அயோத்தியில் இருந்து காசிக்கு ராமஜோதி, சரயு நதி புனித நீர் எடுத்து வரும் முஸ்லிம் பெண்கள்



வாரணாசி: ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, ‛ கடவுள் ராமர் நமது மூதாதையர். அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏ.,வும் ஒன்று தான் என்ற செய்தியை பரப்பும் நோக்கில் அயோத்தியில் இருந்து காசிக்கு, முஸ்லிம் மதத்தை சேர்ந்த நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோர் ராமஜோதியை எடுத்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.,22ல் நடைபெற உள்ளது. இதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ‛கடவுள் ராமர் நமது முன்னோர், இந்தியர்களின் டிஎன்ஏ.,வும் ஒன்றுதான் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க, நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோர் ராமஜோதியை எடுத்து வருகின்றனர். இதற்காக அவர்கள், இன்று அயோத்தி செல்கின்றனர். அங்கு, இவர்களது பயணத்தை பாடல்புரி மடத்தின் தலைவர் பாலக்தாஸ் மற்றும் ஓம் சவுத்ரி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைக்கின்றனர். ராமஜோதியை ஷம்பு தேச்சாரியார் என்பவர், நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோரிடம் ஒப்படைக்கிறார். ராமஜோதியுடன், அவர்கள் நாளை காசியை வந்தடைகின்றனர். வரும் போது அயோத்தி மண் மற்றும் சரயு நதி புனித நீரையும் இருவரும் எடுத்து வருகின்றனர்.

யார் இவர்கள்; நஸ்னீன் அன்சாரி பனாரஸ் ஹிந்து பல்கலையில் பட்டம் பெற்றவர். ஹனுமன் சாலிசா மற்றும் ராமசரிதையை உருதுவில் மொழி பெயர்த்துள்ளார். பாடல்புரி மடத்தின் தலைவர் பாலக் தாசை தனது குருவாக ஏற்றுக்கொண்ட இவர், ஒற்றுமை மற்றும் அமைதிக்காக அயராது உழைத்து வருகிறார். சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ‛ராம்பந்த் என்ற அமைப்புடன் இணைந்து ராமபக்தியை பரப்பி வருகிறார்.

அவர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் ராமர் நமது மூதாதையர். ஒருவர் தனது மதத்தை மாற்றியிருக்கலாம். ஆனால், மூதாதையரை மாற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கு மெக்கா புனித தலம் போல், ஹிந்துக்களுக்கும், இந்திய கலாசாரத்தை நம்புபவர்களுக்கும் அயோத்தி புனித தலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நஜ்மா பர்வீன், பனாரஸ் ஹிந்து பல்கலையில், பிரதமர் மோடி பற்றி ஆய்வு செய்து பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக ராம பக்தியை பரப்பும் பணியில் உள்ளார். வாரணாசியை சேர்ந்த ஹிந்து முஸ்லிம் மையம் மூலம் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார். நஸ்னீன் அன்சாரியும், நஜ்மா பர்வீனும் முத்தலாக் முறைக்கு எதிராக போராடியவர்கள். ஏராளமான முஸ்லிம் பெண்களின் ஆதரவை பெற்றவர்கள். ராமநவமி மற்றும் தீபாவளி பண்டிகை அன்று நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களுடன் இணைந்து ராம ஆரத்தி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

ராமபந்த் அமைப்பின் தலைவர் ராஜிவ் ஸ்ரீகுருஜி கூறுகையில், நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோர் அயோத்தியில் இருந்து ராமஜோதியை கொண்டு வருவார்கள். ஜவுன்பூர் முதல் வாரணாசி வரை, பல இடங்களில் ராமஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். நாளை, சுபாஷ் பவன் என்ற இடத்தில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ராமஜோதியை வரவேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்