Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோத்திர பாடல்கள் பகுதி-3
முதல் பக்கம் » தெய்வப் பாடல்கள்
ஞானப் பாடல்கள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
01:01

1. அச்சமில்லை

பண்டாரப் பாட்டு
 
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், 1

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. 2

2. ஜய பேரிகை

ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா!
ஜய பேரிகை கொட்டடா!

1. பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக்
பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்  (ஜய பேரிகை)

2. இரவியி னொளி யிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினைக்கண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்   (ஜய பேரிகை)

3. காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்.  (ஜய பேரிகை)

3. சிட்டுக் குருவியைப் போலே
 
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே

சரணங்கள்
1. எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)

2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)

3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.  (விட்டு)

4. விடுதலை வேண்டும். ராகம்-நாட்டை

பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா!

சரணங்கள்
தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவி லங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மொ டமுத முண்டுகலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ (வேண்டுமடி)

விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே,
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்மை தீர மெய்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும வண்மை பொழிய (வேண்டுமடி)

பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள (வேண்டுமடி)

5. மனத்தில் உறுதி வேண்டும்.
 
மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்  1

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.  2

6. ஆத்ம ஜயம்
 
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!  1

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றா லவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?  2

7. காலனுக்கு உரைத்தல்
 
ராகம்-சக்ரவாகம் தாளம்-ஆதி

பல்லவி
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)

சரணங்கள்

1. வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

2. ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)

8. மாயையைப் பழித்தல்
 
ராகம்-காம்போதி  தாளம்-ஆதி

1. உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே!-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!-மாயையே!

2. எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே! நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!

3. என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் மாயையே!

4. சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணர் துரரை யென்
செய்வாய் மாயையே!

5. இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!

6. நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!

7. என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!

8. யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

9. சங்கு

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! 1

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்! 2

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப்பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே,
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4

10. அறிவே தெய்வம்

கண்ணிகள்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?  1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?  2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?  3

வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.  4

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.  5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையேவேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.  6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?  7

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?  8

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?  9

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.  10

11. பரசிவ வெள்ளம்

உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே 

காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே

எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.

வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.

தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்
சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி

தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.

எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே.

காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.

எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.

மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.

இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே.

வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.

ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.

வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!

யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!

எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா!

எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!

நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா!

12. பொய்யோ?மெய்யோ? (உலகத்தை நோக்கி வினவுதல்)

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 2

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? 3

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.  4

13. நான்

இரட்டைக் குறள் வெண் செந்துறை
 
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்  1

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,  2

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான், 3

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான். 6

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான். 7

14. சித்தாந்தச் சாமி கோயில்
 
சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீப வொளி யுண்டாம்;-பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச் சுடராம்;-பெண்ணே! 1

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே! 2

தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்றமுறுஞ் சுடராம்;-பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்;-பெண்ணே! 3

பட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிச் சுடராம்;-பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காண வொளிர்சுடராம்;-பெண்ணே! 4

15. பக்தி்
 
ராகம்-பிலஹரி

பல்லவி
பக்தியினாலே-தெய்வ-பக்தியினாலே

சரணங்கள்
1. பக்தியினாலே-இந்தப்
பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத்
தத்துவ முண்டாம்,-நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். (பக்தி)

2. காமப் பிசாசைக் -குதிக்
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்
நாம மில்லாத-உண்மை
நாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும், (பக்தி)

3. ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டட
பாச மறுப்போம்,-இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்
ஈசனைப் போற்றி-இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், (பக்தி)

4. சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்
பார்வைகள் தோன்றும்,-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும், (பக்தி)

5. கல்வி வளரும்,-பல
காரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும்,
சொல்லுவதெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தி)

6. சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும்.  (பக்தி)

7. சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன்
கந்த மலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தை யறிந்தே-அருள்
செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும் (பக்தி)

16.அம்மாக்கண்ணு பாட்டு
 
பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந்திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

ஏட்டைத் துடைப்பது கையாலே மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயோலே.  (பூட்டைத்)

17. வண்டிக்காரன் பாட்டு
 
அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை

காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?-எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!  1

நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே?-எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!.  2

18. கடமை அறிவோம்
 
கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.

19. அன்பு செய்தல்
 
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 1

வேறு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!  2

20. சென்றது மீளாது!
 
சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

21. மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

22. மனப் பெண்
 
மனமெனும் பெண்ணே!வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாது போய் விழுவாய்

தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்;
அடிக்கடி மதுவினை மணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்

பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்

அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா மென்னை

உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்
இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,

தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பபரம் பொருளைக்
காணவே வருந்துவாய் காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய்.

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;

உன்விழிப் படாமல் என் விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்தனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.

23. பகைவனுக்கருள்வாய்

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.  (பகைவ)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!  (பகைவ)

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே!   (பகைவ)

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)

தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!  (பகைவ)

24. தெளிவு

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?  1

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?  2

சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே!
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ?  3

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தே னுரைத் தனனே;-மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?  4

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க
கச்ச முண்டோடா-மனமே?
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!  5

25. கற்பனையூர்

கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்கு
கந்தர்வா விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்கு
சூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை. 1

திருமனை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலார்கடலில்-நாம்
மீளவும் நம்மூர் திரும்புமுன்னே.  2

அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3

எக்கால மும்பெரு மகிழ்ச்சி-யங்கே
எவ்வகைக் கவலையும் போரு மில்லை,
பக்குவத் தயிலை நீர்குடிபோம்-அங்குப்
பதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4

இன்னமு திற்கது நேராகும்-நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரதனிடை வாழ்ந்திடுவோம்-நம்னை
நலித்திடும்பே யங்கு வாராதே.  5

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்கு
கோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்
அழகிய பொமுடி யரசிகளாம்-அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6

செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்கு
சிறுவிற கெல்லாம் சுடர்மணிவாள்.
சந்தோஷத்துடன் செங்கலையும்-அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7

கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி
காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8

குழந்தைக ளாட்டத்தின் கனவையெல்லாம்-அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே!
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே.  9

 
மேலும் தெய்வப் பாடல்கள் »
temple news
1. விநாயகர் நான்மணி மாலை வெண்பா1. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்சித்திபெறச் செய்வாக்கு ... மேலும்
 
temple news
26. சிவசக்தி புகழ் ராகம்-தன்யாசி    தாளம்-சதுஸ்ர ஏகம் ஓம், சக்திசக்தி சக்தியென்று ... மேலும்
 
temple news
51. வேய்ங் குழல் ராகம்-ஹிந்துஸ்தான் தோடி தாளம்-ஏகதாளம் எங்கிருந்து வருகுவதோ?-ஒலியாவர் செய்குவ தோ?-அடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar