Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 50 · 105 / 159

வாசகர் பார்வையில் மீனாட்சி

காணக் கண்கோடி வேணும்

வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் செப்.17, 2026ல் நடக்கிறது. உலக புகழ் மிக்க சிவததலம் மீனாட்சியம்மன் கோயில். இங்கு மீனாட்சியம்மனும், சொக்கநாதரும் அருள்புரிகின்றனர். ஆயினும் முதல் பூஜை மீனாட்சியம்மனுக்கே. அம்மனின் சிலை மரகத கல்லால் ஆனது. மீனாட்சி அம்மன் கண்கள் மீன் போல இருக்கும். தன்னுடைய இரக்கம் மிக்க கண்களால் பக்தர்களுக்கு அருள்புரிவதால் அம்மன் அங்கயற்கண்ணி என அழைக்கப்படுகிறாள். கட்டிடக்கலை இக்கோயிலின் தனிச் சிறப்பு. இங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் கலைநயமிக்கது. இசைத் தூணை தட்டினால் இசை கேட்கும். கோயில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை தீர்த்தக்குளம் தெய்வீகம் மிக்கது. ஆண்டுமுழுதும் திருவிழா மீனாட்சி சொக்கருக்கு நடக்கிறது. சித்திரையில் அம்மனும், சுவாமியும் வாகனத்தில் வீதி உலா வரும் அழகைக் காண கண்கள் கோடி வேண்டும். இதில் திருக்கல்யாணம், தேரோட்டம் முக்கிய நிகழ்வாகும்.

— வத்சலாரமணி, தபால்தந்திநகர், மதுரை

எங்கள் மீனாட்சி

மதுரைக்கு மாநகருக்கு வரும் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என ஆசைப்படுவார்கள். மீனாட்சி, சொக்கநாதரை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும். திருவாலவாய், சிவராஜதானி, பூலோக கயிலாயம், நான்மாடக்கூடல் என புராணங்களில் இத்தலம் அழைக்கப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோயில். 16,17 நூற்றாண்டில் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் புதுப்பிக்கப்படது. கோயிலுக்குள் செல்ல 5 நுழைவு வாயில்கள் உள்ளன. பிரமாண்டமான ராஜ கோபுரம், கலைநயமிக்க மண்டபங்கள் உள்ளன. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்கள் உள்ளன. இங்குள்ள சிலைகளின் அமைப்பு இயல், இசை, நாடகத்தோடு தொடர்பு கொண்டதாகும். மீனாட்சி அம்மன் சிலை மரகத கல்லால் ஆனது. கடம்ப மரத்தில் தோன்றிய சுயம்பு மூர்த்தியாக சொக்கநாதர் காட்சி தருகிறார். மீனாட்சி அம்மனுக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட முக்குறுணி விநாயகர் சன்னதி இங்குள்ளது. வருடத்தில் 274 நாட்கள் திருவிழா நடக்கிறது. மீனாட்சி அம்மனுக்கு ஆடி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதத்தில் தனி திருவிழா நடக்கிறது. மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகத்தில் பாண்டிய மன்னர்களோடு தொடர்புடைய வேப்பம்பூ மாலையை அம்மனுக்கு சூட்டுகின்றனர். இங்கு நடக்கும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. நவக்கிரகங்களில் புதனுக்குரியவராக சொக்கநாதர் இருக்கிறார். சிறப்பு மிக்க கும்பாபிஷேக விழாவில் மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசித்து மகிழ்வோம்.

— இ.நாகராஜன், சாத்தூர். 90878 48868

சொல்லும் பொருளுமாய்...

மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு அந்த காலத்தில், சொக்கநாதர், சொக்கலிங்கப் பெருமான் என்ற பெயர்களே வழங்கி வந்தன. சொக்கு என்றால் அழகு. சொக்கர் என்றால் அழகுடையவர் என பொருள். அழகிய தலைவர், அழகியப் பெருமான் என முன்பு அழைக்கப்பட்டவர் பிற்காலத்தில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சுந்தரர், சோமசுந்தரர், கல்யாணசுந்தரர், செண்பக சுந்தரர் என பல பெயர்களை பெற்றார். இப்பெயர்கள் தவிர அட்டாலைச் சேவகன், அடியார்க்கு நல்லான், அதிர வீசி விளையாடுவான் என்ற பெயர்களும், அபிஷேகச் சொக்கர், அழகிய சொக்கர், கடம்பவனச் சொக்கர், புழுகு நெய்ச் சொக்கர், கடம்பவனேசர், கற்பூரச் சொக்கர், மதுரேசர் போன்ற பெயர்களும் சேர்ந்தன. இவர் சங்கப்புலவராக இருந்த போது இறையனார், பேராலவாயர் என்ற பெயர்களும் ஏற்பட்டன. இப்பெருமானுக்குக் கல்வெட்டுகளில் அழகிய சொக்கநாதர், திருவாலவாயுடைய நாயனார், மதுரை உடையார், திருவாலவாயுடையார், அதிர வீசி விளையாடுவார், சொக்கநாத சுவாமி, சொக்கநாயக ஈஸ்வர உடையார், திருவாலவாயுடைய தம்பிரானார், மாதேவரழகிய சொக்கனாரான சுந்தரபாண்டியச் சோழக் கோனார் ஆகிய பெயர்களும் இடம் பெற்றுள்ளன. சிவனுக்கு மட்டுமில்லை, அம்மனுகும் பல பெயர்கள் வழக்கத்தில் இருந்தன. திருஞானசம்பந்தர், “அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய்” என மூன்றாம் திருமுறையான தேவாரத்தில் குறிப்பிடுகிறார். அதாவது, மீனாட்சி அன்னையை ‘மீன் போன்ற கண்ணையுடையவள்” என்ற பொருளில் அங்கயற்கண்ணி என குறிப்பிடுகிறார். மீன் தன் முட்டைகளை பார்வையாலேயே தன் மயமாக்குவது போலத் தேவியும் தம்மை வழிபட வரும் அடியவர்களை கண்ணால் நோக்குகிறார். மீன் கண்ணுக்கு இமை இல்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போலத் தேவியும், கண் இமைக்காமல் உயிர்களை எப்போதும் காக்கிறாள். தேவியின் கண்கள் அலர்வதால் தோன்றும் இவ்வுலகம், கண்கள் சற்று இமைக்குமாயின் அழிந்துவிடும் என்றெண்ணித் தேவி கருணை கொண்டு இமையாத நாட்டத்துடன் அனைத்தையும் காத்து வருகிறார். மதுரை மீனாட்சியம்மனுக்கு, அங்கயற்கண்ணி தவிர, சியாமளா தேவி, பச்சைத் தேவி, மரகதவல்லி, தடாதகைப் பிராட்டி, அபிசேக வல்லி, அபிராம வல்லி, கயற்கண் குமாரி, கற்பூர வல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத் திரு, வழுதிமகள் முதலிய பெயர்களும் உள்ளன. இதே போல கல்வெட்டில் திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்ற பெயரும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. மதுரையில் குடி கொண்டிருக்கும் மீனாட்சி சொக்கநாதரை, மீனாட்சி சுந்தரர் அல்லது மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்றே சொல்கின்றனர். இங்கு மீனாட்சி என்பது சொல் என்றும், சுந்தரர் என்பது பொருள் என்றும் கொள்கின்றனர். அதாவது சொல்லும், பொருளுமாக சேர்ந்து தம்மை வழிபடுவோருக்கு நல்வழி காட்டுகின்றனர்.

— மு.சுப்பிரமணி, தேனி. 99407 85925

கும்பாபிஷேகம்…

கோபுரங்களுக்கு மட்டும் புதுப்பிப்பா

இந்த ஆண்டு நடைபெறும் கும்பாபிஷேகம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். கோபுரங்களிலும் விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்படும் அந்த புனிதமான நேரத்தில், நாம் இன்னொரு விஷயத்தை நினைத்துப் பார்க்கலாம். இந்தக் கற்கள் எத்தனை தலைமுறைகளைப் பார்த்திருக்கும்?

எத்தனை மன்னர்கள்…
எத்தனை திருவிழாக்கள்…
எத்தனை பக்தர்கள்…

எத்தனை மாற்றங்கள்…

ஒரு காலத்தில் வைகை நீரைப் பற்றிப் பதிவு செய்த கல், இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடும் அதே கோயிலுக்குள் நின்று கொண்டிருக்கிறது. மற்றொரு கல் ஒரு நன்கொடையைப் பதிவு செய்திருக்கிறது. வேறொரு கல்வெட்டு நிர்வாகத்தைப் பேசுகிறது. இன்னொன்று கல்வியைப் பற்றிச் சொல்கிறது. இவை அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்போது, அவை கோயில் வரலாறு மட்டும் அல்ல; மதுரையின் சமூக வரலாறாகவும் மாறுகின்றன. மீனாட்சி கோயில்… கோயிலா? அல்லது உயிருள்ள வரலாற்றுப் பெட்டகமா? கும்பாபிஷேகத்தின் புனித நீர் கோபுரங்களைத் தொடும் அந்த தருணத்தில், நாம் மேலே மட்டும் பார்க்காமல், நம்மைச் சுற்றியுள்ள அந்தப் பழமையான கற்களையும் கவனிக்கலாம். அவை வெறும் கட்டடத்தின் ஒரு பகுதி அல்ல. அவற்றில் வைகையை நம்பிய மதுரை இருக்கிறது. நீரை நிர்வகித்த மதுரை இருக்கிறது. நிலத்தை தானமாக வழங்கிய மதுரை இருக்கிறது. கோயில் பணிகளை ஒழுங்குபடுத்திய மதுரை இருக்கிறது. கல்விக்கு இடம் அளித்த மதுரை இருக்கிறது. பல தலைமுறையாக தன் நினைவுகளை கற்களில் பதித்து வைத்த மதுரை இருக்கிறது. கும்பாபிஷேகம் கோயிலின் விமானங்களையும் கோபுரங்களையும் புதுப்பிக்கும் ஒரு புனித நிகழ்வு என்றால், இந்தக் கல்வெட்டுகளை மீண்டும் வாசிப்பது நம் நினைவுகளையும் புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பு. அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் போது, கோபுரங்களை ரசித்து, அம்மனை தரிசித்து விட்டு வெளியே வருவதற்கு முன், அங்குள்ள பழைய கல்வெட்டுகளை கவனியுங்கள். அந்தக் கல்லில்… நம் மதுரையின் குரல் காதில் ஒலிக்கும்.

410… ஒவ்வொன்றும் ஒரு கதை இக்கோயிலில் 410 கல்வெட்டுகள் உள்ளன. அதில் சில முழுமையான தகவல்களுடன் உள்ளன. பல கல்வெட்டுகள் காலப்போக்கில் சிதைந்தன. சில கல்வெட்டுக் கற்கள் கட்டுமானப் பணிகளின் போது அதன் முக்கியத்துவம் அறியப்படாமல் துண்டுகளாகவும், தலைகீழாகவும் வெவ்வேறு இடங்களில் உள்ளன. கல்வெட்டை வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே அதன் அருமை புரியும். நாம் கோயிலுக்குச் செல்லும் போது கோபுரத்தைப் பார்க்கிறோம்; சிற்பங்களை ரசிக்கிறோம்; கடவுளை தரிசிக்கிறோம். ஆனால் கற்களில் செதுக்கப்பட்டிருக்கும் எழுத்துகளைப் பார்க்கும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது? மன்னர் மட்டுமல்ல… மக்களின் வாழ்க்கையும்! கல்வெட்டு என்றாலே மன்னர்கள், போர்கள், வெற்றிகள் ஆகியவை தான் நினைவுக்கு வரும். ஆனால் மீனாட்சி கோயில் கல்வெட்டுகள் அதை விட விரிவான மதுரையை அறிமுகப்படுத்துகின்றன. நிலதானம், கோயில் பணி, பூஜைக்கான ஏற்பாடு, வருவாய், பணியாளர், நிர்வாகம், நீர்ப்பாசனம் போன்ற பல்வேறு சமூக, பொருளாதார தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது மன்னர்களின் வரலாறு மட்டுமின்றி அந்தக் காலத்து மதுரையின் சமூக வாழ்க்கையை விவரிக்கின்றன.

கல் சொல்லும் கதை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மதுரை எப்படி வாழ்ந்தது என்பதை சொல்கிறது மதுரை கோயில் கல்வெட்டுகள்! மீனாட்சியம்மன் கோயில் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல. மக்களின் மனதோடு இணைந்த மதுரையின் அடையாளம் அது. மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்காக மதுரை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. கோபுரங்களிலும் விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்படும் அந்த மகத்தான தருணத்தை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், கோயிலின் சிற்பம், கோபுரங்களை ரசிப்பதோடு, கல்வெட்டுகள் சொல்லும் வரலாற்றையும் அறிவது அவசியம். கோயில் நன்கொடை…

கல்விக்கும் வழி

1842ஐ சேர்ந்த கல்வெட்டில், பச்சையப்ப முதலியார் வழங்கியதாகக் குறிப்பிடப்படும் ஒரு லட்சம் வராகன் நன்கொடை பற்றிய தகவல் உள்ளது. அந்த நிதியின் வருவாயில் இருந்து கோயில் வழிபாடுகளுக்கான செலவுகளுடன் ஆசிரியர்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும், சிறுவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் நியமிக்கப்பட்டதாகவும் கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு கோயில் என்பது வழிபாடு நடைபெறும் இடம் மட்டுமல்ல; ஒரு காலத்தில் அது சமூக வாழ்க்கையின் பல்வேறு தேவைகளோடும் தொடர்புடைய அமைப்பாகவும் இருந்திருக்கிறது. அந்தக் காலத்து கல்வி முயற்சியைப் பற்றி இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

அங்கயற்கண்ணி மீனாட்சி

  • கண்களால் நம்மைக் காப்பவள் மதுரை நகரின் அரசி அங்கயற்கண்ணி மீனாட்சி.
  • கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் காத்திருக்கும் மீனாட்சியின் திருவுருவம் வலது பாதம் சற்று முன்னோக்கி இருக்கிறது. அன்னையின் கையில் உள்ள கிளி பக்தர்களின் வேண்டுதல்களை எல்லாம் அவள் காதில் சொல்கிறது.
  • அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம், கம்பத்தடி மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வீரவசந்தராயர் மண்டபம், திருக்கல்யாண மண்டபம் என கோயிலில் உள்ள மண்டபங்கள் மிக அழகும் கலைநயமும் மிக்கவை.
  • மீனாட்சி திருக்கல்யாண வைபவம் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் பக்தர்கள் அனைவரும் கண்டு களிக்கும் வண்ணம் மேற்கு, வடக்கு ஆடி வீதிகளின் சந்திப்பில் நடக்கிறது.
  • சிவபெருமான் திரு நடனங்கள் செய்யும் தலங்கள் ஐந்து. அதில் ரஜத சபை என்னும் வெள்ளியம்பலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளது.
  • ராஜசேகர பாண்டிய மன்னருக்காக சிவபெருமான் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இடது கால் அம்பிகை பாகம். மதுரையில் அம்பிகைக்கு சிறப்பு.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூர்த்தி தலம் தீர்த்தத்தால் சிறப்புடையது. தல மரம் கடம்ப மரம்
  • இங்குள்ள குளம் பொற்றாமரைக் குளம். நாரை முத்தி பெற்ற இடம் இதுவே. நாரை பெற்ற வரத்தால் இக்குளத்தில் மீன்கள் இல்லை.
  • மீனாட்சி அம்மன் கோயிலில் பன்னிரண்டு கோபுரம், இரண்டு விமானங்கள் உள்ளன. இரண்டு விமானமும் தங்க விமானங்களாகும்.
  • சித்தி விநாயகர், முக்குறுணி விநாயகர் மதுரை கோயிலில் உள்ள சிறப்புடைய விநாயகர்கள்.
  • இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத் திருவிழா, தெப்பத் திருவிழா சிறப்பானவை.
  • சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் நிகழந்த தலம் இது. ஆவணி திருவிழாவில் திருவிளையாடல் வைபவங்கள் சிறப்பாக நடக்கிறது. – டி.ஆர்.பிரதாப் சந்திரன், மீனாட்சி நகர், வில்லாபுரம்.

— 99445 03473

உலகை உய்விக்கும் திருவிழா

முக்தி தரும் தலம் ஐந்தில் முதன்மையானது மதுரை. சிதம்பரத்தை தரிசித்தாலும், காளஹஸ்தியில் வழிபட்டாலும், காசியில் இறந்தாலும், திருவாரூரில் பிறந்தாலும் முக்தி கிடைக்கும். ஆனால் மதுரை என்ற பெயரை கேட்டாலே முக்தி என்கின்றன புராணங்கள். கடைச்சங்க புலவர்கள் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்த இடம். மூர்த்தி நாயனார் விபூதி, ருத்திராட்சம், ஜடாமுடி என்ற மூன்றையும் துணையாகக் கொண்டு மும்மையால் உலகாண்ட நகரம். இந்திரன், வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். அரிமர்த்தன பாண்டியனிடம் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பெயரில் மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்த நகரம். திருஞானசம்பந்தர் அனல்வாதம், புனல்வாதம் செய்து சைவத்தைப் பாண்டி நாட்டில் நிலைபெறச் செய்த தலம். மங்கையர்க்கரசியாரும், குலச் சிறையாரும் வாழ்ந்தது இந்த மதுரைதான். இந்த வரலாற்றின் அடையாளமாக இன்றும் திருக்கோயிலின் வடக்கு சுற்றில் கடம்ப மரம் ஒன்று காட்சி தருகிறது. ‘‘திருவாலவாயென்று கேட்டவரே அறம் பெறுவர் செல்வம் ஓங்கும் திருவாலவாயென்று நினைத்தவரே பொருள் அடைவர் தேவ தேவைத் திருவாலவாயிடத்துக் கண்டவரே இன்ப நலம் சேர்வர் என்றும் திருவாலவாயிடத்து வதிந்தவரே வீட்டுநெறி சேர்வர் அன்றே’’ என்ற பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் பாடலை பாடியபடி, மதுரையின் சிறப்பை தெரிந்துகொள்வோம். சிவபெருமான் தன்னைத்தானே ஆத்மார்த்த மூர்த்தியாக பிரதிஷ்டை செய்து வழிபட்ட இம்மையிலும் நன்மை தருவார் எழுந்தருளியுள்ள இடம். பிட்டுண்டு, மண் சுமந்து பிரம்படிபட்ட பெருமான் வாழும் இடம். சக்தி தரும் அறுபத்து நான்கு பீடங்களில் முதல் பீடம். ஈசனே புலவராக வந்து தமிழை ஆராய்ந்த இடம். நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என கடவுளிடமே வாதிட்ட நக்கீரர் வாழ்ந்த இடம். முருகன் திருவருளால் பேசும் திறன் பெற்ற குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றிய தலம் எல்லாம் மதுரைதான். பழங்காலத்தில் இந்தப் பகுதி கடம்பவனமாக இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும், வருணன் ஏவிய மேகங்களைத் தடுக்க, சிவன் விடுத்த நான்கு மேகங்களும், நான்கு மாடங்களாகக் கூடி நின்று காத்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்றும் மதுரைக்குப் பெயருண்டு. சிவன், தன் தலையில் சூடியுள்ள சந்திரனிடம் உள்ள அமுதமாகிய மதுவைப் பொழிந்து நாகம் உமிழ்ந்த நஞ்சின் வெம்மையை நீக்கி புனிதப்படுத்திய இடம் என்பதால் ‘மதுரை’ என்ற பெயர் உண்டானது. ஆலவாய் என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. இவ்வளவு சிறப்புப் பெற்ற பாண்டியநாடு கடம்பவன கே்ஷத்திரம், ஹாலாஷ்ய கே்ஷத்திரம், மதுராபுரி, கன்னிவளநாடு, துவாத சாந்த ஸ்தலம் இப்படி பல பெயர்களைக் கொண்டது. சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் சிவனுக்கே சிந்தை மகிழ்விக்கும் திருவிழா, இன்பம் தரும் திருவிழா, இன்னல் தீர்க்கும் திருவிழா, குடமுழுக்கு எனும் கும்பாபிஷேக திருவிழா, உலகம் போற்றும் ஒப்பற்ற திருவிழா மதுரையில் இன்று நடக்கிறது. நாமும் பங்கேற்று அம்மையப்பரின் அருளைப் பெறுவோம். – வீ.கணேஷ், செனாய் நகர், மதுரை. 96268 95028

மனம் நிறைந்த மதுரை

மதுரை எனச் சொல்லும் போதே நம் மனம் நிறைகிறது. மதுரம் அதாவது இனிமை என்பது இதன் பொருள். பெரும்பாலும் ஊர் தோன்றிய பின் மக்கள் தங்களின் வழிபாட்டுக்காக விரும்பும் தெய்வத்துக்கு கோயில் கட்டுவர். அதை ஊரின் ஒரு ஓரத்தில் வெளிப்பகுதியில் கட்டுவர். ஆனால் மதுரையில் முதலில் கோயில் உண்டானது. அதுவும் மிக பிரமாண்டமாக உண்டானது. கோயில் உருவான காலத்தில் ராஜகோபுர நுழைவு வாசல் தெருவுக்கு சமமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது கோயில் கோபுர நுழைவு வாசல் படிகள் வழியே உள்ளே இறங்கி செல்லும் வகையில் உள்ளது. அப்படியானால் கோயில் மிக பழமையானது என்பதை அறிய முடிகிறது. கோயிலை சுற்றி ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி என கோயிலை சுற்றி சதுர வடிவில் வீதிகளை அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள். கோயிலுக்குள் நுழையும்போதே ஒரு தெய்வீக உணர்வு, சிலிர்ப்பை நம்மால் உணர முடியும். விசாலமான பிரகாரங்கள், மிகப்பெரிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள், ஆயிரம் கால் மண்டபம், அழகிய பொற்றாமரை குளம் எல்லாவற்றையும் பார்க்க வியப்பாக இருக்கும் சிவபெருமான் அறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம் இது. இங்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் சாமி புறப்பாடும் உற்ஸவமும் நடக்கும். அம்மன், சுவாமி சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. சன்னதியின் வெளிப்புரத்தில் திருவிளையாடல்கள் சுதை வடிவில் உள்ளன. மக்களின் தொழில் அடிப்படையில் தெருக்களின் பெயர்கள் உள்ளன உதாரணமாக தென்னோலைக்கார தெரு, பச்சரிசிக்காரத் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, வளையல்காரத் தெரு என இப்படி பல தெருக்கள் உள்ளன இத்தகைய சிறப்பு மிக்க மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனை கும்பாபிஷேக நன்னாளில் தரிசித்து மகிழ்வோம்.

— பிரணவம், கான்சாபுரம், மதுரை. 80983 53195

Advertisement
Advertisement
Top
Advertisement