அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வீட்டில்... விளக்கேற்றுங்கள்!அயோத்தி :அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை, உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும், ஸ்ரீ ராமர் ஜோதி என்ற பெயரில் வீட்டில் தீபம் ஏற்றி, தீபாவளியை கொண்டாடுவது போல கொண்டாட வேண்டும். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வேண்டும் என்பது, அனைவரின் விருப்பமாக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சிலருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 23க்கு பின், அயோத்திக்கு பயணிக்க மக்கள் திட்டமிட வேண்டும், என, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. ஜன., 22ல் இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ராமர் கோவில் கட்டுமான பணிகளும், அயோத்தியில் வளர்ச்சிப் பணிகளும் வேகம் எடுத்துள்ளன.

புதிய உச்சம்; அயோத்திக்கு நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்த நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 15,700 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அடிக்கல் நாட்டினார். இதில், அயோத்தியில் மட்டும், 11,100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும். அத்துடன், மறு வடிவமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். மேலும், வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்களின் சேவைகளையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், அது தன் பாரம்பரியத்தை கவனிக்க வேண்டும்.

வளர்ச்சியும், பாரம்பரியமும் நாட்டை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும். இன்றைய இந்தியா, பழமை மற்றும் நவீனத்துவத்துடன் முன்னோக்கி நகர்கிறது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் நம் நாட்டை, 21ம் நுாற்றாண்டில் முன்னோக்கி அழைத்துச் செல்லும். நாட்டின் வரலாற்றில் டிச., 30ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்தது. 1943ல், இதே நாளில் தான் அந்த மான் தீவுகளில் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுதந்திரத்தை பிரகடனம் செய்தார். சுதந்திர இயக்கத்துடன் தொடர்புடைய இந்த புனிதமான நாளில், தற்போது நாம் அமிர்த கால திட்டத்தின் உறுதியை முன்னெடுத்துச் செல்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக கடவுள் ராமர் கூடாரத்தின் கீழ் வாசம் புரிந்து வந்தார்.தற்போது, கடவுள் ராமருக்கு மட்டுமல்ல; நான்கு கோடி ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கிடைத்துள்ளன. உ.பி.,யின் முழு வளர்ச்சிக்கும், கலங்கரை விளக்கமாக அயோத்தி திகழும். அயோத்திக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ரயில்; அயோத்தி விமான நிலையத்திற்கு, மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்பட்டது பாராட்டத்தக்கது. அவரது ராமாயணம், நம்மை கடவுள் ராமருடன் இணைக்கும் அறிவின் பாதை. அயோத்தி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு வரும் பயணியரின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும். நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில், காசியில் இருந்து இயங்கியது. தற்போது நாட்டில், 34 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வளர்ச்சியை பாரம்பரியத்துடன் இணைப்பதில், வந்தே பாரத் ரயில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

காசி, கத்ரா, உஜ்ஜயினி, புஷ்கர், திருப்பதி, ஷீரடி, அமிர்தசரஸ், மதுரை போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் கிடைத்தது போல, தற்போது அயோத்திக்கும் வந்தே பாரத் ரயில் பரிசாக கிடைத்துள்ளது. அயோத்தியில் ஜன., 22ம் தேதி நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்ற வரலாற்று நிகழ்ச்சியை, உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்கு உங்களை போலவே, நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம், மிகவும் அதிர்ஷ்டவசமாக, நம் அனைவரின் வாழ்விலும் வந்துள்ளது. நாட்டுக்காக புதிய தீர்மானத்தை எடுத்து, புதிய ஆற்றலை நிரப்ப வேண்டும்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வேண்டும் என்பது, நாட்டு மக்கள் அனைவரின் விருப்பமாக இருந்தாலும், பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட சிலருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில், ஸ்ரீ ராமர் ஜோதி என்ற பெயரில் தீபம் ஏற்ற வேண்டும். ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தீபாவளி போல கொண்டாட வேண்டும். ஜன., 23ம் தேதிக்கு பின் அயோத்தி பயணத்திற்கு மக்கள் திட்டமிட வேண்டும். 550 ஆண்டுகள் காத்திருந்தோம்; சில நாட்கள் காத்திருக்க மாட்டோமா? ஜன., 14 முதல், நாடு முழுதும் உள்ள புனித யாத்திரை தலங்களில், துாய்மைக்கான மிகப்பெரிய பிரசாரம் துவக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்