Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 38 · 64 / 159

வைகையில் ஆராட்டுவிழா

இளையான் குடியிலுள்ள முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு ஒன்று மதுரைக் கோயில் குறித்துப் பல செய்திகளை தருகின்றன. இம்மன்னனின் அதிகாரியாக விளங்கிய இளையான் குடியைச் சார்ந்த கங்கை கொண்ட சூரிய தேவன் வாணாதிராயன் காலிங்கராயன் என்பவன் திருவாலவாயுடைய நாயனார் குறிப்பிட்ட திருநாட்களில் வைகையாற்றில் தீர்த்தம் ஆடியருள வைகையாற்றங்கரையில் காலிங்கராயன் என்ற தனது பெயரில் மண்டபம் ஒன்றைக் கட்டுவித்துள்ளான் என்று இளையான் குடி பெருமாள் கோயில் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இவனே மதுரைக் கோயிலில் தனது பெயரால் சூரிய தேவர் திருமேனியும் ஈஸ்வரவுடையார் திருமேனியையும் செய்து கொடுத்துள்ளான். இவரது மனைவியின் பெயரால் திருவுடைய நாச்சியார் திருமேனியை செய்தளித்துள்ளான் என்று கல்வெட்டு கூறுகிறது.

ஏழுகடல்

கிருஷ்ண தேவராயரின் தர்மமாக அவரது அதிகாரியாக விளங்கிய சாளுவ நரசநாயக்கர் என்பவர் மதுரையில் புது மண்டபத்திற்குக் கிழக்கே ஏழுகடல் என்று அழைக்கப்படும் குளத்தினை 1516ல் தோற்றுவித்தான். இதற்குச் ‘சப்தசாகரம்’ என்று பெயரும் இட்டான் என்று கல்வெட்டு தெரிவிக்கின்றது.

வீரப்ப நாயக்கர் மண்டபம்

சுவாமி சன்னதியில் உள்ள கம்பத்தடி மண்டபத்தினை அடுத்துள்ள வீரபத்திரர், காளி, ஊர்த்துவ தாண்டவர் ஆகியோர் சிற்பங்கள் அடங்கிய பெருமண்டபத்தினை 1583 ல் வீரப்ப நாயக்கன் எடுப்பித்துள்ளான். இதனை அம்மண்டபத்து தூண் ஒன்றில் தமிழ், தெலுங்கு மொழிகளில் அமைந்த கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கோசாலை மடம்

போசள (ஹொய்சாளர்) மன்னன் வீர சோமேஸ்வரனால் நின்றியங்கிடுவார் என்ற பிச்சாமட்துச் சந்தானம் கேட்டுக் கொண்ட படி கோசாலைமடம் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காகும் செலவினங்களுக்காக திருவேடகத்திலும் பறப்பு நாட்டு இடைக்குடியிலும் நிலங்கள் தானமாக தரப்பட்டன. இம்மடத்தின் முப்பது பசு மாடுகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவற்றைக் கண்காணித்து பராமரிப்பதற்காக ஆண்டார்கள் வைராகிகள் என்றழைக்கப்பட்ட பணியாட்கள் பதினைந்து பேர்கள் நியமிக்கப்பட்டதைச் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

சுவாமி சன்னதி கோபுரம்

கம்பத்தடி மண்டபத்திற்குக் கிழக்கே அமைந்த கோபுரத்தினை அச்சுத தேவராயருக்குப் புண்ணியமாக விசுவப்ப நாயக்கர், ஈசுவரப்ப நாயக்கர் போன்றோர்கள் சேர்ந்து எடுப்பித்துள்ளனர்.

Advertisement
Top
Advertisement