Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 56 · 114 / 159

மீனாட்சி மைந்தன்

மதுரை அன்னை மீனாட்சியின் ஆணைப்படி திருப்போரூர் தலத்தை உலகிற்கு வெளிக் கொண்டு வந்தவர் சிதம்பர சுவாமிகள். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் திருவருள் துலங்கும் தெய்வ சன்னதிகளுக்கும் குருவருள் விளங்கும் மகான்களுக்கும் பேர் பெற்ற தலம். இத்தலத்தில் தான் பாண்டியர்களும் நாயக்கர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆன்மிகத்தை வளர்த்து நல்லாட்சி நடத்தினர். இத்தலத்தில் 450 ஆண்டுக்கு முன்பு சங்கப் புலவர் மரபில் அவதரித்தவர் சிதம்பர சுவாமிகள். மதுரை மீனாட்சியம்மையின் குழந்தையாகவே வளர்ந்ததால் இவரை ‘மீனாட்சி மைந்தன் என்றே அழைப்பர். சிறுவயதில் இருந்தே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் உரிய ஆசான் மூலம் கல்வி, கேள்வி, வழிபாடு, யோகம், ஞானத்தில் சிறந்து விளங்கினார். மீனாட்சியம்மனையே உபாசனாமூர்த்தியாக ஏற்று வாழ்ந்தார். தினமும் மீனாட்சியம்மனை தரிசிப்பது சுவாமிகளின் வழக்கம். இவரை மக்கள் ஞானாசிரியனாகவே கருதி போற்றினார். இதனால் சுவாமிகளின் புகழ் பரவியது. இவரது புலமையை அறிந்து வியந்த ஆன்மிகச் சான்றோர் இவருக்கு கவிராயர் என்ற பட்டம் அளித்தனர். இதனால் சுவாமிகள் சிதம்பரக் கவிராயர் என அழைக்கப்பட்டார். ஒருமுறை சுவாமிகளின் தீட்சண்யத்தைக் கண்டு மகிழ்ந்த சாந்தலிங்கர் தாம் இயற்றிய வைராக்கிய சதகம், வைராக்கிய கொலை மறுத்தல், அவிரோத உந்தியார், கண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவிலொடுக்கம் ஆகிய 5 ஞான நூல்களுக்கும் உரை எழுதுமாறு கூறினார். இதனை பெரும்பேறாகக் கருதினார் சுவாமிகள். மேலும், மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம், விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, விருத்தாசலம் குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் ஆகிய நூல்களை இயற்றினார். முருகப்பெருமான் கோயிலை கண்டெடுத்து திருப்பணி செய்து திருப்போரூர் சந்நதி முறை என்ற பூஜை முறையை ஏற்படுத்தினார் சிதம்பர சுவாமிகள். திருப்போரூர் சிவபெருமான் திருவருளால் திருமாலும் லட்சுமியும் கண்ணுவ முனிவரால் தங்களுக்கு நேர்ந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற்ற தலம். முருகப் பெருமான் அசுரர்களை போர் புரிந்து அவர்களின் ஆணவத்தை அழித்த தலம். அகத்தியருக்கு முருகன் உபதேசித்த தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். சிதம்பர சுவாமிகளால் எந்திர ஸ்தாபனம் செய்து வைக்கப்பட்ட தலம் என பல சிறப்பு கொண்ட தலம் திருப்போரூர். மீனாட்சியம்மன் இட்ட பணியை செவ்வனே நிறைவேற்றிய சிதம்பர சுவாமிகள் 1659ல் வைகாசி விசாக நன்னாளில் பூரணம் அடைந்தார்.

சுவாமிகள் பாடிய பாடல்கள்... ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித் தீது புரியாத தெய்வமே - நீதி தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு.

இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவி
அல்லேன் நல்லறத்து ஞானி அல்லேன் - சொல்லறத்துள்
ஒன்றேனும் இல்லேன் உயர்த்த திருப்போரூரா
என்றேதான் ஈடேறுவேன்

நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல்
பாயில் கிடவாமல் பாவியேன் - காயத்தைஓர்
நொடிக்குள் நீக்கி எனை ஒண்போரூர் ஐயா! நின்
சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து

Advertisement
Advertisement
Top
Advertisement