அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலை; வடிவமைத்தவர் யார் தெரியுமா?



மைசூரு, அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக, மைசூரு சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் வடிவமைத்த பலராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

குழந்தை சிலை; இந்நிலையில், கோவிலின் கரு வறையில் பிரதிஷ்டை செய்வதற்காக, மூன்று சிலைகள் தயார் செய்யப் பட்டன. அதில், 5 வயதுடைய குழந்தை வடிவிலான ஒரு சிலையை, அறக்கட்டளை நிர்வாகிகள், ஓட்டெடுப்பு வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன் தேர்வு செய்தனர். இந்த சிலை, கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் வடிவமைத்தது. ராமரின் குழந்தைப் பருவம், குறும்புத்தனம், கம்பீரத்தை சித்தரிக்கும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தான், அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

5 தலைமுறை; இத்தகைய சிலையை வடிவமைத்த மைசூரின் அருண் யோகிராஜ் குடும்பம், 200 ஆண்டுகளாக சிற்பங்கள் செதுக்குவதில் சிறந்து விளங்குகிறது. அவரது தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா என ஐந்து தலைமுறையாக பரம்பரை தொழிலாக செய்து வருகின்றனர். தந்தை யோகிராஜ் மிக பெரிய சிற்ப கலைஞராக விளங்கியவர். தாத்தா பசவண்ணா, மைசூரு உடையார் மன்னர் வம்சத்தில் ஆஸ்தான சிற்பியாக இருந்தவர். எம்.பி.ஏ., முதுகலை படிப்பு முடித்த அருண் யோகிராஜ், தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஆனால், சிற்ப கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டதால், பணியை துறந்து பரம்பரை தொழிலில் ஈடுபட்டார்.

ஆதி சங்கராச்சாரியார்; அந்த வகையில், 2008 முதல் சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். இதுவரை 1,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு சிலைகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக, இவர் வடிவமைத்த கேதார்நாத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியார் சிலை, புதுடில்லியின் இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலைகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. அப்போதே, அவரை நேரில் அழைத்து பிரதமர் பாராட்டினார். இது குறித்து, அருண் யோகிராஜ் கூறுகையில், ராம லல்லா சிலை வடிவமைக்க வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம், என்றார். நிறைய புராண புத்தகங்களை ஆய்வு செய்து வடிவமைத்துள்ளார். சிலை படத்தை காண்பித்தார். மிகவும் நேர்த்தியாக உள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவரது தந்தை இல்லை என்பது வருத்தமாக உள்ளது.

- சரஸ்வதி, அருண் யோகிராஜ் தாய்

என் கணவர், ஆறு மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை. அயோத்தியிலேயே பலராமர் சிலை வடிவமைப்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆறு மாத கை குழந்தை இருந்தும், அதை பார்க்க கூட வரவில்லை. அவர் வடிவமைத்த சிலை தேர்வு செய்யப்படும் என்ற நம்பிக்கை இருந்தது.

விஜேதா, அருண் யோகிராஜ் மனைவி

உருவான பலராமர்; அருண் யோகிராஜ் அண்ணன் சூரிய பிரகாஷ் கூறியதாவது:மைசூரு மாவட்டம், ஹெச்.டி.கோட்டில் கிடைக்கும் கிருஷ்ண கல்லில் பலராமர் சிலையை என் தம்பி வடிவமைத்து உள்ளார். பொதுவாக 850 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் இரும்பும் கரைந்து விடும்.ஆனால், இந்த வகை சிலை மீது ஆசிட் வீசினாலும் ஒன்றும் ஆகாது; வெடிக்காது. மழை, காற்று, வெயில் எதுவானாலும் ஒன்றும் ஆகாது.மைசூரு அரண்மனையில் உள்ள சிலைகளும், கிருஷ்ண கல்லால் வடிவமைக்கப்பட்டவை தான். ஹெச்.டி.கோட், ஹாசனில் மட்டுமே இந்த வகை கற்கள் கிடைக்கும். மிகவும் கெட்டியாக இருப்பதால், சிலை செதுக்குவது கடினமான பணியாகும்.அனைத்து பருவ காலத்திலும் ஒரே மாதிரியான அனுபவத்தை தரும் என்பதால், வெளிநாடுகளில் வீட்டின் மேற்கூரைக்கு இந்த கல்லை பயன்படுத்துகின்றனர். இந்த கற்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்