Special supplement · Part 3 · page 66 · 148 / 159
நோய்களை தீர்ப்பவர்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் உள்ளன. அதில் நெருப்புக்குரிய ஸ்தலமாக உள்ளது தெற்கு மாசி வீதியில் உள்ள தென்திருவாலவாயர் கோயில்.
மதுரையில் சைவ சமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த காலம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவ சமயத்தை சேர்ந்தவர். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறார். அவரது மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். கணவரின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் உஷ்ணத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயை தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று திருஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடி, அந்த திருநீற்றை உன் கணவன் மீது பூசினால் வெப்பு நோய் தீரும்’ என்றார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது. சிவபெருமானின் அருளை நினைத்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் கூன்பாண்டியன். அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு மாறி சிவத்தொண்டு புரிய ஆரம்பித்தார். ‘மந்திரமாவது நீறு’ என்னும் திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம் இதுவே.
தென்திருவாலவாய்
பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை நகரின் எல்லை எதுவென்ற தெரியாமல் போனது. மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க விரும்பிய சேகர பாண்டிய மன்னன் சுவாமியிடம் வேண்டினார். அப்போது சிவபெருமான் ‘ஆலவாய்’ என அழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசுகிறார். அந்த பாம்பு மதுரை ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது. அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்தது. அதனால்தான் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது. ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து ‘தென் திரு ஆலவாய்’ என்று பெயர் வந்தது.
அஸ்வத்த பிரதட்சணம்
அஸ்வத்தம் என்றால் அரசமரம். பிரதட்சணம் என்றால் வலம் வருதல். இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து, திருவாலவாய சுவாமியை வணங்கினால் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயும் குணமாகும். நீண்ட ஆயுள் வேண்டுபவர்களும் இந்த பரிகாரத்தை செய்கின்றனர். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும், அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.
எமன் வழிபட்ட தலம்
தனக்கு நோய் வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் மனிதர்களது உயிரை எடுக்கும் அந்த எமனுக்கும் அந்தப்பயம் வந்துவிடுகிறது. அவர் சிவபெருமானை வேண்டவே, ‘‘தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று அங்குள்ள சுவாமியை வழிபட்டு திருநீறு பூசு. இனி உனக்கு மரணபயமே கிடையாது’’ என்றார் சிவபெருமான். உடனே எமனும் இங்கு வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். எனவே இங்கு வந்து சுவாமியை வணங்கினால் நோய்கள் தீரும். மனநிம்மதி கிடைக்கும். இத்தலத்து அம்பாளான மீனாட்சியை வணங்கினால் திருமணம், குழந்தை வரம் கிடைக்கும். இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும்.
- எப்படி செல்வது
- மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் உள்ளது.
- நேரம்
- காலை 6:30 – 11:00 மணி; மாலை 5:00 – 9:00 மணி
- தொடர்புக்கு
- 0452 – 2344 360
- விஷேசநாள்
- பிரதோஷம், கந்த சஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோம வாரம், மகாசிவராத்திரி.