அயோத்தி ராமர் கோவிலுக்கு 115 நாடுகளில் இருந்து புனித நீர்



 புதுடில்லி;உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதி மற்றும் கடல் நீர் வரவழைக்கப்பட்டுள்ளன. உலகமே ஒரு குடும்பம் என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்து உள்ளது, என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள அயோத்தியில் ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. இந்தக் கோவிலின் கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்காக 115 நாடுகளில் ஓடும் நதி மற்றும் கடல் நீர் வரவழைக்கப்பட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான விஜய் ஜாலி நடத்தும் டில்லி கல்வி வட்டம் என்ற அரசு சாரா அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.சிறிய குடுவைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த நீர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டில்லியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பின் பொதுச் செயலர் சம்பக் ராய் மற்றும் பல நாடுகளின் துாதர்களும் பங்கேற்றனர்.அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:வசுதேவ குடும்பகம் எனப்படும் உலகமே ஒரு குடும்பம் என்பதை நம் நாடு மிகவும் உறுதியாக பின்பற்றி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளதற்கு பாராட்டுகள். கோவில் கட்டுமானம் முடிவதற்குள் உலகில் மீதமுள்ள 77 நாடுகளில் இருந்தும் நீரை கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். ராமருக்கு கோவில் என்பது நம் நாட்டில் ஒவ்வொருவரும் பெருமைப்படும் விஷயம்.ஜாதி, மதம், மாநிலம் என்ற பாகுபாடு இல்லாமல் இருப்பதே நம் நாட்டின் பாரம்பரியம். இவ்வாறு அவர் கூறினார்.ராமர் பட்டாபிஷேகம் நடந்தபோது உலகின் பல கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் பிறந்த இடத்தில் அமைய உள்ள கோவிலில் உலகெங்கிலும் இருந்து நீர் வரவழைக்கப்பட்டுள்ளது, என, சம்பக் ராய் குறிப்பிட்டார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்