Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 63 · 133 / 159

புட்டு கொடுத்தால் சிவலோகம்

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றுதான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை. இந்த லீலை நடைபெற்ற தலம்தான் ஆரப்பாளையத்தில் உள்ள புட்டுத்தோப்பு. இங்கு புட்டு சொக்கநாதர் கோயில் உள்ளது. வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதுரை நகரமே ஸ்தம்பித்தது. வெள்ளத்தை கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென அரிமர்த்தன பாண்டிய மன்னர் உத்தரவிட்டார். இச்செய்தி மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்து வந்தாள். அவள் முதுமையிலும் பிட்டு விற்று பிழைத்தவள். முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்து விட்டு, அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர் அவிக்கும் பிட்டை விற்க ஆரம்பிப்பாள். வெள்ளத்தை தடுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. வந்தியம்மைக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. வயதான காலத்தில் தன்னால் கரையை அடைக்க முடியாது என்பதால் கூலிக்கு ஆள் தேடினாள். இதை அறிந்த சொக்கநாதர், மூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். வந்தியின் முன் மாறுவேடத்தில் வந்து நின்றவர், "பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலைவதாக கேள்விப்பட்டேன். நானே உனக்கு பதிலாக வேலை செய்கிறேன். கூலியாக நீ அவிக்கும் பிட்டை மட்டும் கொடுத்தால் போதும்" என்று கூறினார். பாட்டியும் ஒத்துக்கொண்டார். தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்றார். வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து சுறுசுறுப்பாக மண் வெட்டினார். அதன் பிறகு பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். திடீரென வந்தியின் வீட்டுக்குச் சென்று, பாட்டி பிட்டு கொடு கூலியில் கழித்துக்கொள் என வாங்கி சாப்பிட்டார். அதோடு ஒரு பகுதியை வேலை செய்யுமிடத்தில் நின்றவர்களுக்கும் கொடுத்தார். அவ்வப்போது ஆடினார், பாடினார். தன்னுடன் வேலை செய்தவர்களையும் ஆடவைத்தார். இப்படி அவரது இடத்தில் வேலை நடக்கவில்லை. அந்நேரம் பார்த்து அரிமர்த்தன பாண்டிய மன்னரே பணிகளைப் பார்வையிட அங்கு வந்தார். அவரைக் கண்டதும் சொக்கநாதர், ஒரு மரத்தடிக்குச் சென்று, தூங்குவது போல நடித்தார். இதை கவனித்த மன்னர் அருகில் இருந்த கண்காணிப் பாளரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கினார். சொக்கநாதரின் முதுகில் ஓங்கி ஒரு அடிவிட்டார். ஆனால் மன்னர் ஆவென அலறினார். அவர் மட்டுமல்ல! அங்கு நின்றவர்களெல்லாம் அலறினர். உலகமே அலறியது. அடி வாங்கியவர் எழுந்தார். ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். வெள்ளம் வற்றிவிட்டது. இதை எல்லாம் கண்டுவியந்த மன்னர், கூலியாளை பார்த்தார். அவர் சட்டென மறைந்தார். அப்போது தான் மன்னருக்கு புரிந்தது. கூலியாளாய் வந்தது சொக்கநாதர்தான் என்று. இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்றார். அப்போது வானில் இருந்து புஷ்பக விமானம் அவள் வீட்டு முன்பு இறங்கியது. அதில் வந்தவர்கள் அவளிடம், “தாயே! நாங்கள் சிவகணங்கள். தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார். எங்களுடன் வாருங்கள்" என அழைத்துச் சென்றனர். அவளும் மகிழ்ச்சியுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலைப் போலவே, இங்குள்ள புட்டு சொக்கநாதரின் வலதுபக்கம் மீனாட்சி அம்மன் இருக்கிறாள். எனவே இது திருமணக்கோல சன்னதியாகும். சிவபெருமான் வந்தியம் மைக்கு இந்த இடத்தில் தான் மோட்சம் கொடுத்தார். அதன் அடிப்படையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. எனவே இங்கு மட்டுமே வந்தியம்மைக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள ஒரு பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் இருப்பது சிறப்பு. இதனால் இவர் 'இரட்டை கால பைரவர்' எனஅழைக்கப்படுகிறார். பிரகாரத்தைச் சுற்றிலும் விநாயகர், பாலமுருகன், சரஸ்வதி, மகாலெட்சுமி, சுந்தரானந்தர், துர்கை, வீரபத்திரர், சப்தகன்னிமார், கல்யாண விநாயகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கலியநாயனார், ஐயப்பன், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், இரட்டைகால பைரவர், ஆஞ்சநேயர், நவக்கிரகம் போன்ற தெய்வங்கள் உள்ளன. வந்தியம்மை தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் இங்கு புட்டு திருவிழா நடைபெறும். அன்று மட்டுமே இங்கு புட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள உற்ஸவ வந்தியம்மை, இங்கு வந்து அலங்காரம் செய்து முக்தி பெற்று பூப்பல்லக்குடன் மீண்டும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும். இத்திருவிழாவிற்கு திருப்பரங் குன்றத்திலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியரும், மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பிரியாவிடை, மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரரும், திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகரும் வருகை தருவர். அன்று மட்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

எப்படி செல்வது
மதுரை ஆரப்பாளையம்

பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,

நேரம்
காலை 6:00 - 10:30; மாலை 5:00 8:30 மணி
தொடர்புக்கு
93622 29296

விஷேச நாள்: ஆவணி பூராடம் புட்டு திருவிழா, பிரதோஷம், மஹாசிவராத்திரி, தமிழ் மாத பிறப்பு, பவுர்ணமி

Advertisement
Top
Advertisement