Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 68 · 154 / 159

எழுகடல் தீர்த்த நீராடல்

மலையத்துவஜனின் மகளான தடாதகைப் பிராட்டியை திருமணம் செய்தார் சோமசுந்தரப் பெருமான். பாண்டியநாட்டை சிறப்பாக அரசாட்சி செய்து வந்தார். ஒருமுறை மதுரைக்கு கவுதம முனிவர் வந்தார். அவர் அவைக்கு வந்து, சோமசுந்தர பெருமானை வேதகோஷங்களைப் பாடி பணிந்தார். இந்த ரிஷியின் வரவால் தடாதகைப் பிராட்டியின் அம்மாவான காஞ்சனமாலைக்கு பெருமிதமும், பேரின்பமும் உண்டானது. தவவாழ்க்கையே தன்வாழ்க்கையாக கொண்ட துறவியான கவுதமரிடம் உபதேசம் பெற எண்ணம் கொண்டாள். அவரை உயர்ந்த ஆசனத்தில் அமரச்செய்து, தான் கீழே அமர்ந்து, ‘‘தவசிரேஷ்டரே! அடியேனின் நாட்டிற்கு தாங்கள் எழுந்தருளி இருப்பது நாங்கள் செய்த தவப்பயன். பிரம்மஞானியான தங்களிடம் பிறவித் துன்பத்தை போக்குவ தற்குரிய ஞானமார்க்க நெறிமுறைகளை உபதேசம் பெற விரும்புகிறேன்’’ என்று விழுந்து வணங்கினாள். அதற்கு அவர், ‘‘தேவியே! மூவுலகு போற்றும் பரமனுக்கு பெண் கொடுக்கும் பேறு பெற்ற மலையத்துவஜ பாண்டியனின் பட்டமகிஷி நீங்கள்! தாங்கள் பெற்ற பேற்றினை இவ்வுலகில் யாரும் பெற்றதில்லை. பிறவிப்பிணி தீர்க்கும் ஞானஉபதேசங்களை உபதேசிக்கிறேன்’’ என்று உபதேசங்களை சொல்லத் தொடங்கினார். ‘‘இப்பூவுலகத்தில் குற்ற மற்ற தவங்கள் மூன்று வகைப்படும். அவை மானதம், வாசிகம், காமிகம் என்பனவாகும். முதலாவதான மானதம் என்பது மனதால் செய்யப் படுவதாகும். மனதில் உள்ள தீய எண்ணங்களை அடியோடு போக்கி, உண்மையைப் பேசுதல், கடவுளை நெஞ்சில் நிறுத்துதல், மனதைக் கட்டுப்படுத்துதல் போன்றவைகள் ஆகும். வாசிகம் என்பது வாக்கால் செய்யப்படுவதாகும். ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிப்பது, வேதநூல்களை ஓதுவது, ஸ்ரீருத்ரத்தை ஜபிப்பது வாக்கினால் செய்யும் தர்மங்களாகும். காமிகம் என்பது உடலால் விருப்புடன் செய்வதைக் குறிக்கும். வில்வ இலைகளால் பூஜிப்பது, கோயிலுக்குச் செல்வது, பிரகாரத்தை வலம் வருவது, தலயாத்திரை செய்வது, புனித கடல்தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது என்பனவாகும். கவுதம மகரிஷியின் உபதேசத்தைக் கேட்ட காஞ்சனமாலை ஒரு பொன்தட்டில் பொன், மலர்கள், பழங்கள், தாம்பூலம் என்று திரவியங்களை வைத்துக் கொடுத்தாள். கவுதமரின் உபதேசத்தின்படி காஞ்சனமாலையும் கடல்தீர்த்தங்களில் நீராட ஆவல் கொண்டாள். தாயின் எண்ணத்தை அறிந்த தடாதகை கணவர் சொக்கரிடம், தன் தாயின் ஆசையை நிறைவேற்றித்தரும்படி வேண்டினாள். அவரும், ‘‘தடாதகையே... தயங்க வேண்டாம். ஏழுகடலையும் மாமிக்காக மதுரைக்கு வரச் செய்வோம்’’ என்று ஆணை பிறப்பித்தார். ஏழு கடல்களும் பெண்களின் வடிவில் எழுகடல் தெருவில் உள்ளது.

Advertisement
Top
Advertisement