Special supplement · Part 2 · page 42 · 78 / 159
மதுரைக்கோயில் கல்வெட்டுகள்
- இந்தியாவில் அதிகமாகக் கல்வெட்டுகள் காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் முப்பதாயிரம் கல்வெட்டுகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இக்கல்வெட்டுகளில் பெரும்பகுதி கோயில்களிலேயே உள்ளன. காலத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்கும் இவை தமிழ்நாட்டுக் கோயில்களின் தோற்றம் வளர்ச்சி கட்டடக்கலை, சிற்பக்கலை, வழிபாடு, கோயில் நிர்வாகம், கோயில் சார்ந்த கலைகள், சமுதாயம் பண்பாடு, நாகரீகம், பல்வேறு சமயங்களின் வரலாறு ஆகியவற்றை அறிய உதவும் ஆதாரங்களாகக் திகழ்கின்றன. இம்முறையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கல்வெட்டுகளும் அக்கோயிலின் வரலாற்றை அறிய உதவுகின்றன.
- மதுரையில் முக்கண் செல்வன் என்றழைக்கப்பட்ட சிவபெருமான் கோயில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளதைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது. இதனை தொடர்ந்து பரிபாடல் போன்ற பண்டைய இலக்கியங்கள் மதுரைக் கோயில் குறித்து தெரிவிக்கின்றன.
- ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தார். ‘அங்கயற்கண்ணியோடு அமர்ந்து விளங்கும் ஆலவாய் அண்ணல்’ என பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதாவது அக்காலத்திலேயே மீனாட்சி, சொக்கநாதருடன் அருளாட்சி செய்கிறார் என சொல்லியுள்ளார். மேலும் அவர் கபாலி என்றழைக்கப்பட்ட திருமதில்களுடன் கூடிய கட்டடக் கோயிலாக சொக்கநாதர் கோயில் திகழ்ந்தது என்றும் கூறியுள்ளார்.
- ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தொடர்ந்து முற்காலப் பாண்டியர் சோழர், இடைக்காலப் பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயரங்க மன்னர்கள், வாணாதிராயர் மதுரை நாயக்கர், ஆங்கிலேயர் காலங்களில் பல்வேறு வளர்ச்சிகளை கோயில் பெற்று வந்திருக்கிறது.
- கல்வெட்டுகளைப் பொறுத்தவரை 12ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை இக்கோயிலில் காணலாம். ஆனால் முன்புள்ள சோழர், முற்கால பாண்டியர் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படாதது வியப்பாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருக்க வேண்டும். காலவெள்ளத்தாலும் அரசியல் சமுதாய மாற்றங்களாலும் கல்வெட்டுப் பொறித்த கட்டடக் கற்கள் அழிவுக்குள்ளாகி இருக்கலாம். மதுரை நாயக்க மன்னர்கள் இக்கோயிலின் கருவறை முதலாக பல பகுதிகளை எடுத்து விட்டு புதிய மண்டபங்களோடு விரிவுபடுத்திக் கட்டிய போது பழங்கால கல்வெட்டுகள் இடம் பெயர்ந்து மறைந்திருக்க வேண்டும். இக்கோயிலையும் சுற்றுப்புறத்தையும் நன்கு ஆய்வு செய்தால் பழங்கல்வெட்டுகள் வெளிப்பட வாய்ப்புள்ளது.