Special supplement · Part 3 · page 68 · 153 / 159
ஆதி சொக்கநாதர்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் உள்ளன. அதில் ஆகாய ஸ்தலமாக உள்ளது சிம்மக்கல்லில் உள்ள ஆதிசொக்கநாதர் கோயில்.
மதுரையை குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தார். இவர் கல்வியில் சிறந்தவர். தமிழ்ச்சங்க புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர் இதையறிந்து பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு தான் கொண்டு வந்த பாடலால் மன்னரைப் புகழ்ந்து பாடினார். பாடலைப் பார்த்து இவர் மீது பொறாமை கொண்டார் மன்னர். இதனால் இடைக்காடரை உபசரிக்கவில்லை. மனம் வருந்திய இடைக்காடர், சொக்கநாதரிடம் சென்று, ‘‘சுவாமி... பாண்டிய மன்னன் தமிழ்புலமை வாய்ந்தவன் என்று நினைத்து அவனைப் பாடினேன். ஆனால் அவனோ என்னை அவமதித்து விட்டான். அவன் என்னை அவமதித்தானா அல்லது உன்னை அவமதித்தானா என்பது தெரியாது’’ என முறையிட்டு கோபத்துடன் வடக்குதிசை நோக்கி சென்றார். இதைக் கேட்ட சிவன் தன்னுடைய லிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியுடன் கோயிலுக்கு நேர் வடக்கே வந்து அமர்ந்து, மன்னனுக்கு பாடம் புகட்டுவதாக கூறினார். அதன்படி இத்தலத்திற்கு எழுந்தருளினார். மறுநாள் திருப்பள்ளியெழுச்சி நேரத்தில் மதுரை சொக்கநாதரை தரிசிக்க வந்தனர் பக்தர்கள். அங்கு சிவலிங்கத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இந்த விஷயத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவிக்க வந்தார்கள். அப்போது நகரமே பொலிவிழந்து இருப்பதையும் கண்டார்கள். இதையெல்லாம் மன்னரிடம் தெரிவித்தனர். உடனே மன்னர், ‘‘சுவாமி... நான் செய்த தவறு என்ன? தாங்கள் உமா தேவியுடன் இங்கிருந்து எங்கு சென்றீர்கள்’’ கெஞ்சி மன்றாடினான். ‘இடைக்காடரை அவமதித்த தால் யாம் வைகை ஆற்றுக்கு தென்கரையில் உள்ள கோயிலில் எழுந்தருளியுள்ளோம்’ என அசரீரி ஒலித்தது. மன்னர் இத்தலத்திற்கு ஓடோடி வந்து சுவாமியை வணங்கி மன்னிப்பு கேட்டார். இதனால் மகிழ்ந்த சொக்கநாதர், ‘‘பாண்டியனே! எல்லாத் தலங்களிலும் திருவாலவாயே உயர்ந்தது. மேலும் யாம் இருக்கும் லிங்கங்களிலேயே எனது தோழன் குபேரன் பூஜித்த இந்த லிங்கம் சிறப்பு வாய்ந்தது. எனவே இன்று முதல் இந்த தலம் உத்தரவாலவாய் என்று அழைக்கப்படும்’’ என்றார். இதனால் இத்தலம் ஆதிசொக்கநாதர், பழைய சொக்க நாதர், வடதிருவாலவாய் என்றும் அழைக்கப்படுகிறது.
தலசிறப்பு
செல்வத்திற்கு அதிபதி குபேரன். இந்த குபேரனே தன்னிடம் உள்ள செல்வம் மேலும் பெருக இங்கு வந்து வழிபட்டுள்ளார். எனவே இங்கு வழிபட்டால் செல்வம் சேரும். குபேர வாழ்வு அமையும். நவகிரகத்தில் புதன் இங்கு வந்து வழிபட்டதால் இத்தலம் புதன் ஷேத்திரமாகவும் விளங்குகிறது. புதனுக்கு பரிகாரம் செய்பவர்கள் பாசிப்பருப்பு சுண்டல், பச்சை நிறத்தில் ஆடை என அணிந்து வருகிறார்கள்.
- எப்படி செல்வது
- மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
- நேரம்
- காலை 6:00 – 11:30 மாலை 4:30 – 9:00 மணி
- தொடர்புக்கு
- 0452 – 234 4360
- விஷேசநாள்
- ஐப்பசி பவுர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, பவுர்ணமியில் சாந்தாபிஷேகம்