மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2016 04:07
அன்னூர்: மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்நடந்தது. ‘மேலத்திருப்பதி’ என்றழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில், 350 ஆண்டுகள் பழமையானது. திருப்பதிக்கு வேண்டியவர்கள் அங்கு செல்ல முடியாவிட்டால், இங்கு வந்து பெருமாளை தரிசிப்பது வழக்கம்.
புரட்டாசி மாத திருவிழா இங்கு மிகவும் விசேஷமானது. இக்கோவிலில் சுதைகள் பழுது பார்க்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா, 8ம் தேதி வேத பாராயணங்களுடன் துவங்கியது. மூன்று நாட்கள் வேள்வி பூஜை, வேத பாராயணம் நடந்தது. வேள்வி சாலையிலிருந்து, புனிதநீர் அடங்கிய குடங்களை, ஸ்ரீமத்யாமுனாச்சாரியார் தலைமையிலான பட்டாச்சார்யார்கள் விமானங்களுக்கு கொண்டு சென்றனர். காலை 6:35 மணிக்கு முலவர் விமானம், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தரிசனம் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேதர வெங்கடேசப்பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் பார்க்க ‘எல்சிடி’ ‘டிவி’ பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தது.