பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
02:07
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பதற்றம் நீடிப்பதை தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை ஒரு பகுதி துவங்கியது.
இதனால் ஜம்முவில் மட்டும் 15 ஆயிரம் பக்தர்கள் யாத்திரையை தொடர முடியாமல் உள்ளனர். மேலும் பக்தர்கள், பாதுகாப்பு காரணமாக முகாமை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அங்கு இணையதள மற்றும் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. கலவரம் நீடிப்பதால், அங்கு பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு காரணமாக யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். மொபைல் போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது இடையூறாக இருப்பதாக பக்தர்கள் கூறியுள்ளனர். ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
அமர்நாத் நிர்வாகம் கூறுகையில், நேற்று மட்டும் 8,611 பக்தர்கள், பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். வடக்கு காஷ்மீரில் உள்ள பல்டால் முகாமையும், தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் மாவட்டத்தில் உள்ள நுன்வான் முகாமையும் ஏற்கனவே அடைந்தவர்கள் தான் நேற்று தரிசனம் செய்தனர். ஜூலை 2 துவங்கிய அமர்நாத் யாத்திரையை, இதுவரை 1,27,538 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் கூறப்பட்டுள்ளது.காஷ்மீர் கலவரத்தில் 40 அரசு அலுவலகங்கள், தாக்கப்பட்டுள்ளன. 4 போலீஸ் ஸ்டேசன்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளன. கலவரத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர். 90 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே, அமர்நாத் யாத்திரை சென்ற குஜராத் மாநிலத்தை சேர்ந்த பக்தர்களை மீட்க அம்மாநில அதிகாரிகள் குழு காஷ்மீர் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல், காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியுடன் போனில் பேசியதாகவும், இதனை தொடர்ந்து, குழு ஜம்மு சென்று, குஜராத்தை சேர்ந்த பக்தர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.