Special supplement · Part 3 · page 59 · 120 / 159
மூக்குத்தி வெளிச்சம் தெரியுது
என் பெயர் மீனாட்சி என்னும் பெருமிதத்துடன் எழுதுகிறேன். என் பெற்றோர் மீனாட்சி அம்மனை வேண்டியதால் நான் பிறந்தேன். என் தங்கைக்கும் அம்மனின் பெயரே. அதாவது பொற்கொடி. பிறந்தது வளர்ந்தது மணமானது, வாழ்வது எல்லாமே மதுரையில் தான். நடந்து செல்லும் தூரத்தில் கோயில் இருந்ததால் நினைத்த போதெல்லாம் செல்வோம். என் அம்மாவின் முந்தானை பிடித்து கோயிலில் வலம் வருவோம். அம்மனை தரிசிக்கும் போது, ‘மூக்குத்தி வெளிச்சம் தெரியுது பார்’ என்பார் என் அம்மா. கல்வெட்டுகள், கலைநயங்கள், சிலைகளின் அற்புதம் பற்றி அம்மா ஏதும் சொல்லவில்லை. பின்னாளில் புத்தகங்களைப் படித்து அறிந்து கொண்டேன். சிறுவயதில் பத்ரகாளிக்கு வெண்ணெய் அடித்த நினைவுகள் உண்டு. சிறிது காலம் கிளிக்கூண்டு மண்டபத்தில் பச்சை கிளிகள் இருக்கும். கோயிலின் சிறப்புகளை ஓரளவு தெரிந்தாலும், பின்னாளில் புத்தகங்களை படித்து என் குழந்தைகளுக்கு இப்போது விளக்குகிறேன். கொரோனாவில் என் அம்மா தவறிய போது அங்கயற்கண்ணியே என் அன்னையாக மாறினாள். துயரங்களில் இருந்து காக்கும் தேவதையாக வந்தாள். நான் வாடி நின்ற பொழுதுகளில் தான் இருப்பதை இந்த கலிகாலத்தில் மீனாட்சி நிரூபிக்கிறாள். அவளுடன் நான் பேசுவேன்... சண்டை போடுவேன்... கோபிப்பேன்... கொஞ்சுவேன்... அழுவேன்... சாந்தப்படுத்துவாள் அவள். ஆம்...அவள் ஒரு அற்புதம்.. இப்போதும்..எப்போதும்.. தெய்வம் மனுஷ்ய ரூபேண... அன்னையே...அனைத்தும் நீயே..
— மீனாட்சி, கோச்சடை, மதுரை 86106 56873