சபரிமலை யாத்திரையின் இறை அனுபவத்தைச் சொல்லால் வடிக்க முடியாது. மாலையணிந்து விரதம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் ஐயப்பனின் பிரதிபிம்பமாக விளங்குகின்றனர். மாலையணிந்த அனைவருமே ஐயப்பன்மார் என்றும், சுவாமிமார் என்றும் பெயர் பெறுகின்றனர். பகவானுக்கும் பக்தனுக்கும் வேற்றுமை ஏதுமில்லை என்பதை இது காட்டுகிறது. 18 படிகளைக் கடந்து மேலே ஏறினால் ஒவ்வொருவரின் கண்ணில் படும் வேதவாக்கியம் தத்வமசி என்பதாகும். நீயே அது என்பது இதன் பொருள். மூலவராகக் காட்சி அளிக்கும் ஐயப்பசுவாமியும்,விரதமிருந்து வரும் பக்தனும் ஒன்றே என்பதை இந்த வார்த்தை உணர்த்துகிறது. கடவுளே உலகில் உள்ள அனைத்துமாகக் காட்சியளிக்கிறார். காணும் காட்சியெல்லாம் இறைவனே அன்றி வேறில்லை என்ற தூய்மையான நிலையை அடைவதற்காக இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த உயரிய நிலையை மனிதகுலம் பெறவேண்டும் என்பதற்காகவே ஹரிஹர புத்திரன் சபரிமலையில் கோயில் கொண்டிருக்கிறார்.