Special supplement · Part 2 · page 39 · 66 / 159
மதுரையின் பெயர்கள்
- மதுரையின் பெயர் காரணத்தை திருவிளையாடல் புராணம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது. சிவபெருமான் தன் சிரசில் அணிந்திருக்கும் பொன்மயமான சந்திரகலையின் தேன் போன்ற அமுதம் போன்ற கிரணங்களை இந்த நகரத்தில் தெளித்தார். இந்த அமுதம் நகரம் முழுவதையும் அமிர்தமயமாக்கியது. மேலும் அவ்வமுதம் மதுரமாகிய இனிப்பு தன்மையைக் கொண்டிருந்தது, இதனால் இந்நகர் மதுராநகர் (மதுரை) என அழைக்கப்பட்டது.
- மதுரை மீது பெருமழையை பெய்யச் செய்தான் வருணன். அப்போது சிவபெருமான் மேகங்களை நான்கு மாடங்கள் போன்று அமைத்து மதுரையை நோக்கி அனுப்பி நகரை பாதுகாத்தார். நான்கு மாடங்கள் கூடி மழையில் இருந்து மதுரையைக் காப்பாற்றியதால் ‘நான்மாடக் கூடல்’ என மதுரை பெயர் பெற்றது.
- பண்டைய காலத்தில் தாமரை வடிவத்தில் மதுரை நகரை அமைத்தார்கள். அந்தத் தாமரையின் மையப்பகுதியில் மீனாட்சி அம்மன் கோயில் அமைந்தது. அதன் இதழ்கள் போன்று வீதிகள் அமைந்தன என சங்க இலக்கியமான பரிபாடல் கூறுகிறது.