பதிவு செய்த நாள்
24
ஜன
2025
04:01
பிரயாக்ராஜ்; உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 13ம் தேதி துவங்கிய பிரமாண்ட திருவிழாவில், இதுவரை 10.26 கோடி பேர் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சன்னியாசிகள், அகோரிகள், நாகா பாபாக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பல கோடி பேர் வந்து செல்லும் பகுதியை துாய்மையாக வைக்க, 15 ஆயிரம் துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் ஏர்போர்ட்டில் இன்று ஒரே நாளில் 5,000 பயணிகள் வந்திறங்கினர். கடந்த 10 நாட்களில், 39 ஆயிரம் பயணிகள் விமானம் மூலம் பிரயாக்ராஜ் வந்துள்ளனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள், பிரயாக்ராஜில் உள்ள புகழ்பெற்ற பெரிய ஆஞ்நேயர் கோயிலுக்கு செல்கின்றனர். அங்கு நடக்கும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதுடன், திரிவேணி சங்கமத்தில் நடக்கும் மாலை நேர ஆரத்தியிலும் பங்கெடுத்து, நதிகளை வணங்குகின்றனர். பிரயாக்ராஜ் வரும் இளம் தலைமுறையினருக்கு, மகா கும்பமேளா பற்றிய விரிவான தகவல்களை விளக்கும் வகையில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் இணைத்து, அதிநவீன 3டி ஸ்பெஷல் ஷோக்கள் நடத்தப்படுகின்றன. அதிநவீன கண்ணாடி அணிந்து அதை பார்ப்பவர்களுக்கு, கும்பமேளா பற்றிய முழு தகவல்கள் கிடைப்பதுடன், சிறப்பான அனுபவம் கிடைக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். இந்த அதிநவீன கண்ணாடியுடன் கூடிய ஹெட்செட் அணிவதன் மூலம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கும்பமேளா தொடர்பான புராண, இதிகாச கதைகளை கண்டு, கேட்டு ரசிக்க முடியும் என பக்தர்கள் கூறினர்.