ஐதாராபாத்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ராமருக்கு தங்க பாதுகையை காணிக்கை படைக்க ஐதராபாத்தைச்சேர்ந்த ராம பக்தர் 8 ஆயிரம் கி.மீ., பாதயாத்திரையாக அயோத்தி நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழா நெருங்கி வருவதால், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஏற்பாடுகளை ஸ்ரீராமர் கோவில் கட்டுமான குழு தலைவருமான நிருபேந்திர மிஸ்ரா உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும்அவரது அரசும் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச்சேர்ந்த சல்லா ஸ்ரீனிவாச சாஸ்திரி 65 என்ற ராமபக்தர், ரூ. 65 லட்சம் செலவில் ராமருக்கு தங்க பாதுகையை (தங்க காலணி) காணிக்கையாக செலுத்த உள்ளார். இதற்காக கடந்த (2023) ஆண்டு ஜூலை மாதம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து துவங்கி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி நோக்கி
8 ஆயிரம் கி.மீ. பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று அயோத்தி சென்றடைந்து தங்க பாதுகையை முதல்வர் யோகி ஆதி்த்யநாத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சல்லா ஸ்ரீனிவாச சாஸ்திரி கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றேன். “எனது தந்தை தீவிர ஹனுமன் பக்தர் . அயோத்தியில் கரசேவை நடந்த போது பங்கேற்றார். அயோத்தியில் பகவான் ஸ்ரீராமருக்கு கோயில் அமைவதை பார்க்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. ஆனால், அவர் இப்போது இல்லை. எனவே அவரது கனவை நனவாக்க விரும்புகிறேன். ஸ்ரீ ராமர் வனவாசத்தின்போது அயோத்தியிலிருந்து ராமேசுவரம் சென்ற வழியை ஆராய்ச்சி செய்து கண்டறிந்தேன். அவ்வழியே எனது பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறேன். ஏற்கனவே ராமர் கோயில் கட்டுமான பணிக்கு ஐந்து வெள்ளி செங்கற்களை நன்கொடையாக வழங்கினேன். தற்போது பஞ்ச உலோகங்களில் தயாரிக்கப்பட்ட பாதுகையை அயோத்தி ஸ்ரீராமருக்கு காணிக்கையாக கொடுக்க கொண்டு செல்கிறேன்.இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அயோத்தியை அடைந்துவிடுவேன் என்றார்.