Special supplement · Part 3 · page 59 · 121 / 159
பழமை பேசும் புதுமண்டபம்
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கடைசியாக கட்டப்பட்டது வசந்த மண்டபம் என்கிற புதுமண்டபம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் ஒரு பகுதியாக கிழக்கு கோபுரத்தின் எதிரே உள்ளது. ஒரு காலத்தில் அலுமினியம், பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருள் முதல் தேர் தோரணம், சாமி அலங்காரம், கோயில் திருவிழாவிற்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்ற இடமாக விளங்கிய புதுமண்டபம் தற்போது ஆள் அரவமின்றி அமைதியாக காத்திருக்கிறது. மதுரையின் ‘ஷாப்பிங் மால்’ என கெத்தாக சொல்லப்பட்ட புதுமண்டபம் குழந்தைகளுக்கான சொப்பு சாமான், மரப்பாச்சி பொம்மை, நடை வண்டி மாணவர்களுக்கு வாய்ப்பாடு முதல் பாடப்புத்தகங்கள், நோட்ஸ்க்கும் இங்கு தேடி வரும் நிலையும் இருந்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இங்கிருந்த கடைகள் முழுவதும் அருகே உள்ள குன்னத்தூர் சத்திரம் வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டு புரனமைப்பு பணி நடக்கிறது.
வரலாறு
விஜயநகரப் பேரரசு நாகம நாயக்கர் வம்சத்தில் ஏழாவது மன்னராக திருமலை நாயக்கர் பொறுப்பேற்றுக் கொண்டு 1623 முதல் 1659 ஆண்டு வரை திறம்பட ஆட்சி புரிந்தார். திருமலை நாயக்கரின் கலை ஆர்வத்தால் எழில் மிகுந்த கட்டடங்கள், சத்திரங்கள், எண்ணற்ற கோயில்கள், திருப்பணிகள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள்ளும், வெளியேயும் பல மண்டபங்களை எழுப்பினார். அமைச்சர் நீலகண்ட தீட்சிதர் ஆலோசனைபடி இந்த மண்டபத்தை 1626ல் கட்டத் தொடங்கி 1645ல் 21ஆண்டுகளில் கட்டி முடித்தார். புதுமண்டபத்தின் உயரம் 25 அடி. நீளம் 333அடி அகலம் 105அடி கொண்டது. மக்கள் பார்வைக்கு விலகாத 4 வரிசையில் மிக நேர்த்தியாக 124 கல் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு கல்தூண்களும் அதையொட்டி நிற்கும் சிற்பங்களின் அணிவரிசையில் எதை பார்ப்பது எதை விடுவது எனத் தோன்றும். திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்த காலத்தில் இங்குள்ள ‘ப’ வடிவ பள்ளத்தில் தண்ணீர் நிரப்பட்டிருக்கும். அப்போது வெளியில் இருந்து சில்லென்று தென்றல் உள்ளே வரும் போது தண்ணீரில் படர்ந்து புதுமண்டபம் முழுவதும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த சமயத்தில் திருமலை நாயக்கர் மேடையில் அமர்ந்திருக்க, பணிப்பெண்கள் சாமரம் வீசிக் கொண்டிருப்பர். மாலை நேரத்தில் அமைச்சர்களுடன் நாட்டியக் கலை நிகழ்ச்சிகளை கண்டு களிப்பார். மேற்கு பகுதியின் உள்ளே நடுவில் 21 அடி நீளம், 15 அடி அகலம் கொண்ட 12 தூண்களுடன் கூடிய கடப்பா கருப்புக்கல் மேடையில் வசந்த விழாவின் போது சுவாமியும், அம்மனும் எழுந்தருள்வர். தமிழ் மாதப் பெயர் கொண்ட அந்தந்த வீதிகளில் திருவிழாக்கள் நடைபெறுவதை போல வைகாசியில் பத்து நாள் வசந்த திருவிழா, மார்கழியில் எண்ணெய்க்காப்பு திருவிழா பத்து நாள் இன்றும் புதுமண்டபத்தில் நடக்கிறது.
சிற்பங்கள்
தென் கிழக்கு மூலையில் உள்ள மான்குட்டிக்கு புலிப்பால் கொடுத்தது உள்பட இருபத்திரண்டு தெய்வங்களின் சிற்பங்கள் திருவிளையாடல் புராணக் கதையை எடுத்துக் காட்டுகின்றன. கிழக்கு வாசலில் நுழைந்தால் பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத முனிவர்களின் சிற்பங்கள், பத்து நாயக்க மன்னர்களின் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. ஆறு குதிரை வீரர்கள், கவரி வீசும் நான்கு சேடிப்பெண்கள், பத்து யாளி சிற்பங்கள், மேல் விதானங்களில் ராசி சக்கரங்கள், தாங்கும் தூண்கள், ஊஞ்சல் தூண்கள் உள்ளன. மீனாட்சி அம்மனுக்கு ‘தடாதகைப் பிராட்டியார்’ என்ற பெயர் உண்டு. பிறக்கும் போது மூன்று மார்பகங்கள் இருந்ததாகவும், மணாளான சிவபெருமானைக் கண்டதும் மூன்றாவது மார்பகம் மறைந்து விடும் என்ற புராணக் கதையை விளக்கும் தடாதகைப் பிராட்டியாரின் சிற்பம் இங்குள்ளது. மீனாட்சி திருக்கல்யாணம் தாரை வார்க்கும் சிற்பம், பத்ரகாளி சிற்பங்களில் பக்தர்களின் வேண்டுதல் குங்குமம், மஞ்சளுடன் காட்சி தருகிறது. ஒற்றைக் காலை தலைக்கு மேல் தூக்கி நிற்கும் ஊர்த்துவ தாண்டவர், போர்க்களச் சூழ்நிலை, வீரனிடம் இருக்கும் ஆயுதங்கள், அவனுடைய முக பாவனை, குதிரையின் வேகம் உள்பட அனைத்தும் குதிரைவீரர்களின் சிற்பத்தில் காணலாம். பல சிற்பங்களின் கை, கால், முகங்கள் சிதலைமடைந்திருக்கிறது. இருப்பினும் சிற்பங்களை தொடும் போது மனிதர்களின் கை, கால் நகங்களை தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த உயிரோட்டமான சிற்பங்களை வடித்த சிற்பியின் பெயர் சுமந்திரமூர்த்தி ஆசாரி. மதுரை மாநகரப் பெருமைகளில் ஒன்றான புதுமண்டபத்திற்கு வரலாற்றில் என்றும் முதலிடம் உண்டு.
— ஆர்.கணேசன், சுப்பிரமணியபுரம், மதுரை.