அயோத்தியில் குவியும் பக்தர்கள்; கோவில் தரிசன நேரம் நீட்டிப்பு



அயோத்தி: உத்தர பிரதேசம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில், தரிசனத்துக்காக லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளதால், தரிசன நேரம் நான்கு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது.

நீண்ட வரிசை; இதன் கும்பாபிஷேகம், கடந்த 22ம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்ததை அடுத்து, 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, உத்தர பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ராமரை தரிசிக்க அயோத்தியில் குவிந்துள்ளனர். முதல்நாளில் ஐந்து லட்சம் பேர் வரை தரிசனம் செய்ததாக கூறப்படும் நிலையில், இரண்டாம் நாளான நேற்று முன்தினம் ஏழு லட்சம் பேர் வரை ராமரை வழிபட்டதாக சொல்லப்படுகிறது. முழு பவுர்ணமி தினமான நேற்றும் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து ராமரை தரிசனம் செய்தனர்.

தொலைதுாரத்தில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, காலை 7:00 மணிக்கு துவங்கும் முதல் தரிசனம், ஒரு மணி நேரம் முன்னதாக 6:00 மணிக்கே நேற்று துவங்கியது. அதேபோல் இரவு 7:00 மணிக்கு பதிலாக 10:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், அயோத்தியை சுற்றியுள்ள பஸ்தி, கோண்டா, அம்பேத்கர்நகர், பராபங்கி, சுல்தான்பூர், அமேதி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், கோவிலுக்கு முன்னதாக 15 கி.மீ., தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை உள்ள வாகனங்கள் மட்டுமே அயோத்தி நகருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய பிரபலங்கள்; நாளுக்குநாள் அதிகரித்து வரும் நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி கோவிலுக்கு வரும் முக்கிய பிரபலங்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாக கோவில் அறக்கட்டளை அல்லது மாநில அரசிடம் தெரிவித்து விட்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல், வரும் மார்ச் மாதம் வரை அயோத்தி கோவிலுக்கு செல்ல வேண்டாம் என தன் அமைச்சரவை சகாக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுஉள்ளார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்