பதிவு செய்த நாள்
13
ஜூலை
2017
04:07
ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது வஞ்சகமாக சீதாதேவியை ராவணன், இலங்கைக்குக் கடத்தி சென்றான். அப்போது, சீதையை மீட்க ராமர் தமிழகத்தில் சில இடங்களில் விநாயகரை வழிபட்டு ஆசி பெற்றதாக புராணம் கூறுகிறது. சீதையைத் தேடி லட்சுமணனுடன் வனத்தில் அலைந்த ராமபிரான் வழிபட்ட விநாயகர் திருத்தலங்களுள் ஒன்று முடிகொண்டான். சர்வ முக்தி விநாயகர் என்று போற்றப்படும் விநாயகர் நன்னிலத்துக்கு அருகே முடிகொண்டான் என்ற கிராமத்தில் அருள்புரிகிறார். ராமபிரானுக்கு சர்வ வல்லமையும் இவர் வழங்கியதால் இந்த விநாயகரை ராமர் விநாயகர் என்றும் சொல்வர். இத்திருத்தலத்திற்கு திருத்தலாங்கூர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் திருத்தலாங்கன் என்ற பக்தன் ராமரை அடையாளம் கண்டு அவரை வணங்கி ஆசி பெற்றதால் அவனது ஜன்ம சாபமான ஊனம், ராமன் அருளால் நீங்கியது. ராமர், வழிபட்ட விநாயகருக்கு திருத்தலாங்கனே கோயிலும் கட்டினார். ராமபிரான், இலங்கை செல்வதற்கு முன்னும், ராவணனை வென்று சீதையுடன் திரும்பி வந்தபோதும், இந்த விநாயகரை வழிபட்டு பேறு பெற்றார் என்ற கருத்தும் நிலவுகிறது.
அடுத்தவர், இலக்கு அறிவித்த விநாயகர். ராவணன் சென்ற பாதையைத் தேடி, இலங்கை செல்ல எந்த வழி சுலபமானது என்று தேடிக் கொண்டே வந்த ராமபிரான், ஆதிசேது எனும் கோடியக்கரையில் எழுந்தருளியுள்ள விநாயகரை வழிபடவே, விநாயகர், ராமபிரானுக்கு வழிகாட்டி அருள்புரிந்தார். அதனால், ராமருக்கு இலக்கு அறிவித்த விநாயகர் என்று இந்த விநாயகர் பெயர் பெற்றார். இன்றும் அந்த விநாயகர், வேதாரண்யம் தெற்கு வீதி முனையில் கோடியக்கரையில் செல்லும் வழியில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையிலிருந்து தேவிப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள திருத்தலம் உப்பூர். இந்த விநாயகர் மீது நாள்தோறும் வெயில்படுவதால், வெயிலுகந்த விநாயகர் என்று பெயர். ராமேஸ்வரத்துக்கு ராமபிரான் சென்றபோது, தான் மேற்கொண்ட காரியம் வெற்றி பெற வேண்டும் என்று இந்த விநாயகரை வழிபட்டு ஆசிபெற்ற பின்னரே தேவிப்பட்டினம் சென்று, கடலில் நவபாஷாண நவக்கிரகங்கள் நிறுவி வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றார்.
ராவணனை சம்ஹாரம் செய்தபின், திருமறைக்காடு என்று சொல்லப்படும் வேதாரண்யத்தில் உள்ள வீரஹத்தி விநாயகரை வழிபட்டார் ராமர். மேலும், பிரம்மஹத்தி தோஷத்துக்கு பரிகாரமாக சேதுவில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மஹத்தி தோஷம் நீங்கினாலும், பெண் உருவில் வீரஹத்தியாக அந்தப் பாவம் பேய் வடிவில் ராமரைத் தொடர்ந்தது. அதை அறிந்த ராமபிரான், வேதாரண்யம் வந்து மீண்டும் விநாயகரை வழிபட்டு, அருள்பாலிக்க வேண்டினார். அப்போது, ராமரைப் பின் தொடர்ந்து வந்த வீரஹத்தியை விரட்ட விநாயகர் காலைத் துõக்குகிறார். இதைக் கண்ட அந்தப் பேய், இனி ராமரைப் பின் தொடர்ந்தால் விநாயகரிடம் உதைபட வேண்டும் என்பதை அறிந்து, அந்த அச்சத்தில் ஓடி கடல் நோக்கி மறைந்ததாம். ராமரைத் தொடர்ந்த வீரஹத்தியை உதைத்து விரட்ட காலைத் துõக்கிய விநாயகர், இன்றும் அதே கோலத்தில், மேற்கு கோபுர வாசலில் காட்சியளிக்கிறார். இவரை வழிபட சகல பாபவங்களும் நீங்குவதுடன் உடனே வெற்றியும் கிடைக்கும் என்பர்.