பதிவு செய்த நாள்
24
ஜன
2025
10:01
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் சமீப காலமாக அரிப்பு ஏற்பட்டு வருகிறது. சுமார் 50 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து பக்தர்கள் கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக கனிமொழி எம்.பி., தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி., குழுவினரும், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான குழுவினரும் கடற்கரையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோவில் முன் உள்ள கடல் பகுதியில் டிரோன் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் வாயிலாக நிகழ்நேர இயக்கவியல் குறித்து விஞ்ஞானிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு குறித்த அறிக்கையை உயர் அதிகாரிகள் முன்னிலையில் தமிழக அரசிடம் சமர்பிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.