பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
10:04
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப விமோசனம் வழங்கிய அழகர், தசாவதார நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டார்.
அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கினார். நேற்று காலை 9:00 மணிக்கு சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மதியம் 3:00க்கு மேல் 4:00 மணிக்குள் கருடவாகனத்தில் வைகையாற்றில் உள்ள தேனுார் மண்டபத்தில் எழுந்தருளிய அழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின், ராமராயர் மண்டபத்திற்கு திரும்பினார். நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் அழகர் புறப்பாடு நடைபெற்றது. நாளை அதிகாலை 2:30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருள்வார்.
மீண்டும் ஆற்றுக்கு வந்த அழகர்; மதுரை சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (25ம் தேதி), நாளை அதிகாலை 2:30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சி பங்கேற்க பல்லக்கில் கிளம்பிய அழகர் வரும் வழிகளில் உள்ள மண்டகப்படிகளில் தடம் பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி மீண்டும் ஆற்றுக்கு வந்த கள்ளழகரை காண பக்தர்கள் குவிந்தனர். பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.