Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தோத்திர பாடல்கள் பகுதி-2 தோத்திர பாடல்கள் பகுதி-2 ஞானப் பாடல்கள் ஞானப் பாடல்கள்
முதல் பக்கம் » தெய்வப் பாடல்கள்
தோத்திர பாடல்கள் பகுதி-3
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
13:04

51. வேய்ங் குழல்

ராகம்-ஹிந்துஸ்தான் தோடி தாளம்-ஏகதாளம்
 
எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவ தோ?-அடி தோழி!

குன்றி னின்றும் வருகுவதோ?-மரக்
கொம்பி னின்றும் வருகுவதோ?-வெளி
மன்றி னின்று வருகுவதோ?-என்தன்
மதி மருண்டிடச் செய்குதடி-இஃது,               (எங்கிருந்து)

அலையொ லித்திடும் தெய்வ-யமுனை
யாறி னின்றும் ஒலுப்பதுவோ?-அன்றி
இலையொ லிகும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்ன முதைப்போல்?           (எங்கிருந்து)

காட்டி னின்றும் வருகுவதோ?-நிலாக்
காற்றிக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமிஃதென் உயிரை யுருக்குதே!               (எங்கிருந்து)

பறவை யேதுமொன் றுள்ளதுவோ!-இங்ஙன்
பாடுமோ அமுதக்கனற் பாட்டு?
மறைவினிறுங் கின்னர ராதியர்
வாத்தியதினிசை யிதுவோ அடி!                  (எங்கிருந்து)

கண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீ!
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
பாடி யெய்திடும் அம்படி தோழி!                   (எங்கிருந்து)

52. கண்ணம்மாவின் காதல்
 
காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;-அமு
தூற்றினை யொத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனிம்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக் (காற்று வெளி)

நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த
நேரமும் நின்தன்ப் போற்றுவேன்-தயர்
போயின போயின துன்பங்கள்-நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்தன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென் றபேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!-என்தன்
சிந்தனையே என்தன் சித்தமே!-இந்தக்  (காற்று வெளி)

53. கண்ணம்மாவின் நினைப்பு

பல்லவி
நின்னை யே ரதியென்று நினைக்கிறேனடி-கண்ணம்மா!
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்! (நின்)

சரணங்கள்

பொன்னை யே நிகர்த்த மேனி மின்னை ய, நிகர்த்த சாயற்
பின்னை யே!-நித்ய கன்னியே! கண்ணம்மா!  (நின்)

மார னம்புக ளென்மீது வாரி வாரி வீச நீ-கண்
பாரா யோ? வந்த சேரா யோ? கண்ணம்மா?   (நின்)

யாவு மே சுக முனிக் கொர் ஈசனா னெக்குன் தோற்றம்
மேவு மே-இங்கு யாவு மே,கண்ணம்மா!   (நின்)

54. மனப் பீடம்

பல்லவி
பீடத்தி லேறிக் கொண்டாள்-மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.

சரணங்கள்
நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு கூடக் கருது மொளி
மாடத்தி லேறி ஞானக்ச கூடத்தில் விளையாடி
ஓடத் திருந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்,
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து
வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தே
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
எண்ணத்துதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
பெண்ணி லரசியிவள் பெரிய எரி லுடையாள்
கண்ணுள் கணியெனக்குக் காத லிரதியிவள்
பண்ணி லினிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணு மிதழமுற ஊற்றினள் கண்ணம்மா  (பீடத்தி)

55. கண்ணம்மாவின் எழில்
 
ராகம்-செஞ்சுருட்டி தாளம்-ரூபகம்
 
பல்லவி
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ;
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் பூ;
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூர்யன்.

சரணங்கள்

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்;
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்;
திங்களை மடிய பாம்பினைப் போலே
செறிகுழல்,இவள் நாசி எட் பூ   (எங்கள்)

மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று;
மதரு வாய் அமிர்தம்;இத ழமிர் தம்;
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை
சாய லரம்பை; சதுர் அயிராணி.   (எங்கள்)

இங்கித நாத நிலைய மிருசெவி
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்;
மங்களக் கைகள் மஹர் சக்தி வாசம்;
வயி ராலிலை,இடை அமிர்த வீடு.   (எங்கள்)

சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்;
தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்;
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம்  (எங்கள்)

56. திருக் காதல்

திருவே! நினைக்காதல்கொண் டேனே-நினது திரு
வுருவே மறவாதிருந் தேனே-பல திசையில்
தேடித் திரிந்நிளைத் தேனே-நினக்கு மனம்
வாடித் தினங்களைதேனே-அடி,நினது
பருவம் பொறுத்திருந் தேனே-மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந்தேனே-இடை நடுவில்
பையச் சதிகள்செய் தாயே-அதனிலுமென்
மையல் வளர்தல்கண் நல் காயே-நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே-பெருமைகொண்டு
வையந் தழைக்கவைப் பேனே-அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே-அடியெனது
தேனே! என திரு கண்ணே!-எனையுகந்து
தானே வருந் திருப்-பெண்ணே!

57. திருவேட்கை

ராகம்-நாட்டை  தாளம்-சதுஸ்ர ஏகம்

மலரின் மேவு திருவே!-உன் மேல்
யைல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும்-காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்,
கலக லென்ற மொழியும்-தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும்-கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன் 1

கமல மேவு திருவே!-நின்மேல்
காதலாகி நின்றேன்.
குமரி நின்னை இங்கே-பெற்றோர்
கோடி யின்ப முற்றார்;
அமரர் போல வாழ்வேன்,-என்மேல்
அன்பு கொள்வை யாயின்
இமமய வெற்பின் மோத,-நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன். 2

வாணி தன்னை என்றும்-நினது
வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ?-என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வைய மெல்லாம்-நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம்-கண்ணன்
பொறிக ளாவ ரன்றோ? 3

பொன்னும் நல்ல மணியும்-சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்தன் வடிவிற்-பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ!-திருவே!
என்னு யிக்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத்-தழுவி
நிக ரிலாது வாழ்வேன். 4

செல்வ மெட்டு மெய்தி-நின்னாற்
செம்மை யேறி வாழ்வேன்;
இல்லை என்ற கொடுமை-உலகில்
இல்லை யாக வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல்-காட்டி
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே!-எனை நீ
என்றும் வாழ வைப்பாய். 5

58. திருமகள் துதி
 
ராகம்-சக்கரவாகம் தாளம்-திஸ்ரஏகம்

நித்தமுனை வேண்டி மனம்
நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே
பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே!திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய்,திருவே! 1

உன்னையன்றி இன்ப முண்டோ
உலகமிசை வேறே!
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே,திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்ன முடைய தாமரைப் பூ
மணிக்குள முள்ள சோலைகளும்,
அன்ன நறு நெய் பாலும்
அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன்,திருவே! 2

ஆடுகளும் மாடுகளும்
அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
விரைவினிலே தருவாய்!
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண் டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ
நாடு மணிச் செல்வ மேல்லாம்
நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
பெருங் களியே, திருவே! 3

59. திருமகளைச் சரண் புகுதல்
 
மாதவன் சக்தியினைச்-செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்;
போதுமிவ் வறுமையெலாம்-எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை-அன்னை
மாமக ளடியிணை சரண் புகுவோம். 1

கீழ்களின் அவமதிப்பும்-தொழில்
கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல்-செய்யும்
முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர்-பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்,
வீழ்கஇக்கொடு நோய்தான்-வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ? 2

பாற்கட லிடைப் பிறந்தாள்-அது
பயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப்பூ-அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள்-அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்;
வேற்கரு விழியுடையாள்-செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள். 3

நாரணன் மார்பினிலே-அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும்-பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும்-உடல்
வெயர்திட உழைப்பவர் தொழில்களிலம்
பாரதி சிரத்தினிலும்-ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள். 4

பொன்னிலும் மணிகளிலும் -நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,
கன்னியர் நகைப்பினிலும்-செழுங்
காட்டிலும் பொழிலிலம் கழனியிலம்,
முன்னிய தணிவினிலும்-மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி-அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறு வோம். 5

மண்ணினுட் கனிகளிலும்-மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
புண்ணிய வேள்வியிலும்-உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும்-நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்,
நண்ணிய தேவிதனை-எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். 6

வெற்றிகொள் படையினிலும்-பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும்-நல்
நாவலர் தேமொழித் தொடரினிலும்,
உற்றசெந் திருத்தாயை-நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம்-அவள்
கருணை நல் லொளிபெறக் கலிதவிர்ப்போம். 7

60. ராதைப் பாட்டு

ராகம்-கமாஸ்  தாளம்-ஆதி

பல்லவி
தேகி முதம் தேகி ஸ்ரீ ராதே, ராதே!

சரணங்கள்
ராக ஸமுத்ரஜாம்ருதே ராதே, ராதே!;
ராஜ்ஞீ மண்டல ரத்ந ராதே, ராதே!
போக ரதி கோடி துல்யே ராதே, ராதே!                                 (ஜய ஜய தேகி)
பூதேவி தப; பல ராதே, ராதே!
வேத மஹா மந்த்ர ரஸ ராதே, ராதே!
வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே, ராதே!
ஆதி பரா சக்தி ரூப ராதே, ராதே!
அத் யத்புத ச்ருங்காரமய ராதே, ராதே!  (தேகி)

தமிழ்க் கண்ணிகள்

காதலெனுந் தீவினிலே, ராதே, ராதே!-அன்று
கண்டெடுத்த பெண்மணியே! ராதே, ராதே!   (தேகி)

காதலெனுஞ் சோலையிலே ராதே, ராதே!-நின்ற
கற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே!  (தேகி)

மாதரசே!செல்வப் பெண்ணே, ராதே, ராதே!-உயர்
வானவர்க ளின்ப வாழ்வே ராதே, ராதே!   (தேகி)

61. கலைமகளை வேண்டுதல்

நொண்டிச் சிந்து

எங்ஙனம் சென்றிருந்தீர்?-என
தின்னுயிரே!என்தன் இசையமுதே!
திங்களைக் கண்டவுடன்-கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன்-இங்கு
காலையில் இரவியைத் தொழுதவுடன்,
பொங்குவீர் அமிழ்தெனவே-அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். 1

மாதமொர் நான்காய்நீர்-அன்பு
வறுமையி லேயெனை வீழ்த்திவீட்டீர்;
பாதங்கள் போற்றுகின்றேன் என்தன்
பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொ டெப்பொழுதும்-என்தன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர்-அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர். 2

கண்மணி போன்றவரே!-இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும்;-சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்,
வண்மையில் ஓதிடுவீர்!-என்தன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்;
அண்மையில் இருந்திடுவீர்!இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ! 3

தானெனும் பேய்கெடவே,-பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெ னும் ஒளி பெறவே,-நல்ல
வாய்மையி லேமதி நிலைத்திடவே.
தேனெனப் பொழிந்திடுவீர்!-அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்!-நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்! 4

தீயினை நிறுத்திடுவீர்!-நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே-உம்மை
மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்,
தாயென உமைப்பணிந்தேன்-பொறை
சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்.
வாயினிற் சபத மிட்டேன்;இனி
மறக்ககி லேன்.எனை மறக்ககிலீர்!      5             

62. வெள்ளைத் தாமரை

ராகம்-ஆனந்த பைரவி தாளம்-சாப்பு

1. வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்)

2. மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

3. வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.      (வெள்ளைத்)

4. தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம் (வெள்ளைத்)

5. செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)

6. வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர், (வெள்ளைத்)

7. ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.  (வெள்ளைத்)

8. ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!  (வெள்ளைத்)

9. இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்)

10. நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்)   

63. நவராத்திரிப் பாட்டு
(மாதா பராசக்தி)

பரா சக்தி
(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்?
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே 1

வாணி

வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே. 2

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார் தேவி,புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்.
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள்,ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. 3

பார்வதி

மலையிலே தான்பிறந்தாள்,சங்கரனை மாலையிட்டாள்,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,
நிலையில் உயர்ந்திடுவாள்,நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே. 4

64. மூன்று காதல்

முதலாவது-சரஸ்வதி காதல்

ராகம்-சரஸ்வதி மனோஹரி தாளம்-திஸ்ர ஏகம்

பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேன், அம்மா! 1

ஆடி வருகையிலே-அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில்
ஏடு தரித்திருப்பாள்-அதில்
இங்கித மாகப் பதம் படிப்பாள், அதை
நாடி யருகணைந்தால்-பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்:”இன்று
கூடி மகிழ்வ” மென்றால்-விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,அம்மா! 2

ஆற்றங் கரைதனிலே-தனி
யானதோர் மண்டப மீதினிலே,தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்;அதை
ஏற்று மனமகிழ்ந்தே-’ அடி
என்னோ டிணங்கி மணம்புரி வாய்” என்று
போற்றிய போதினிலே-இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்,அம்மா! 3

சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல-பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்-பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும்-வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேன்,அம்மா! 4

இரண்டாவது-லக்ஷ்மி காதல்

ராகம்-ஸ்ரீராகம் தாளம்-திஸ்ர ஏகம்

இந்த நிலையினிலே,அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள்-அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்தன்
சிந்தை திறைகொடுத்தேன்-அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்
அந்தத் தினமுதலா-நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேன்,அம்மா!

புன்னகை செய்திடுவாள்-அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்;சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள்-அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்;பின்னர்
என்ன பிழைகள் கண்டோ-அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள்;அங்கு
சின்னமும் பின்னமுமா-மனஞ்
சிந்தி யுளமிக நைந்திடு வேன்,அம்மா!

காட்டு வழிகளிலே-மலைக்
காட்சியிலே,புனல் வீழ்ச்சி யிலே,பல
நாட்டுப் புறங்களிலே-நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே,சில
வேட்டுவர் சார்பினிலே-சில
வீர ரிடத்திலும் வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள்வருவாள்-கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம்,அம்மா!

மூன்றாவது-காளி காதல்

ராகம்-புன்னகவராளி தாளம்-திஸ்ர ஏகம்

பின்னோர் இராவினிலே-கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே-களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா!-இவள்
ஆதி பராசக்தி தேவி யடா!-இவள்
இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!
செல்வங்கள் பொங்கிவரும்;-நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
விலலை யசைப்பவளை-இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை-நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!

65. ஆறு துணை
 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்-பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கணபதி ராயன்-அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே-குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

66. விடுதலை வெண்பா

சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும்-முக்தி நிலை
காண்போம் அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.  1

பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம்-நெறிகொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் திர்ந்த தறிவு.  2

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்,
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்!-குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.  3

வேலைப் பணிந்தால் விடுதலையாம்;வேல் முருகன்
காலைப் பணிந்தால் கவலைபோம்-மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்தி சக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்.  4

சுகத்தினைநான் வேண்டித் தொழுவேன் எப்போதும்
அகத்தினிலே துன்பற் றழுதேன்-யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
அறுதலைத் தந்தாள் அவள்.  5

67. ஐயம் உண்டு

ராகம்-கமாஸ் (தாளம்-ஆதி)

பல்லவி
ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)

அனுபல்லவி
பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்
பதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய)

சரணங்கள்
புயமுண்டு குன்றத்தைப் போலே-சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே;
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு,குறியுண்டு,குலசக்தி வெறியுண்டு (ஜய)

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை;
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு (ஜய)

அலைபட்ட கடலுக்கு மேலே-சக்தி
அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)

68. ஆரிய தரிசனம்  (ஓர் கனவு)
 
ராகம்-ஸ்ரீராகம் (தாளம்-ஆதி)

கனவென்ன கனவே-என்தன்
கண்துயி லாதுநனவினிலே யுற்ற (கன)

1. கானகம் கண்டேன்-அடர்
கானகங் கண்டேன்-உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன்.  (கன)

2. பொற்றிருக் குன்றம்-அங்கொர்
பொற்றிருக் குன்றம்-அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும் (கன)

புத்த தரிசனம்

3. குன்றத்தின் மீதே-அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)

4. பொன்மரத் தின்கீழ்-அந்தப்
பொன்மரத் தின்கீழ்-வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)

5. புத்த பகவன்-எங்கள்
புத்த பகவன்-அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன்.  (கன)

6. காந்தியைப் பார்த்தேன்-அவன்
காந்தியைப் பார்த்தேன்-உப
சாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன். (கன)

7. ஈதுநல் விந்தை!-என்னை!
ஈதுநல் விந்தை!-புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன்.    (கன)

8. பாய்ந்ததங் கொளியே;-பின்னும்
பாய்ந்ததங் கொளியே;-அருள்
தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)

கிருஷ்ணார்ஜுன தரிசனம்

9. குன்றத்தின் மீதே-அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன் (கன)

10. தேரின்முன் பாகன்-மணித்
தேரின்முன் பாகன்-அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)

11. ஓமென்ற மொழியும்-அவன்
ஓமென்ற மொழியும்-நீலக்
காமன்தன் உருவும்,அவ் வீமனதன் திறலும். (கன)

12. அருள் பொங்கும் விழியும்-தெய்வ
அருள் பொங்கும் விழியும்-காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் 
பொங்குந் திகிரியும்.   (கன)

13. கண்ணனைக் கண்டேன்-எங்கள்
கண்ணனைக் கண்டேன்-மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன்.  (கன)

14. சேனைகள் தோன்றும்-வெள்ளச்
சேனைகள் தோன்றும்-பரி
யானையுந் தேரும் அளவில் தோன்றும்.  (கன)    

15. கண்ணன்நற் றேரில்-நீலக்
கண்ணன்நற் றேரில்-மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)

16. விசையன்கொ லிவனே!-விறல்
விசையன்கொ லிவனே!-நனி
இசையும் நன்கிசையும் இங்கிவனுக் கிந்நாமம்  (விசை)

17. வீரிய வடிவம்!-என்ன
வீரிய வடிவம்!-இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை!  (விசை)

18. பெற்றதன் பேறே-செவி
பெற்றதன் பேறே-அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன்.  (கன)

19. வெற்றியை வேண்டேன்;-ஜய;
வெற்றியை வேண்டேன்;-உயிர்
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற)        

20. சுற்றங் கொல்வேனோ?-என்தன்
சுற்றங் கொல்வேனோ?-கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?” (பெற்ற)

21. மிஞ்சிய அருளால்-மித
மிஞ்சிய அருளால்-அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)

22. இம்மொழி கேட்டான்-கண்ணன்
இம்மொழி கேட்டான்-ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)

23. வில்லினை யெடடா!-கையில்
வில்லினை யெடடா!-அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்)

24. வாடி நில்லாதே;-மனம்
வாடி நில்லாதே;-வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்)

25. ஒன்றுள துண்மை-என்றும்
ஒன்றுள துண்மை-அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது.  (வில்)

26. துன்பமு மில்லை-கொடுந்
துன்பமு மில்லை-அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை.  (வில்)

27. படைகளுந் தீண்டா-அதைப்
படைகளுந் தீண்டா-அனல்
கடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்)

28. செய்தலுன் கடனே-அறஞ்
செய்தலுன் கடனே-அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே. (வில்)

69. சூரிய தரிசனம் ராகம்-பூபாளம்

சுருதி யின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப்புல வோர் பலர் தாமும்
பெரிது நின்தன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
பரிதி யே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 1

வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்வி பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்.
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 2

70. ஞாயிறு வணக்கம்

கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வாள்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்
உடல்ப ரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்
சுடரும் நின்தன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.  1

என்த னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்
நின்தன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா!
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா! 2

காதல்கொண்டனை போலும் மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள்,இதில் ஐயமொன்றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன். 3

71. ஞான பாநு

திருவளர் வாழக்கை,கீர்த்தி,தீரம்,நல் லறிவு,வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு. 1

கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம் வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்
நவமுறு ஞான பாநு நண்ணுக;தொலைக பேய்கள். 2

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம். 3

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும்,ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தினோடும்
நண்ணிடும் ஞான பாநு,அதனைநாம் நன்கு போற்றின். 4

72.  சோமதேவன் புகழ்

ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா! ஜய ஜய!

சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)

73. வெண்ணிலாவே!

எல்லை யில்லாததோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே!-விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே!
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே!-நின்தன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே!
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே!-(இந்த)
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே!
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே!-வந்து
கூடி யிருக்குது நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே!  1

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே!-அஃது
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
வெண்ணிலாவே!
காதலொருத்தி இளைய பிராயத்தள்
வெண்ணிலாவே!-அந்தக்
காமன்தன் வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே!
மீதெழும் அன்பின் விளையபுன் னகையினள்
வெண்ணிலாவே!-முத்தம்
வேண்டிமுன் காடு முகத்தி னெழிலிங்கு
வெண்ணிலாவே!
சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
வெண்ணிலாவே!-நின்
தன்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்?
வெண்ணிலாவே!  2

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே!-நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே!
மன்னு பொருள்க ளமைத்திலும் நிற்பவன்
வெண்ணிலாவே!-அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே!
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே!-இங்கு
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே!
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே!-(நல்ல)
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே!  3

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே!-நினைக்
காதல் செய்வார் நெங்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே!
சீத மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே!-நீ
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
வெண்ணிலாவே!
மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே!-நீ
முத்தி னொளிதந் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே!
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே!-நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
வெண்ணிலாவே!  4

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
வெண்ணிலாவே!-உன்தன்
மேனி யழகு மிகைபடக் காணுது
வெண்ணிலாவே!
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே!-மூடு
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
வெண்ணிலாவே!
சொல்லிய வார்த்தையில் நாணுற்றநன போலும
வெண்ணிலாவே!-நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே!
புல்லின் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே!
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
வெண்ணிலாவே!   5

74. தீ வளர்த்திடுவோம்! யாகப் பாட்டு

ராகம்-புன்னாகவராளி

பல்லவி
தீ வளர்த்திடுவோம்!-பெருந்
தீ வளர்த்திடுவோம்!

சரணங்கள்
1. ஆவியி னுள்ளம் அறிவி னிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம்-விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம்-களி
ஆவல் வளர்த்திடுவோம்-ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
செங்கதிர் வானவனை -விண்ணோர் தமைத்
தேனுக் கழைப்பவனைப்-பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்!   (தீ)

2. சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
தீமை யழிப்பவனை-நன்மை
சேர்த்துக் கொடுப்பவனைப்-பல
சீர்க ளுடையவனைப்-புவி
அத்தனையுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
ஆரியர் நாயகனை-உருத்திரன்
அன்புத் திருமகனை-பெருந்திர
ளாகிப் பணிந்திடுவோம்-வாரீர்!   (தீ)

3. கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை-எம்மைக்
காவல் புரிபவனைத்-தொல்லைக்
காட்டை யழிப்பவனைத்-திசை
எட்டும் புகழ்வளர்ந் தோங்கிட வித்தைகள்
யாவும் பழகிடவே-புவிமிசை
இன்பம் பெருகிடவே-பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்!   (தீ)

4. நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை-உயிர்
நீளத் தருபவனை-ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை-நித்தம்
அஞ்ச லங்சேலென்று கூறி எமக்குநல்
ஆண்மை சமைப்பவனைப் பல் வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப்-பெருந்திரள்
ஆகிப் பணிந்திடுவோம்-வாரீர்!  (தீ)

5. அச்சதைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச்-செய்கை
ஆற்று மதிச் சுடரைத்-தடை
யற்ற பெருந்திறலை-எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
ஏற்றதொர் நல்லறமும்-கலந்தொளி
ஏறுந் தவக்கனலைப்-பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்!  (தீ)

6. வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி யெழுந்தழலைக்-கவி
வாணர்க்கு நல்லமுதைத்-தொழில்
வண்ணந் தெரிந்தவனை-நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம்பழம் யாவினையும்-இங்கேயுண்டு
தேக்கிக் களிப்பவனைப்-பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்!   (தீ)

7. சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
தேவத் திருமகளிர்-இன்பந்
தேக்கிடுந் தேனிசைகள்-சுவை
தேறிடு நல்லிளமை-நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
முழுக்குடம் பற்பலவும்-இங்கேதர
முற்பட்ட நிற்பவனைப்-பெருந்திரள்
மொய்த்துப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ)

75. வேள்வித் தீ

ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-சதுஸ்ரஏகம்

ரிஷிகள் :எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ!தீ!-இந்நேரம்,
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ!தீ!-இந்நேரம்  1

அசுரர் : தோழரே!நம் ஆவி வேகச்
சூழுதே தீ! தீ!-ஐயோ!நாம்
வாழ வந்த காடு வேக
வந்ததே தீ!தீ!-அம்மாவோ!  2
 
ரிஷி: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
போந்து விட்டானே!-இந்நேரம்,
சின்ன மாகிப் பொய் யரக்கர்
சிந்தி வீழ்வாரே!-இந்நேரம்  3

அசு: இந்திராதி தேவர் தம்மை
ஏசி வாழ்ந்தோமே!-ஐயோ!நாம்,
வெந்து போக மானிடர்க்கோர்
வேத முண்டாமோ!-அம்மாவோ!  4

ரிஷி : வானை நோக்கிக் கைகள் தூக்கி
வளருதே தீ!தீ!-இந்நேரம்,
ஞான மேனி உதய கன்னி
நண்ணி விட்டாளே!-இந்நேரம்.  5

அசு: கோடி நாளாய் இவ்வனத்திற்
கூடி வாழ்ந்தோமே-ஐயோ!நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
பண்பிழந் தோமே!-அம்மாவோ!  6

ரிஷி:காட்டில் மேயும் காளை போன்றான்
காணுவீர் தீ!தீ!-இந்நேரம்,
ஓட்டி யோட்டிப் பகையை யெல்லாம்
வாட்டுகின்றானே!-இந்நேரம்.  7

அசு:வலியி லாதார் மாந்த ரென்று
மகிழ்ந்து வாழ்ந்தோமே-ஐயோ!நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
கண்டு கொண்டாரே!-அம்மாவோ!  8

ரிஷி: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
வாய்திறந் தானே!-இந்நேரம்,
மலியு நெய்யுந் தேனுமுண்டு
மகிழ வந்தானே!-இந்நேரம்.  9

அசு: உயிரை விட்டும் உணவை விட்டும்
ஓடி வந்தோமே!-ஐயோ!நாம்
துயிலுடம்பின் மீதிலுந் தீ
தோன்றி விட்டானே!-அம்மாவோ!   10

ரிஷி: அமரர் தூதன் சமர நாதன்
ஆர்த் தெழுந்தானே!-இந்நேரம்,
குமரி மைந்தன் எமது வாழ்விற்
கோயில் கொண்டானே!-இந்நேரம்.   11

அசு: வருணன் மித்ரன் அர்ய மானும்
மதுவை யுண்பாரே-ஐயோ!நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
பின்னி மாய்வோமே!-அம்மாவோ! 12

ரிஷி: அமர ரெல்லாம் வந்து நம்முன்
அவிகள் கொண்டாரே!-இந்நேரம்,
நமனு மில்லை பகையு மில்லை
நன்மை கண்டோமே!-இந்நேரம்.  13

அசு: பகனு மிங்கே யின்ப மெய்திப்
பாடுகின்றானே-ஐயோ!நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
பொங்கல் கண்டீரோ!-அம்மாவோ! 14

ரிஷி:இளையும் வந்தாள் கவிதை வந்தாள்
இரவி வந்தானே!இந்நேரம்,
விளையுமெங்கள் தீயினாலே
மேன்மையுற்றோமே!-இந்நேரம்.  15

ரிஷி:அன்ன முண்பீர் பாலும் நெய்யும்
அமுது முண்பீரே!-இந்நேரம்,
மின்னி நின்றீர் தேவ ரெங்கள்
வேள்வி கொள்வீரே!-இந்நேரம்.  16

ரிஷி: சோமமுண்டு தேவர் நல்கும்
ஜோதி பெற்றோமே!-இந்நேரம்,
தீமை தீர்ந்தே வாழி யின்பஞ்
சேர்ந்து விட்டோமே!-இந்நேரம்.  17

ரிஷி: உடலுயிர்மே லுணர்விலும் தீ
ஓங்கி விட்டானே!-இந்நேரம்,
கடவுளர் தாம் எம்மை வாழ்த்திக்
கை கொடுத்தாரே!-இந்நேரம்.  18

ரிஷி:எங்கும் வேள்வி அமர ரெங்கும்
யாங்கணுந் தீ!தீ!-இந்நேரம்,
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
சார்ந்து நின்றோமே!-இந்நேரம்.  19

ரிஷி: வாழ்க தேவர்! வாழ்க வேள்வி!
மாந்தர் வாழ்வாரே!-இந்நேரம்,
வாழ்க வையம்! வாழ்க வேதம்!
வாழ்க தீ!தீ!தீ!-இந்நேரம்.  20
 
76. கிளிப்பாட்டு
 
திருவப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து,
வருக வருவதென்றே-கிளியே!-மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு தியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும்-கிளியே!-கவலைப்படலாகுமோ?

துன்ப நினைவு களும் சோர்வும் பயமு மெல்லாம்,
அன்பில் அழியுமடீ!-கிளியே!-அன்புக் கழிவில்லை காண்.

ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண்டுலகில்-கிளியே!-அழிவின்றி வாழ்வோ மடீ!

தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால்-கிளியே!-நெருங்கித் துயர் வருமோ?

77. யேசு கிறிஸ்து
 
ஈசன் வந்து லுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேசமா மரியா மக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்;
தேசத் தீர்!இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்;
நம்அ கந்தையை நாம்கொன்று விட்டால். 1

அன்புகாண் மரியா மக்த லேநா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
போற்று வாள் அந்த நல்லுயிர் தன்னை;
அன்பெனும் மரியா மக்த லேநா
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.  2

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்,
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்;
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து;
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃத பயின்றிட லாகும். 3

78. அல்லா

பல்லவி
அல்லா,அல்லா,அல்லா!

சரணங்கள்
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே!

நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லா லும்மனத்தாலுந்தொடரொணாதபெருஞ் சோதி!  (அல்லா......,)

கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாத ராயினும் தவ மில்லாதவ ராயினும்
நல்லாருரை நீதி யின்படி நில்லாதவ ராயினும்
எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன் (அல்லா......,)

 
மேலும் தெய்வப் பாடல்கள் »
temple

1. விநாயகர் நான்மணி மாலை

வெண்பா
1. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் ... மேலும்

 
temple

26. சிவசக்தி புகழ்

ராகம்-தன்யாசி    தாளம்-சதுஸ்ர ஏகம்

ஓம், சக்திசக்தி சக்தியென்று ... மேலும்

 
temple

1. அச்சமில்லை

பண்டாரப் பாட்டு
 
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ... மேலும்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.