Meenakshi Amman Temple

Special supplement · Part 1 · page 25 · 2 / 159

1963ல் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் காஞ்சி மஹாபெரியவர் ஆசியுரை

நம்மையும் நம் செயல்களையும் இயங்கச் செய்யும் சக்தியே பராசக்தி. அந்த பராசக்தியே அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கிறாள். நாம் பெற்றோரை தெய்வமாக நினைக்க வேண்டும் என்பதை தான் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றார் மூதாட்டி அவ்வையார். எல்லா குழந்தைகளுக்கும் எப்போதும் தாயாக இருப்பவள் அம்பிகை. அவளைக் கொண்டாடுவது அவசியம். நாம் எல்லோரும் அவளின் குழந்தைகள் என்பதால் பராசக்தியை தாயாக நினைத்து வழிபட்டால் அவள் நம்மை வாழ வைப்பாள். அவள் நம் குற்றங்களை மன்னிக்கிறாள். குறைகளை பொறுக்கிறாள். துன்பங்களைப் போக்குகிறாள். இவளே மதுரையில் மீனாட்சியம்மனாக ஆட்சி செய்கிறாள். மீனைப் போல கண் இமைக்காமல் உயிர்கள் அனைத்தையும் தன்னுடைய கடைக்கண் பார்வையால் காப்பாற்றுகிறாள். பஞ்சரத்தின ஸ்தோத்திரத்தில் ஜகத்குரு பகவத்பாதாள் (ஆதிசங்கரர்) மீனாட்சியம்மனை போற்றுகிறார்.

உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்ஜவலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

கடவுளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பதை மதுரையில் சொக்கநாதர் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் உணர்த்துகின்றன. வந்தியம்மை என்ற பக்தைக்காக சிவனே மண் சுமந்து பிரம்படியை ஏற்றார். தாயாகத் தோன்றி பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டினார். நாரைக்கு முக்தி அளித்தார். இப்படி உயிர்களுக்கு எல்லாம் அம்மையப்பராக விளங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நமக்கு அருள்புரிவாராக.

Advertisement
Top
Advertisement