Special supplement · Part 3 · page 60 · 125 / 159
சனி தோஷம் இனி இல்லை
சனி தோஷத்தில் இருந்து தப்பிக்க மதுரை மாவட்டம் திருவாதவூர் வேதபுரீஸ்வரரை வழிபாடு செய்யலாம். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது. தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களையும், அசுரகுருவான சுக்ராச்சாரியாரின் தாயாரையும் மகாவிஷ்ணு கொன்றார். இப்பாவத்தைப் போக்க ஒரு குளமாக மாறி சிவனை வழிபட்டார். அங்கிருந்த தாமரை மலரின் நடுவில் வேத நாதம் ஒலிக்க சிவன் எழுந்தருளி பாவம் போக்கினார். இவரே ‘வேதபுரீஸ்வரர்’ என்னும் பெயரில் இத்தலத்தில் குடியிருக்கிறார். பிரம்மா ஒருமுறை இங்கு யாகம் நடத்த, அம்பிகை காட்சியளித்து படைப்புத் தொழில் சிறக்க அருளினாள். அவளே ‘ஆரணவல்லி’ என்னும் பெயருடன் அருள்கிறாள். மதுரை அரிமர்த்தன பாண்டியரின் அவையில் முதலமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். இவர் வாழ்ந்த வீடு தனி கோயிலாக உள்ளது. ஆவணி மாதத்தில் மதுரையில் நடக்கும் புட்டுத்திருவிழாவில் பங்கேற்க மாணிக்கவாசகர் மதுரைக்குச் செல்கிறார். மகரிஷியான மாண்டவ்யர், ஏழரைச்சனியால் துன்பத்திற்கு ஆளானார். இதனால் கோபம் கொண்டு சனியின் கால் முடமாகும்படி சாபமிட்டார். அதன் பின் இத்தலத்தில் வழிபட்ட சனி சாப விமோசனம் பெற்றார். இதனால் சுவாமிக்கு ‘வாதபுரீஸ்வரர்’ என்றும் பெயர் ஏற்பட்டது. இவரை வழிபட்டால் ஏழரை, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். முடக்குவாதம், கை, கால், உடல் வலி உள்ளவர்கள் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இங்கு உள்ள குளத்தில் புருஷாமிருகம் என்னும் சிலை உள்ளது. மழை பெய்ய இச்சிலைக்கு புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையன்று மருந்து சாத்தும் வைபவம் நடக்கும். இதற்காக தேங்காய்களை தீயிலிட்டு கருக்கி அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து மருந்து தயாரிப்பர். வாகனத்தை தொலைத்தவர்கள் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றிட நிவாரணம் கிடைக்கும். யானை வாகனத்துடன் விநாயகர் இருக்கிறார். கோயிலுக்குப் பின்புறம் விஷ்ணு தீர்த்தமும், கோயிலுக்குள் பிரம்ம, சிவன், அக்னி, பைரவர், வாயு, கபில தீர்த்தங்கள் உள்ளன.
- எப்படி செல்வது
- மதுரையில் இருந்து 24 கி.மீ.,
- நேரம்
- காலை 6:00 – 12:00 மணி; மாலை 4:00 – 8:00 மணி
- தொடர்புக்கு
- 0452 – 2344 360
விசேஷ நாட்கள்: மாணிக்கவாசகர் குருபூஜை, ஆவணி புட்டுத் திருவிழா, மகாசிவராத்திரி, சனி பிரதோஷம்