Meenakshi Amman Temple

Special supplement · Part 1 · page 28 · 22 / 159

உலகாளும் சிவபெருமானும், பார்வதியும்

புதுமணத் தம்பதியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின் மறுநாள் மாசி வீதிகளில் தனித்தனி தேரில் மாசி வீதிகளில் நகர்வலம் வருவர். ‘ஊர் கூடித் தேர் இழுப்பது போல’ என்பது போல, ஜாதி பாகுபாடு, பணக்காரர், ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இத்திருவிழாவில் பங்கேற்பர். இதன் மூலம் கடவுள் அனைவருக்கும் பொதுவானர் என்ற உண்மை உணர்த்தப்படுகிறது. நாடாளும் மன்னர் தேரில் பவனி வருவது போல, உலகாளும் மன்னரான சிவபெருமானும், பார்வதியும் இந்நாளில் தேரில் எழுந்தருள்கின்றனர். திருமலைநாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே தேர் திருவிழா மதுரையில் நடந்ததை திருப்பணி மாலை என்னும் நூல் தெரிவிக்கிறது. தற்போதுள்ள தேர்கள் 17ம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் (1706- – 1732) செய்யப்பட்டவை. இவர் ராணி மங்கம்மாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கீழமாசியில் இருக்கும் தேர் மண்டபம், தேர் திருவிழா மாசி மாதத்தில் நடந்ததை நினைவூட்டுவதாக உள்ளது. தேரைச் சுற்றி மதுரை தலவரலாறு, சிவமகாபுராணம், திருவிளையாடல்கள் குறித்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முகப்பிலுள்ள குதிரை வீரர் சிற்பங்கள் நாயக்கரின் காலப் பாணியில் உள்ளன. மையப்பகுதியில் திருமால் தன் தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரை வார்க்கும் சிற்பம் உள்ளது. அன்ன வகானத்தில் ரதியும், மன்மதனும் மலர்க்கணையுடன் இருக்கும் சிற்பம் புதுமணத் தம்பதியருக்குள் அன்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. குழலூதும் கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், தேவியருடன் விஷ்ணு, கஜலட்சுமி, நரசிம்மரை இரண்யர் வதம் செய்தது, திருமாலுக்கு சிவன் சக்கராயுதம் கொடுத்தது போன்ற திருமாலின் சிற்பங்கள் சைவத்தோடு வைணவ ஒற்றுமையையும் காட்டுவதாகும். நாயன்மார்களில் கண்ணப்பர், காரைக்காலம்மையார், சண்டேஸ்வர நாயனார் ஆகிய மூவரின் வரலாறும் தேரில் செதுக்கப்பட்டுள்ளன. சிவமகாபுராண சிற்பங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி, ரிஷபவாகனர், நடராஜர், பைரவர், அர்த்தநாரீஸ்வரர், தட்சனை வதம் செய்யும் வீரபத்திரர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மாணிக்கவாசகரோடு தொடர்புடைய வாதவூரருக்கு உபதேசம், நரிகளைப் பரிகளாக்குதல், வந்தியம்மைக்காக பிட்டுக்கு மண் சுமத்தல், சம்பந்தரின் சமணரோடு வாதிடுதல் ஆகியவை சிறப்பானவை. அடித்தட்டு மக்களின் வாழ்வைக் காட்டும் விதத்தில் மனைவியிடம் அன்பை காட்டும் வேடன், பாம்பாட்டி ஆகியவை தேரில் இடம்பெற்றுள்ளன. தாமரை மலர் போன்று அமைக்கப்பட்ட மதுரை நகரில், அதன் இதழ்கள் போல வீதிகள் அமைக்கப்பட்டன. சித்திரை திருவிழாவின்போது சுவாமி, அம்மன் தேரில் செல்கின்றனர். அப்போது நான்கு மாசி வீதிகளையும் தேர் சுற்றி வருகிறது. சதுர வடிவில் அமைந்துள்ள இந்த வீதிகளின் நான்கு முனைகளிலும் தேரை திருப்புவது சிரமம். எனவே தேர் திரும்ப வேண்டிய இடத்திற்கு நேராக வடத்துடன் பக்தர்கள் தெருக்களில் நுழைவார்கள். அப்போது தேரின் கீழே இருக்கும் கட்டை போடுபவர், லாவகமாக தேரை திசை திருப்புவார். தேரின் வடத்தை கொண்டு போவதற்காக அமைக்கப்பட்ட வீதிகள் என்பதால் இவை ‘வடம்போக்கு தெருக்கள்’ எனப்பட்டு, காலப்போக்கில் ‘வடம்போக்கி’ தெருக்கள் என்றானது. இந்த தெருக்கள் மாசி வீதியின் நான்கு திசைகளிலும் அமைந்துள்ளன.

Advertisement
Top
Advertisement