Special supplement · Part 2 · page 49 · 104 / 159
மங்கலம் அருள்வாள் மதுரை மீனாட்சி
அழும் குரலுடன் அவனியிற் பிறந்தபோதும்
எழும் விருட்சமாய் என்றென்றும் உயர்ந்து உனைத்
தொழும் மாந்தர்க்கெல்லாம் மங்கலமியாவும்
அருள்வாய் அன்னை மீனாட்சி தாயே.
விடமுண்டு விண்ணவர் துயர் களைந்த
சிவனுக்கு நிகராய் நித்தம் அருளும்
அகிலம் போற்றும் அங்கயற் கண்ணி
அன்னை மீனாட்சியே சரணம் உன்பாதம் தாயே!
உயர்வும் உன்னதமும் வாழ்வில் நாம்பெற
ஈகை உள்ளமும் புகழும் தொய்வில்லா ஏற்றமும்
அருள்வாள் அன்னை மீனாட்சியை நித்தம்
வணங்கி மகிழ்ந்து பக்தியுடன் கை தொழுவார்க்கே
காமம் தொலையவேண்டும் நெஞ்சில் உன்
நாமம் நிலைக்க வேண்டும் இவ்வுலகில் சேமமுடன்
யானும் வாழ்ந்தேன் என்றிராமல்
யாவும் நின்னமயமாய் காண வேண்டும்
அன்னை மீனாட்சி தாயே.
சங்கடம் தீர்ப்பாள் சந்தோஷம் தருவாள்
அங்கதன் வரும் பொழுது அச்சம் அகற்றுவாள்
மங்கலம் அருள்வாள் மனபயத்தை நீக்குவாள்
எங்கள் அன்னை மீனாட்சி தாயே.
உருளும் தேரில் உலாவந்து அடியார்மன
இருள் நீக்கி இன்பம் பெருக்கி ஈடில்லா
அருள் தரும் அன்னையாம் மீனாட்சி அருளை
பொருளாய் கொள்வார் புண்ணியரே.
உழுவதும், உழைப்பதும் உண்பதும் உறங்குவதும்
வாழுவதும் எழுவதும் அழுவதும் சிரிப்பதும்
தொடுவதும் தோற்பதும் தொலைப்பதும் கிடைப்பதும்
அனைத்தும் நின் அருளின் செயலென்று எண்ணி வியந்தேன்
அன்னை மீனாட்சி தாயே
குலம் வளர்ப்பாள் குறைகள் களைவாள்
நலம் அருள்வாள் நவநிதியும் தருவாள்
சக்தி மிகுந்தவளாம் அன்னை மீனாட்சியை
வலம் வந்து வணங்குவோர் தமக்கே!
— எஸ்.ராஜமோகன், விருதுநகர் · 82202 12189