வேடுவனாக வாழ்ந்த வால்மீகி சிவபெருமானை நோக்கி தவம் இருந்த தலம் திருப்புத்தூர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ளது. கொன்றை வனமாக இருந்த இங்கு, புற்றின் அடியில் இறைவன் காட்சியளித்தார். அதனால், இவ்வூருக்கு திருப்புற்றுõர் என்ற பெயர் உண்டானது. பின் திருப்புத்தூர் என மருவிவிட்டது. இங்குள்ள மூலவருக்கு திருத்தளிநாதர் என்பது திருநாமம். இங்குள்ள யோகபைரவர் சந்நிதி மிகவும் புகழ்பெற்றது. கால்பெருவிரலைத் தரையில் ஊன்றி மேற்குநோக்கி காட்சி தருகிறார். சூரபத்மன் தேவலோகத்தின் மீது படையெடுத்து, இந்திரன் மகன் ஜெயந்தனை சிறையில் அடைத்ததோடு, பூத உருவத்தையும் பெற்றான். ஜெயந்தன் இங்குள்ள யோகபைரவரை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றான். ஜெயந்தனுக்கும் தனி சந்நிதி இங்குள்ளது. தேய்பிறை அஷ்டமி நாட்களில் யோக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும். ஞாயிறு மாலை ராகுகாலம் இவருக்கு உகந்தது. எதிரிகளின் தொல்லை, வழக்கு, கடன்தொல்லை ஆகியவற்றில் இருந்து விடுபட இவரை வழிபடுவர்.