Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 40 · 70 / 159

எல்லாம் வல்ல சித்தர்

மன்னரான அபிஷேகப் பாண்டியனுக்கு முக்தி கொடுக்க எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார் சிவபெருமான். ஒருநாள் மதுரை சொக்கநாதரை தரிசிக்க வந்தார் மன்னர். அப்போது எதிர்பட்ட சித்தரிடம், ‘‘தாங்கள் யார்? என்ன வேண்டும்’’ எனக்கேட்டார். ‘‘எனக்கு ஒன்றும் வேண்டாம். நீங்கள் கேளுங்கள். தருகிறேன்’’ என்றார். அவரை சோதிக்க விரும்பிய மன்னர் ஒரு கரும்பைக் கொடுத்து, ‘‘இதை இங்குள்ள கல் யானை உண்ணுமாறு செய்வீரா’’ எனக்கேட்டார். சித்தர் அந்த யானையின் சிற்பத்தை பார்க்கவே, அது உயிர்பெற்று கரும்பை பிடிங்கி உண்டது. கூடவே மன்னரது முத்துமாலையையும் தின்றது. மெய்க்காவலர்கள் சித்தரை அடிக்க வந்தபோது சிலையாக மாறினர். தவறை உணர்ந்த மன்னர் மன்னிப்புக் கேட்டு, தனக்கு குழந்தை வரம் தருமாறும் வேண்டினார். அதன்படி சித்தர் வரம் அளித்து மறைந்தார். முத்துமாலையும் கிடைத்தது. பின்னாளில் மன்னர் முக்தியும் அடைந்தார். மீனாட்சி அம்மன் கோயிலில் எல்லாம் வல்ல சித்தருக்கு சன்னதி உள்ளது.

பூப்பந்தல் வழிபாடு

18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குகிறார். இதனால் அவர், ‘எல்லாம் வல்ல சித்தர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு இங்கு தனிசன்னதி உள்ளது. சித்தருக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. இவரது சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக்கொண்டால் வேண்டியவை நிறைவேறும். சிவனே இங்கு சித்தராக இருப்பதால் இவரது சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும் விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம்.

Advertisement
Top
Advertisement