பதிவு செய்த நாள்
24
ஜன
2025
10:01
வில்லிவாக்கம்; அகத்தீஸ்வரர் கோவிலில் சேதமடைந்த கொடிமரத்தை, கடந்த ஆறு மாதங்களாக சீரமைக்காமல் இருப்பது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வில்லிவாக்கத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 2.15 கோடி ரூபாயில், கல்லகார மொட்டை கோபுரத்தின் மீது, புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, கடந்த 20ம் தேதி துவங்கியது. சிறப்புமிக்க இந்த கோவிலின் வளாகத்தில் உள்ள கொடிமரம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. இதனால், கொடிமரம் நிற்கும் கீழ்ப்பகுதியை, கயிறால் கட்டி வைத்துள்ளனர். அதன் பின், முறையாக சீரமைக்காமல் அப்படியே விட்டுள்ளனர். கோவில் கொடிமரத்தை சீரமைக்காமல், மொட்டை கோபுரம், 2.15 கோடி நிதியில் கட்டப்படுவது, பக்கதர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: சிவன் கோவிலில் மட்டுமின்றி, அனைத்து கோவில்களிலும் கொடிமரம் தான் முக்கியம். கொடி மரத்தின் கீழ் உள்ள பலிபீடத்தை வணங்கிய பின், அர்த்த மண்டபம், மகா மண்டபத்தை கடந்து தான் கருவறையில் உள்ள சுவாமியை வணங்குவர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோவில் கொடிமரம், கடந்த ஆடி மாத திருவிழாவின் போது சேதமடைந்து, அப்படியே ஆறு மாதங்களாக கிடக்கிறது. இதை முதலில் சீரமைக்காமல், பல கோடியில் கோபுரம் கட்டப்படுவது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது,‘கொடிமரம் சேதமடைந்திருப்பது உண்மை தான். அதை சீரமைப்பற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, வல்லுனர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களிடம் கருத்துரு கேட்டு, அறநிலையத்துறை கமிஷனருக்கு ஒரு மாதத்திற்கு முன் கடிதம் அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன், கொடிமரம் சீரமைக்கப்படும்’ என்றனர்.