அயோத்தி ராமர் தரிசனம்; தினமும் 50000 பக்தர்களை அனுமதிக்க முடிவு.. 500 ரயில்கள் சேவை!அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும், 22ம் தேதி நடக்க உள்ளது. அதன்பின், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். இதற்காக தினமும் 50,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு, 500 ரயில்களின் சேவையை துவங்க, ரயில்வே திட்டமிட்டுஉள்ளது. இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும், 22ம் தேதி நடக்க உள்ளது. அதன்பின், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, ரயில் போக்குவரத்து இணைப்பு வசதியை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டு உள்ளது. சிறிய நிலையமாக இருந்த அயோத்தி தாம் ரயில் நிலையம், முதற்கட்டமாக, 240 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மூன்று மாடிகள் உடைய இந்த புதிய ரயில் நிலையத்தையும், ஆறு, வந்தே பாரத் ரயில்களின் சேவையையும், குறைந்த கட்டணத்தில் பயணிக்க இரண்டு, அம்ரித் பாரத் ரயில்களின் சேவையையும், பிரதமர் மோடி, கடந்த, 30ம் தேதி துவங்கி வைத்தார். இந்த புதிய ரயில் நிலையத்தில், 12 லிப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், உடைகள் மாற்றும் அறைகள், குழந்தைகளுக்கான கவனிப்பு அறைகள், காத்திருப்பு அறைகள் என, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுஉள்ளன.

சொகுசு பயணம்; அம்ரித் பாரத் ரயில்கள், சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை. வந்தே பாரத் ரயிலுக்கு இணையான வேகமும் பாதுகாப்பும் உடையது.இந்த ரயிலின் இருபுறமும் இன்ஜின் கொண்டு இயக்கப்படுவதால், வந்தே பாரத்துக்கு இணையாக, மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் செல்லும்.ஒரே நேரத்தில், 1,834 பேர் பயணிக்கும் வகையில், 12 முன்பதிவு பெட்டிகள் உட்பட, 22 எல்.எச்.பி., பெட்டிகள் இருக்கும். தற்போது, தர்பங்கா -- அயோத்தி தாம் -- ஆனந்த் விகார்; மால்டா -- பெங்களூரு இடையே, அம்ரித் பாரத் ரயில் இயக்கப்படுகிறது. மொபைல் போன், தண்ணீர் பாட்டில் வைக்க பிரத்யேக ஸ்டாண்ட், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக கழிப்பறை, கண்காணிப்பு கேமரா, பயணியர் தகவல் தொடர்பு அமைப்பு, புதுமையான வெளிப்புற தோற்றம், நவீன ஓட்டுனர் அறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதிர்வின்றி, சொகுசாகவும் விரைவாகவும் பயணம் செய்ய முடிகிறது என, பயணியர் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

தினசரி சேவை; ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் ரயில் நிலையத்தில், அடுத்தகட்டமாக, விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல, புதிய விமான நிலையமும் இங்கு திறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான சேவை துவக்கப்பட உள்ளது. இருப்பினும், அதிகஅளவில் மக்கள் செல்ல, ரயில் போக்குவரத்து இருக்கிறது. தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி தாம் ரயில் நிலையத்தில், ஒரு நாளைக்கு, 100 ரயில் சர்வீஸ்களை இயக்க முடியும்.எனவே, நாடு முழுதும் இருக்கும், 16 ரயில்வே மண்டலங்கள் சார்பில், அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்தியை இணைக்கும் வகையில், 500க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

இதில், 200க்கும் மேற்பட்ட ரயில்கள், தினசரி சேவையாக இருக்கும். மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில் நகரங்கள், மாநகரங்களில் இருந்து, இந்த ரயில்கள் இயக்கப்படும். இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்ய, ரயில்வே அதிகாரிகள், மண்டலங்கள் வாரியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தெற்கு ரயில்வே சார்பில், சென்னை, நாகர்கோவில், மதுரை, கோவை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து அயோத்திக்கு, ஆறு விரைவு ரயில்களின் சேவையை துவங்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆன்மிக சுற்றுலா தலைமையிடம்!

அயோத்தி மக்கள் கூறியதாவது: அயோத்தி நகரம், பெரிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சதுர அடி நிலம் 500 ரூபாய் வரை இருந்தது. தற்போது, 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது, ரயில் நிலைய மேம்பாடு, விமான நிலையம் திறப்பு, சாலைகள் விரிவாக்கம் போன்ற பல்வேறு திட்டப் பணிகள், பல ஆயிரம் கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால், அயோத்தி இந்தியாவின் ஆன்மிக சுற்றுலா தலைமையிடமாக மாறும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்