Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 38 · 63 / 159

வல்லப விண்ணகரம்

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு புறநகர் அவனியாபுரம். மிகப் பழமையான குடியிருப்புப் பகுதியான இவ்வூர் பாண்டிய மன்னனின் அவனி நாராயணன் அவநிபசேகரன் என்ற பெயர்களை அடியொற்றி எழுந்த பெயராகும். இந்த அவனியாபுரத்தின் கிழக்கில் வள்ளானந்தபுரம் என்னும் பெயரில் ஒரு குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இதுவும் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டிய மன்னனின் பெயரால் அமைந்த ஊர். 1104 – 1125ல் இவ்வூரில் வாழ்ந்த ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டிய மன்னனால் ஸ்ரீவல்லப விண்ணகரம் என்ற பெருமாள் கோயில் கட்டப்பட்டது. அதனைப் பராமரிக்க பிராமணர்களைக் குடியமர்த்தி ஸ்ரீவல்லப மங்கலம் என்ற குடியிருப்பையும் அவன் உருவாக்கினான். ஆனால் அக்கோயிலும், குடியிருப்பும் இல்லை. சில உடைந்த கற்களில் காணப்படும் கல்வெட்டுகளைக் கொண்டே இதனை நாம் அறிய முடிகிறது. இக்கோயில் இருந்த இடத்தில் ராணி மங்கம்மாள் காலத்தில் அனுமார் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து ஆவியூர், காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கும், திருச்சுழிக்கும் ஒரு சாலை மங்கம்மாளால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மங்கம்மாள் சாலை என்று பெயர். இக்கோயிலின் அருகிலேயே கிணறு ஒன்று இருந்துள்ளது. இது நடைப்பயணத்து மக்களின் தாகத்தை தீர்த்துள்ளது. மங்கம்மாளின் பெயரில் வழங்கிய அக்கிணறும் தற்போது இல்லை. இன்று மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில் மட்டுமே உள்ளது. இக்கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு கல்லில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டே பல செய்திகளைத் தருகிறது. பலகைக் கல் ஒன்றின் மூன்று புறமும் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு மொத்தம் 86 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. சக வருஷம் 1615 (1693ல்) முத்தியப்ப நாயக்கருக்குப் புண்ணியமாக அவருடைய புத்திரி மங்கம்மாள் அவநியாபுரத்தில் கட்டின அனுமார் ஆழ்வார், அலங்காரப் பிள்ளையார் கோயில் என்று கல்வெட்டில் கூறப்படுகிறது. இக்கோயிலுக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மங்கம்மாள் காலத்தில் இவ்விரண்டு கோயில்களுக்கும் இரண்டு ‘மா’நிலம் கொடுக்கப்பட்டது. இக்கோயிலை நிர்வகிக்க ஆந்தேரய கோத்திரத்தைச் சேர்ந்த கேடாழப் பய்யங்கார் புத்திரன் சீனிவாசயங்கார் என்பவர் நியமிக்கப்பட்டார். இக்கல்வெட்டின் அருகிலேயே நடப்பட்டுள்ள மற்றொரு ஸ்தம்பத்தில் ராணிமங்கம்மாளின் இடையில் உடைவாளோடும் அஞ்சலி கரத்தோடும் வடிக்கப்பட்டுள்ளாள். மங்கம்மாளின் வரலாற்றுக்கு இக்கல்வெட்டு ஒரு புதிய வரவு.

Advertisement
Advertisement
Top
Advertisement