Special supplement · Part 3 · page 56 · 113 / 159
திருவிளையாடல் புராணம் காட்டும் இன்றைய பகுதிகள்
பொற்றாமரைக்குளம்
மீனாட்சி கோயில் பொற்றாமரைக் குளக்கரையில் ஒரு நாரை தவம் செய்தது. அந்த நாரைக்கு சிவபெருமான் முக்தி கொடுத்ததோடு அதன் விருப்பபடி பொற்றாமரைக் குளத்தில் மீன் உண்ட பாவம் எந்தப் பறவைக்கும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, அது முதல் அந்தக் குளத்தில் என்றுமே மீன்கள் இல்லாமல் செய்தார். இதுவே இன்றும் பொற்றாமரைக்குளத்தில் மீன்கள் இல்லாமல் இருப்பதற்குக் காரணம்.
சங்கப்பலகை
பிரம்மாவின் சாபத்தால் சரஸ்வதி மதுரையில் புலவராக அவதரித்தாள். அப்போது நக்கீரர், பரணர், கபிலர் முதலான புலவர்களுக்கு சிவபெருமான் சங்கப்பலகை கொடுத்து அவர்களுடைய பெருமையை இவ்வுலகிற்கு உணர்த்தினார்.
புலவர் கீரனுக்கு அருளுதல்
மீனாட்சி கோயிலில் சிவபெருமான், நக்கீரனுக்கு அகத்தியர் மூலம் இலக்கணத்தை உபதேசித்தார். பொற்றாமரைக்குளத்தில் வீழ்ந்து கிடந்த நக்கீரனுக்கு மீண்டும் அருள் செய்தார்.
சிவபெருமான் கால் மாறி ஆடியது
சொக்கநாதர் சன்னதியில் இருக்கும் வெள்ளியம்பல மண்டபத்தில், கால் மாறிய நடராஜர் திருவுருவம் உள்ளது.
எல்லாம் வல்ல சித்தர்
சொக்கநாதர் சன்னதியில் வடமேற்குப் பகுதியில் முதல் பிரகாரத்தில் சித்தர் சன்னதியை பார்க்கலாம்
வன்னியும் கிணறும்
சொக்கநாதர் சன்னதியில் வட கிழக்குப் பகுதியில் முதல் பிரகாரத்தில் இந்த இடம் உள்ளது.
வெள்ளிக் கவசமிட்ட கடம்ப மரம்
இக்கோயில் முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்துள்ளது. பின்னர் மன்னனின் விரும்பப்படி இக்கோயில் உருவானது. இரண்டாம் பிரகாரத்தில் பட்டுப்போன ஒரு மரத்தினை வெள்ளிக்கவசமிட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
கடல் அழைத்த திருவிளையாடல்
சிவபெருமான் தன் மாமியாரான காஞ்சன மாலையின் புனித நீராடல் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, ஏழு கடல்களையும் ஒரு குளத்தையும் வரவழைத்தார். இந்த இடம் இக்கோயிலுக்கு கிழக்கில் இடம் பெறும் புதுமண்டபத்திற்கு வடகீழ்ப்புறம் உள்ளது. ஏழுகடல் என்று பெருமை வாய்ந்த இக்குளம் இன்று கடை வளாகமாக மாறி விட்டது. இப்போது ஏழுகடல் தெரு, கீழ ஆவணி மூல வீதியையும் கீழ மாசி வீதியையும் இணைக்கிறது.
காஞ்சனமாலை கோயில்
முன்பு ஜலகண்டேசுவரர் கோயில் என அழைக்கப்பட்ட எழுகடல் தீர்த்தத்தின் தென்மேற்கு கோடியில் இருக்கும் கோயில் காஞ்சனமாலை கோயில் என அழைக்கப்படுகிறது.
அன்னக்குழி மண்டபம்
மீனாட்சியம்பிகை திருமணத்தின் போது குண்டோதரனுக்கு அன்னமிட்ட இடம். இந்த இடத்தில் முன்பு ஒரு பெரிய மண்டபம் இருந்தது. தற்போது மேற்கு சித்திரை வீதியில் பிர்லா தங்கும் விடுதியாக உள்ளது.
வளையல் விற்றது
முந்தை வினையால் வைசியப் பெண்களாக இருந்து தாருகாவனத்து முனிவரின் பத்தினிகளின் சாபம் தீரும் பொருட்டு சிவ பெருமான் வளையல் விற்றார். இவ்விளையாடல் நடந்த இடம் வளையல் காரத் தெரு என அழைக்கப்படுகிறது. இது மேற்கு ஆவணி மூலவீதியில் உள்ளது.
மாணிக்கம் விற்றது
வீரபாண்டியன் இறந்த போது அவனுடைய பட்டத்துக்குமாரனுக்குச் சாற்றி வேண்டிய கிரீடமும் ஆபரணங்களும் களவு போயிற்று. அப்போது மாற்றுக்கிரீடம் செய்வதற்கு உதவும் பொருட்டு இரத்தின வியாபாரியாக சிவபெருமான் மாணிக்கம் விற்றார். இந்த சிவலீலை நடந்த தெற்காவணி மூல வீதியில் இன்று மாணிக்க மண்டபம் இருக்கிறது. அங்கு இப்போது காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது.
திருஞானசம்பந்தர் தங்கிய இடம்
மதுரை தெற்காவணி மூல வீதியில் திருஞானசம்பந்த நாயனார் தங்கிய இடத்தில் இப்போது மதுரை ஆதினம் உள்ளது.
குடபாலோடை
இது சிவபெருமான் மீனவனாக வந்து மீன் வலை வீசிய இடம். மதுரை ரயில் நிலையத்தின் தென் மேற்கு, எல்லீஸ் நகர் பகுதியில் மேம்பாலத்தின் கீழே இருப்பது வலை வீசி குளம் (கொண்டாழி) உள்ளது.
மாயப் பசுவை வதைத்தது
சமணர்கள் மதுரையை அழிப்பதற்கு, ஆபிச்சார வேள்வி செய்து மாயப்பசுவை உண்டாக்கி ஏவினார்கள். இந்த பசுவை நந்திஎம் பெருமான் காளை வடிவத்தில் சென்று அடக்கினார். மாயப் பசு – திருப்பரங்குன்றம் செல்லும் வழியிலுள்ள பசுமலை என்ற மலையாகி விட்டது.
பூதம் கண்ட குளம்
இந்தக்குளம் குண்டோதரனால் உண்டாக்கப்பட்டது. இது திருப்பரங்குன்றம் மலைக்கு வடக்கில் இப்போது தென்கரை கண்மாய் எனப்படும் பெரிய குளம்.
குதிரை நரியான படலம்
மதுரையில் வைகை வடகரைப் பகுதியில் பரிகள் ஆன நரிகள் மீண்டும் இரவு நேரத்தில் நரிகளாகவே மாறி மதுரையை விட்டு வெளியேறின. இது நடந்த இடம் இப்போது செல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
தத்தனேரி
இங்கு திருவிளையாடல் நிகழ்வில் நரிகள் தத்தித் தத்தித் சென்றன. இன்று இந்த இடம் இடுகாடாக உள்ளது.
தொடர்னரி (தோடனேரி)
தத்தனேரியின் அருகில் நரிகள் வரிசையாகச் சென்ற இடம்.
நாகமலை
மதுரை மேற்கு 8 கி.மீ., சமணர்கள் ஏவிய கொடிய நாகம் மலையாக மாறிய இடம்.
பிட்டுத்தோப்பு
மதுரைக் கோயிலின் வட மேற்கில் ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. ஈசன் பிட்டுக்கு மண் சுமந்த இந்த இடத்தில் இப்போது ஒரு சிவபெருமான் கோயில் உள்ளது.
எண்கிரி
திருஞானசம்பந்த நாயனாருடன் வாதில் தோற்ற சமணர்கள் தங்களாகவே கழுவேறிய மலைகள் இங்குள்ளன. இப்போது இது சமண மலை என்று அழைக்கப்படுகின்றன.
தனிச்சியம்
மதுரை வடமேற்கு 20 கி.மீ., பாண்டிய மன்னன் இந்திரனை தனித்து நின்று வெற்றி பெற்ற இடம்.
திருவாலவாயான படலம்
கடல் பொங்கியதால் மதுரையின் அளவு குறுகியது. மதுரை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க விரும்பிய வங்கிய சேகர பாண்டியனுக்காக, சிவபெருமான் பெரிய ஒரு பாம்பை வீசிக் காட்டியதால் மதுரை மாநகர் ஆலவாய் என்று பெயர் பெற்றது. பாம்பின் வாயும் வாலும் சேர்ந்த இடம் மதுரையின் வட மேற்கில் 12 கி.மீ., தூரத்தில் திருவாலவாய நல்லூர் என்று உள்ளது. இது இன்று திருவா நல்லூர் என அழைக்கப்படுகிறது. மதுரை, தெற்கு மாசி வீதி, தென் திருவாலவாய் சுவாமி கோயில் பாம்பின் வாயும் வாலும் சேர்ந்த இடம் என்றும் மற்றொரு கருத்து வழங்கி வருகிறது.
குருவித்துறை
மதுரையின் வட மேற்கில் வைகைத் தென்கரையில் 20 கி.மீ., தூரத்தில் குருவித்துறை உள்ளது. இது பன்றிக் குட்டிகளின் முந்தைப் பிறவித் தலம். சிவபெருமான் முற்பிறவி வினையால் பன்றிகளாகப் பிறந்த பன்னிருவரை அவர்களின் உண்மை மேன்மையை உணர்த்துவதற்காக அவர்களை பாண்டியனின் அமைச்சர்களாக்கினார்.
சாமநத்தம்
மதுரை தென் கிழக்கு 7 கி.மீ., சமணர்களுடைய எடுகள் நெருப்பில் சாம்பலான இடம். இந்த ஊர் இப்போது சம்பந்தர் நத்தம், சாம நத்தம் என்று அழைக்கப்படுகிறது.
இடைக்காட்டு சித்தர் பிணக்கு தீர்த்தது
சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் உள்ள இடம்.
திருப்பாச்சேத்தி
மதுரை தென்கிழக்கு 30 கி.மீ., திருஞானசம்பந்தருக்கும் சமணர்களுக்கும் நடந்த புனல்(நீர்) வாதத்தில் வைகை நீரை எதிர்க்க இயலாத சமணரின் ஏடுகள் அடித்துச் செல்லப்பட்டு ஒதுங்கிய இடம். இங்கு நளன் கட்டிய லட்சுமி வணங்கிய மரகதலிங்கம் உடைய திருநோக்கிய அழகிய நாத சுவாமி கோயில் உள்ளது.
சேடனூர்
மதுரை வடமேற்கில் 20 கி.மீ., தூரத்தில் திருவேடகம் என்ற ஊர் இருக்கிறது. சைவ மேன்மையை நிலை நாட்டும் பொருட்டு திருஞானசம்பந்த நாயனாரின் ஏடுகள் வைகையில் எதிர்த்துச் சென்று இங்கு கரை சேர்ந்தன. காசிக்கு நிகரானது என்று கூறப்படும் இந்த இடத்தில் ஸ்ரீ ஏடக நாதர் கோயில் உள்ளது.
மேலைக்கடை
மதுரையின் மேற்கில் வைகைத் தென் கரையில் 10 கி.மீ., தூரத்தில் மேலக்கால் என்ற ஊர் உள்ளது. சமணர் ஏறிய கழுவரிசையின் மேலைக்கோடி. இங்கு ஒரு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இருக்கிறது.
வெள்ளை யானை சாபம் தீர்த்தல்
துர்வாச முனிவரால் இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட சிவபிரசாத மலரை, ஐராவதம் தன் காலில் மிதித்தது. அதனால் ஐராவதத்துக்கு ஏற்பட்ட சாபம், மதுரை மீனாட்சி கோயிலில் நீங்கியது. பின்னர் ஐராவதம் மேற்கே சென்று கணேச தீர்த்தம் ஏற்படுத்தி, விநாயகரைப் பிரதிஷ்டை செய்தது. இந்த இடம் மதுரைக்கு மேற்கில் உசிலம்பட்டி வழியில் 32 கி.மீ., தூரத்தில் கட்டக்கருப்பன் பட்டி அருகில் ஆனையூர் என்ற பெயரில் இருக்கிறது. இங்கு ஐராவதேஸ்வரர் கோயில் ஐராவதரர் தீர்த்தம் ஆகியவை உள்ளன.