Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 61 · 126 / 159

மதுரையில் நடராஜர் கால் மாறி ஆடக்காரணம் என்ன...

சிவபெருமான் நடனம் புரிந்த 5 தலங்களில் மதுரையும் ஒன்று. இங்குள்ள வெள்ளியம்பலத்தில் மட்டுமே சுவாமி கால்மாறி நடனம் ஆடுகிறார். மற்ற தலங்களில் இடதுகாலை தூக்கி ஆடியிருக்கிறார். கால்மாறி ஆட காரணம் என்ன... மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியன் தன் மகன் ராஜசேகர பாண்டியனுக்கு முடிசூட்டிவிட்டு இறந்தார். ராஜசேகரனும் சிவபக்தன். இவர் மீனாட்சி கோயிலில் வெள்ளியம்பலத்தில் நடனம் புரியும் நடராஜரை தினமும் தரிசிப்பது வழக்கம். சுவாமியின் பரத கலையை தவிர்த்து மற்ற 63 கலைகளில் தேர்ச்சி பெற்றவர். கரிகாலன் ஆட்சிபுரிந்த சோழநாட்டில் இருந்து புலவர் ஒருவர் மன்னர் ராஜசேகரனை பார்க்க வந்தார். ‘என் நாட்டு மன்னன் 64 கலைகளையும் கற்றவர். நீயோ பரதக்கலையில் தேர்ச்சி இல்லாதவன்’ என கிண்டலடிக்க, கோபத்தில் அந்த கலையையும் ராஜசேகரன் கற்றார். அந்த கலையை கற்கும்போது உடல்வலி ஏற்பட்டதை உணர்ந்தார். ‘அவ்வப்போது ஆடும் நமக்கே இப்படி கால் வலிக்கிறதே. வெள்ளியம்பலத்தில் எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும் சுவாமிக்கு எப்படி கால் வலிக்கும்’ என சிந்தித்தார். அந்த சிந்தனையோடு சுவாமியை தரிசித்த போது ‘எம்பெருமானே, நின்ற திருவடியை எடுத்து வீசி எடுத்த திருவடியை கீழே ஊன்றி அடியேன் காணும்படி மாறி ஆடவேண்டும்’ என வேண்டினார். உடனே அதை ஏற்று இடதுகாலை தரையில் ஊன்றி வலது காலை தாக்கி சுவாமி ஆடினார். தான் கண்ட காட்சியை மற்றவர்களும் காண வேண்டும் என மன்னர் வேண்டினார். சிவபெருமானும் அதை ஏற்று வலது காலை தூக்கி ஆடுவது போல் காட்சி கொடுத்தார்.

Advertisement
Advertisement
Top
Advertisement