Special supplement · Part 3 · page 66 · 149 / 159
முக்தி தருபவர்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் உள்ளன. அதில் காற்றுக்குரிய ஸ்தலமாக உள்ளது தெப்பக்குளம் அருகே உள்ள முக்தீஸ்வரர் கோயில். ஒருமுறை துர்வாச முனிவர், சிவபூஜை செய்த மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அம்மலரை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைக்க, ஐராவதம் அதை கீழே வீசியது. புனிதமான மலரை இந்திரனும், ஐராவதமும் அலட்சியப்படுத்தினர். கோபம் கொண்ட முனிவர் சாபமிட்டார். இந்திரன் தேவதலைவன் பதவியை இழந்தான், ஐராவதம் காட்டு யானையாக வாழ்ந்தது. சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம், வில்வவனமாக இருந்த இங்கு சிவனை பூஜித்தது. மனம் இரங்கிய சிவன், அதற்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார். பிற்காலத்தில் இவ்விடத்தில் திருமலைநாயக்கரின் அண்ணன் முத்துவீரப்ப நாயக்கர் கோயில் கட்டினார்.
தல சிறப்பு
பெரும்பாலான சிவன் கோயில்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங்களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால் இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில் என 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார். இதனால் இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. இத்தலத்தில் ஒரே இடத்தில் நின்று அம்பாளையும், சிவனையும் தரிசனம் செய்யலாம். முன்புறம் உயரமான நந்தி, நடராஜர், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், துர்கை, விநாயகர் ஆகியோரும் உள்ளனர்.
பிரார்த்தனை
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், கண்ட கனவுகள் நிறைவேறவும் இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர். இரண்டு வில்வமரங்களில் வடமேற்கே உள்ள வில்வமரத்தின் கீழ் விநாயகர் வீற்றிருக்கிறார்.
வீணை தட்சிணாமூர்த்தி
பிரகார கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி கையில் வீணை கொண்டு அமர்ந்திருக்கிறார். இவரை வணங்கினால் கல்வி, கேள்வி, இசையில் சிறந்து விளங்கலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் 48 நாட்கள் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுகின்றனர்.
- எப்படி செல்வது
- மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கி.மீ.,
- நேரம்
- காலை 6:00 – 11:00 மணி; மாலை 4:00 – 8:30 மணி
- தொடர்புக்கு
- 0452 – 234 9868, 234 4360
- விஷேசநாள்
- பிரதோஷம் மகாசிவராத்திரி, நவராத்திரி ஆடி, தை மாதத்தில் விளக்கு பூஜை