. இரவு, பகல் முதலிய வேறுபாடுகளை உடையதாதல் - ஐயவுணர்வு, தெளிவுணர்வு முதலிய பலஉணர்வுகளை உடையதாதல்
4. காலம், ஞாயிறு முதலிய சார்புகளின் வேறாதல் - ஆன்மா, மனம் முதலிய கருவிகளின் வேறாதல்.
எடுத்துக்காட்டு - 3
சூக்கும ஐந்தெழுத்து, அந்தக்கரணங்களைச் செலுத்தும் முறையை இவ்வெடுத்துக் காட்டில் கூறுகின்றார்.
வெண்பா
25. அகார உகாரம் அகங்காரம் புத்தி;
மகாரம் மனம்; சித்தம் விந்து;- பகாது இவற்றை
நாதம் உளவடிவாம்; நாடில் பிரணவமாம்;
போதம் கடல்திரையே போன்று.
இதன் பொருள்:
அகரம் அகங்காரத்தைச் செ<லுத்தும்; உகரம் புத்தியைச் செலுத்தும்; மகரம் மனத்தைச் செலுத்தும்; விந்து சித்தத்தைச் செலுத்தும்; நாதம் புருட தத்துவத்தைச் செலுத்தும்.
இந்த ஐந்தையும் இவ்வாறு தனித்தனியாகக் காணாமல் ஒன்றாகத் தொகுத்து நோக்கினால் அத் தொகுதியே ஓம் என்னும் பிரணவம் ஆகும்.
இந்த ஐந்து அக்கரங்களால் ஆன்மாவினிடத்து உணர்வுகள் கடலில் அலைகள் புதிது புதிதாய்த் தோன்றுதல் போலத் தோன்றுவனவாகும்.
பதவுரை
அகார உகாரம் - அகரமும் உகரமும்
அகங்காரம் புத்தி - முறையே அகங்காரத்தையும் புத்தியையும் செலுத்தும்.
மகாரம் மன்ம - மகரம் மனத்தைச் செலுத்தும்
விந்து சித்தம் - விந்து சித்தத்தைச் செலுத்தும்
நாதம் உள வடிவாம் - நாதம் புருடதத்துவத்தைச் செலுத்தும்
இவற்றைப் பகாது நாடின் - இந்த ஐந்தையும் இவ்வாறு பகுத்துக் காணாது தொகுத்து நோக்கினால்
பிரணவமாம் - அத்தொகுதி பிரணவம் (ஓம்) ஆகும்.
போதம் கடல் திரையே போன்று - அகரம் முதலிய இந்த ஐந்து அக்கரங்களால் அந்தக் கரணங்களிடத்து உணர்வுகள் புதிது புதிதாகத் தோன்றுதல் கடலிடத்து அலைகள் புதிது புதிதாய் எழுந்து வருதல் போன்றதாகும்.
விளக்கம்
அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் ஆகிய ஐந்தும் சூக்கும பஞ்சாக்கரம் எனப்படும். அவற்றின் தொகுதியே ஓம் என்பதாகிய பிரணவம்.
தொகுதியாக நிற்கும் ஓம் என்பதனை சமட்டிப் பிரணவம் என்பர். ஓங்காரம் என்பதுவும் இதுவே. அகரம் முதலிய ஐந்தாக விரித்துக் கூறின் வியட்டிப் பிரணவம் எனப்படும்.
அகரம் முதலிய ஒவ்வொன்றும் பிரணவத்தின் கலை எனப்படும். கலை- கூறு; எனவே பிரணவம் ஐந்து கலைகளையுடையது என்பது விளங்கும். சொற்கூட்டம் அனைத்திற்கும் மூலம் ஓங்காரமேயாகும்.
பிரணவ கலைகளையும் அவற்றால் செலுத்தப்படும் அந்தக் கரணங்களையும் பின்வருமாறு அமைத்துக் காட்டலாம்.
பிரணவ கலைகள் அந்தக்கரணங்கள்
நாதம் - புருடதத்துவம்
விந்து - சித்தம்
மகரம் - மனம்
உகரம் - புத்தி
அகரம் - அகங்காரம்
பிரணவ கலைகளால் மனவுணர்வுகள் புதிது புதிதாய்த் தோன்றுவதற்குக் கடல் அலைகளை உவமை கூறினார். இதே உவமை முதல் எடுத்துக்காட்டிலும் வந்துள்ளது நினைவிருக்கலாம். அவ்விடத்தில், உணர்வுகள் இடையறாது தொடர்ச்சியாய்த் தோன்றுதற்கு அவ்வுவமை கூறப்பட்டதாகும். உவமை ஒன்றேயாயினும் வெவ்வேறு கருத்துப் பற்றி இவ்விரண்டு இடங்களிலும் ஆளப்பட்டுள்ளது என்பது அறிதற்குரியது.
எடுத்துக் காட்டு - 4
முந்திய எடுத்துக்காட்டில், அந்தக் கரணங்களைச் செலுத்தும் அக்கரங்கள் இவை என்பதைச் சுட்டினார். அவ்வக்கரங்கள் சடமேயாதலின் அவற்றை வாயிலாகக் கொண்டு செலுத்துவோர் அதிதேவர்களே என்பதையும், அவர்கள் இன்னார் என்பதையும் இங்கே உணர்த்துகிறார்.
வெண்பா
26. எண் நிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம்
நண்ணிய விந்துவொடு நாதத்து- கண்ணில்
பகர் அயன் மாலோடு பரமன் அதி தெய்வம்
அகர உகரம் மகரத் தாம்
இதன் பொருள்:
ஓங்காரத்தின் கூறுகளாய்ப் பொருந்திய விந்து, நாதங்களுக்கு அதி தெய்வங்கள் முறையே மகேசுரனும் சதாசிவனும் ஆவர்; அகர, உகர, மகரங்களுக்கு உரிய அதிதெய்வங்கள் முறையே பிரமன், மால், உருத்திரன் ஆவர்.
பதவுரை
எண் நிலவு - எண்ணத்தின் கண் விளங்குகின்ற
ஓங்காரத்து நண்ணிய - ஓங்காரத்தின் கூறுகளாய்ப் பொருந்திய
விந்துவொடு நாதத்து - விந்து நாதங்கட்கு உரிய
அதிதெய்வம் கண்ணில் - அதி தெய்வங்களைக் கருதுமிடத்து
ஈசர் சதாசிவமாம் - முறையே மகேசுரனும் சதாசிவனும் ஆவர்.
அகர உகர மகரத்து (அதி தெய்வம் கண்ணில்) - அகர, உகர, மகரங்களுக்கு உரிய அதிதெய்வங்களைக் கருதுமிடத்து,
பகர் அயன்மாலோடு பரமன் ஆம் - முறையே சொல்லப்பட்ட பிரமன், மால், உருத்திரன் என்பவராவார்.
விளக்கம்
பிரணவத்தின் கூறுகளையும், அவற்றைச் செலுத்தும் அதி தெய்வங்களையும் பின் வருமாறு நிரல்படுத்தி அமைத்துக் கொள்ளலாம்.
பிரணவ கலைகள் அதி தெய்வங்கள்
நாதம் - சதாசிவன்
விந்து - மகேசுரன்
மகரம் - உருத்திரன்
உகரம் - மால்
அகரம் - பிரமன்
பொதுவாகப் பிரமன், மால், உருத்திரன் எனக் கூறப் பெறுபவர் சகலர் ஆகிய உயிர்களுக்கு உரிய பிரகிருதி மாயையில் செயல் புரிவோர். அவர்கள் வேறு, அகர உகர மகரங்களைச் செலுத்துவோராக இங்குக் குறிக்கப் பெற்ற பிரமன், மால், உருத்திரன் என்போர் வேறு. இவர்கள் சுத்த மாயையில் நிற்போர்; அதனாலேயே, சுத்த மாயையின் காரியமாகிய அக்கரங்களுள் சிலவற்றிற்கு முதல்வர் ஆகின்றனர்.
இரண்டாம் கூறு
அந்தக்கரணங்கள் புலன்களைச் சிறப்பாய் அறிந்து, சித்து என்று சொல்லும் படியாக நிற்பினும் அவை தம்மளவில் அசித்தேயாம் என்றும், அவை போலன்றி ஆன்மா எவ்வகையில் நோக்கினும் சித்தேயாய் நிற்கும் என்றும், ஆதலின் ஆன்மா அவற்றின் வேறு என்றும் பார்த்தோம்.
அவ்வாறாயின் சித்தாகிய ஆன்மா அசித்தாகிய அக்கருவிகளோடு சேர்தற்குக் காரணம் என்ன என்ற வினா எழுகிறது. அதற்கு விடையாக சகசமலத்து உணராது அவை சந்தித்தது என நூற்பாவினுள் கூறினார் ஆசிரியர். அதன் விளக்கமாக இவ்விரண்டாம் கூறினை அமைக்கின்றார்.
இயற்கை மலம்:
ஆன்மா என்று உண்டோ அன்றே அதனை ஒரு குற்றம் பற்றியுள்ளது. செம்பில் களிம்பு போலவும், நெல்லில் உமி போலவும் அக்குற்றம் இயற்கையாக அதனிடத்தில் பொருந்தியுள்ளது. அவ்வியற்கைக் குற்றமே ஆணவ மலம் என்பது.
மலம் என்பதற்கு அழுக்கு என்பது பொருள். அஃது உயிருக்கு இயற்கையாதல் பற்றிச் சகச மலம் எனப்படும்.
ஆடையின் வெண்மை தோன்றாதபடி அழுக்கு மறைத்திருப்பது போல உயிரின் அறிவு சிறிதும் தோன்றாதபடி சகசமாகிய ஆணவ மலம் மறைத்து நிற்கிறது. சகச மலம் சிறிது நீங்கி அறிவு விளங்குவதற் பொருட்டு ஆன்மா அந்தக் கரணங்களோடு கூட வேண்டியதாயிற்று என்பது நூற்பாவிலுள்ள தொடரின் விளக்கமாகும்.
இதனை மேற்கோளும் ஏதுவுமாக அமைத்து ஆசிரியர் கூறியுள்ள முறையே இனிக் காண்போம்.
மேற்கோள்
இனி, இவ்வான்மாச் சகசமலத்தினால் உணர்வின்று- என்றது
மேற்கோள் விளக்கம்
ஆன்மா அறிவுடையதாயினும் சகசமலத்தினால் அறிவிலதாயிற்று என்பது இதன் பொருள். ஆகவே அறிவு பெறுதற் பொருட்டுக் கருவிகளோடு கூடுவதாயிற்று என உணர்த்தி, மேற்கண்ட வினாவுக்கு விடையளிக்கின்றார் ஆசிரியர்.
ஆணவ மலத்தை இயற்கை மலம் என்று குறித்ததனால், வேறு செயற்கை மலங்களும் உள்ளன என்பது பெறப்படும். செயற்கை என்பதற்குப் பின்பு வந்தது என்பது பொருள். ஆன்மாவிடத்தில் முதலில் இல்லாமல் பின்னே ஒரு காலத்தில் கூட்டுவிக்கப் பெற்ற மலங்கள் மாயையும் கன்மமும் ஆகும்.
ஆணவ மலமாகிய மாசினைப் போக்குவதற்காக உயிருக்கு உடம்பையும், அறிகருவிகளையும் கொடுக்கின்றான் இறைவன்; இவற்றை மாயையிலிருந்தே படைத்துக் கொடுக்கின்றான். ஆதலின் மாயா மலம் உயிரோடு தொடர்புடைய தாயிற்று. உடம்பையும், கருவிகளையும் பெற்ற உயிர் அவற்றைக் கொண்டு நல்லனவும் தீயனவும் ஆகிய கன்மத்தைச் செய்தலின் கன்ம மலம் உயிரோடு தொடர்புறுவதாயிற்று.
இவ்வாறு இடையில் வந்து பற்றுவனவாகிய மாயையும் கன்மமுமே செயற்கை மலங்கள் ஆயின. பின்பு வந்தது என்ற பொருளைத் தரும் ஆகந்துகம் என்ற சொல்லால் மாயை கன்மங்களைக் குறிப்பர். எனவே மலங்கள் இரு வகையின என்பது விளங்கும். அவை சகசம், ஆகந்துகம் என்பன.
இவ்விடத்தில் ஒன்றை நினைவிற்கொள்ளுதல் வேண்டும். மாயையும் கன்மமும் பின்பு வந்தவை என்னும் கருத்தில் ஆகந்துக மலங்கள் எனப்படினும் அவை இடையில் ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; ஆணவ மலம் போல அவையும் என்றும் உள்ளனவேயாம். அதுபற்றியே மும்மலங்களும் அநாதி எனப்படுகின்றன. ஆயினும் மாயையும் கன்மமும் இறையருளால் சகசமலமாகிய ஆணவத்தை நீக்கும் பொருட்டு இடையில் ஒரு காலத்தில் ஆன்மாவை வந்து பற்றின வாதலின் அவை ஆகந்துகம் என்று கூறப்படுகின்றன.
இனி ஏதுவை நோக்குவோம்.
ஏது
அதுதான் ஞான திரோதகமாய் மறைத்துக் கொடு நிற்றலான்
ஏது விளக்கம்
அறிவை மறைப்பது ஆணவ மலமே:
ஆன்மா அறிவுடையது. அவ்வறிவு சில நேரங்களில் விளங்காமற் போகிறது; அறிவு மறைந்து அறியாமை மேலிடுகிறது. அறியாமை நிகழ்வதற்குக் காரணமாய் இருப்பது யாது என்பதை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலனாகும். அறிவை ஏதோ ஒன்று மறைப்பதனாலேயே அவ்வறிவு விளங்காமல் அறியாமை உண்டாகிறது என்பது விளங்கும். அறிவை மறைப்பதாகிய அப்பொருள் யாது? அறிவை மறைக்கும் பொருளாய் நிற்பது ஆணவ மலமே என்பது சித்தாந்தம்.
பிற சமயத்தார் கூறுவது:
சைவ சித்தாந்திகளைத் தவிரப் பிற கொள்கையாளர் எவரும் ஆணவ மலத்தினது உண்மையை ஒப்புக் கொள்வதில்லை. அறியாமைக்குக் காரணமாக அவர்கள் வேறு பலவற்றைக் கூறுவர். அவற்றுள் ஒன்று, அறிவை மறைத்து நிற்பதொன்று இல்லை. அறிவினது இன்மையே அறியாமை என்பது. இதனை ஆசிரியர் மறைத்துக் கொடு நிற்றலான் என்றதனால் மறுத்தார்.
மேலும், இன்மை யாதொரு காரியத்தையும் நிகழ்த்த மாட்டாது. ஆதலால் அறிவினது இன்மை அறியாமையைச் செய்யும் என்றல் பொருந்தாது.
மற்றொன்று, மாயை கன்மங்களே அறிவை மறைக்கும் என்பது. அதனை அடுத்து வருவதாகிய எடுத்துக் காட்டில் வைத்து மறுப்பார் ஆசிரியர்.
இவ்வாறு ஞானதிரோதகம் (அறிவை மறைக்கும் பொருள்) பற்றிப் பிறர் கூறுவனவற்றை யெல்லாம் விலக்கி அதுதான் என ஆணவ மலத்தைச் சிறப்பாகச் சுட்டி, மறைத்துக் கொடு நிற்றலான் என அதன் இயல்பை விளக்கி, ஞான திரோதகமாய் நிற்பது ஆணவ மலமே என்னும் சித்தாந்தத்தை வலியுறுத்தினார் ஆசிரியர்.
ஆணவ மலம் அறிவை மறைத்துக் கொடு நிற்றலால் என்னும் இவ்வேது, ஆன்மா அறிவிலதாயிற்று என்ற மேற்கோளை நிறுவும் வகையில் அமைந்துள்ளமை காணலாம்.
இப்பகுதியால், அறிவை மறைத்தல் ஆணவத்தின் இயல்பு என்பது பெறப்பட்டது.
உயிர் ஆணவத்தோடு மட்டும் உள்ள நிலையில் ஆணவம் அதன் அறிவை முற்றிலும் மறைத்து நிற்றலால், அறிவு சிறிதும் இன்றித் தான் ஒரு பொருள் உண்டு என்பதையும் அறியாது உயிர் அறியாமையிருளில் மூழ்கிக் கிடக்கும். அந்நிலை கேவலாவத்தை எனப்படும். கேவலம்- தனிமை; அஃதாவது உயிர் ஆணவம் ஒன்றோடு மட்டும் கூடியிருக்கும் நிலை. அவத்தை-நிலை.
உயிர் இறையருளால் மாயை கன்மங்களோடு கூடி நிற்பதாகிய நிலை சகலாவத்தை எனப்படும். அதாவது, உயிர் உடம்பையும் அறிகருவிகளையும் பெற்று, உலகிற் பிறந்து, சிறிதாக அறிவு விளங்கி நிற்கும் நிலை இதுவாகும். சகலம் என்பதற்கு மாயையோடு கூடியிருத்தல் என்பது பொருள். மாயை உள்ளபொழுது கன்மமும் உளதாகும்.
ஆணவ மலத்தின் உண்மையியல்பும் பொதுவியல்பும்:
மாயை கன்மங்களோடு உயிர் கூடாதபொழுது ஆணவம் உயிரறிவை முழுதுமாக மறைத்து நிற்கும் எனப் பார்த்தோம். அவ்வாறு மறைத்து நிற்றலே ஆணவத்தின் உண்மையியல்பு ஆகிய சொரூபலக்கணம் ஆகும்.
இனி, மாயை கன்மங்களோடு கூடியபொழுது ஆணவம் உயிரின் அறிவைத் திரிவுபடுத்தும்; அஃதாவது அற்பமான பொருளை உயர்ந்த பொருளாகவும், நில்லாத பொருளை நிலைத்த பொருளாகவும் மதிக்கும்படி அறிவை வேறுபடுத்தி நிற்கும். ஒன்றை மற்றொன்றாக மாறி உணர்வது விபரீத அறிவு எனப்படும். இவ்வாறு மாறி உணர்தலாகிய திரிபுணர்ச்சியை- விபரீத அறிவை உண்டாக்குவது ஆணவத்தின் பொதுவியல்பு ஆகிய தடத்த லக்கணம் ஆகும்.