ஜகார்த்தா: பொதுவாக உலகின் மிகப் பழமையான கலைப்படைப்புகள் என்றால், ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் உள்ள குகை ஓவியங்களே நினைவுக்கு வரும். ஆனால், தற்போது இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ஓவியங்கள் இந்தக் கருத்தை முற்றிலும் மாற்றியுள்ளது.
சமீபத்திய ஆய்வில், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் வாழ்ந்த மனிதர்கள் உலகின் மிகப் பழமையான குகை ஓவியங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுலாவேசி தீவின் லியாங் மெட்டாண்டுனோ என்ற சுண்ணாம்புக் குகையில், சிவப்பு நிற கை அச்சு ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பழமையான ஓவியமாகக் கருதப்பட்ட ஸ்பெயினில் உள்ள நியாண்டர்தால் கை அச்சு ஓவியத்தை விட இவை, 1,100 ஆண்டுகள் முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஓவியங்கள், 67,800 ஆண்டுகள் பழமையானவை என கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கை அச்சு ஓவியம், கையை பாறையில் வைத்து அதன் மீது சிவப்பு நிற வண்ணப்பொருளை ஊதி உருவாக்கப்பட்டது. சில விரல்களின் நுனிகள் விலங்குகளின் நகங்கள் போல கூர்மையாக மாற்றப்பட்டுள்ளன. இது சுலாவேசியில் மட்டுமே காணப்படும் தனித்துவமான பாணி. பண்டைய சமூகத்தில் மனித – விலங்கு உறவு பற்றிய குறியீட்டு அர்த்தத்தை இந்த ஓவியங்கள் கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு முன் சுலாவேசியில் பறவைத் தலையுடன் கூடிய மனித உருவங்கள் போன்ற, 48,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டவை, அதைவிட 19,000 ஆண்டு கள் பழமையானவை. ஐரோப்பாவில் உள்ள பழமையான குகை ஓவியங்களை விட 30,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்தக் குகைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக ஓவியம் வரையப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா ஆகியவற்றை உள்ளடக்கிய பழங்கால சஹுல் கண்டத்திற்கு மனிதர்கள் 65,000 ஆண்டுகளுக்கு முன் கடல் பயணம் செய்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படி வடக்கு பாதையில் சென்றவர்களே இந்தக் கை அச்சுகளை உருவாக்கியவர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.