Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 42 · 79 / 159

மன்னர் கொடுத்த தர்மங்கள்

கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு தர்மங்களை பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவை கோயிலில் நடைபெறும் நாள், மாத, ஆண்டு வழிபாடு, திருவிழாக்கள் ஆகியவற்றின் செலவினங்களுக்காக அளிக்கப்பட்டவையாகும்.

பிற்கால பாண்டியர் காலம்

  • கோயிலில் இரவும், பகலும் புறவிருளை அகற்றத் திருவிளக்குகள் எரிப்பதற்காகத் தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவாலவாயுடையாரின் கருவைறை வெளிப்புற வாயிலில் இரண்டு நிலை விளக்குகள் வைத்து எரிப்பதற்காக சடையவர்மன் குலசேகரப் பாண்டியனின் அகப்பரிவார முதலி என்றழைக்கப்பட்ட அதிகாரி ஒருவன் இருபது பொற்காசுகளைத் தானமாகத் தந்துள்ளான். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலும் இதே போன்று திருவிளக்கு எரிப்பதற்காகத் தானம் தரப்பட்டு இருக்கிறது.
  • கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது சுவாமி முன்னர் திருப்பதிகம் (தேவாரம்) பாடுவதற்குச் செண்டாடுவானான உத்தம பாண்டியப் பிச்சன் என்பவனுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் அருளாளன் சேவகத் தேவனான வாணாதிராயன் என்பவன் ஏற்படுத்திய சிறப்பு பூஜைக்கு வெண்பைக்குடி நாட்டு நம்பிதாய நல்லூர் என்ற ஊர் தானமாகத் தரப்பட்டுள்ளது.
  • மார்கழி திருநாளில் திருவெம்பாவை பாடுகின்ற பரதேசி கோவணவர் என்பவருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • திருவாலவாயுடையார் திருவுலா வந்து திருக்காமக்கோட்டத்தில் (மீனாட்சி சன்னதி) வாணாதிராயன் திருவாசல் என்றழைக்கப்ட்ட தெற்கு வாசலுக்கு வந்து நிற்கும் போது சுவாமிக்கு கேட்கும் படியாக அவ்விடத்தில் சாதாரிப்பண் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் திருவாலவாயுடையார் விறகு வெட்டியாக வந்து ஏமாநாத பாகவதரின் இசைச்செருக்கு அழியும் படி பாண பத்திரனுக்காகப் பாடிய பாடலின் பண் சாதாரிப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில், கர்நாடக மன்னன் போசளர் அரச மரபைச் சார்ந்த வீர சோமீசுவரன் என்பவர் இருந்தார். இவரது பிறந்த நாளான ஐப்பசி மாத மக நட்சத்திர நாளன்று திருவாலவாயுடையார்க்குச் பூஜை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காகப் பலவூர்களில் இருந்து வரி நீக்கிய நிலங்கள் இறையிலியாகத் தரப்பட்டன.
  • கருநிலக்குடி நாட்டிலுள்ள குண்டூரான குலசேகர மங்கலத்து நிலங்கள் ஆலவாய் சுவாமி மீது பூசுவதற்காகும் வாசனைத்தைல செலவுகளுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சுவாமி மேனியில் பூசும் சந்தனத்தைக் கொண்டு வந்து தருவதற்காக அண்ட நாட்டிலுள்ள துருமூர் என்ற ஊரின் நிலங்களில் இருந்து வரியாக வந்த நான்கு பொற்காசுகள் தானமாகத் தரப்பட்டு உள்ளன.
  • கோயிலில் திருச்சின்ன பணி (இசைக்கருவி இசைக்க) செய்ய பணியாளர்களுக்கு இரண்டு பொற்காசுகள் வழங்கப்பட்டுள்ளன என்று பிற்காலப்பாண்டியர் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
  • கோயில் மடப்பள்ளிக்கு அன்றாடம் ஆகும் செலவீனங்களுக்காக ‘அடுக்களைப்புறம்’ என்ற பெயரில் நிலங்கள் வரி நீக்கி அளிக்கப்பட்டுள்ளன. மாதேவன் அழகிய சொக்கனார் என்பவனுக்கு முடித்தலை கொண்ட பாண்டியச் சதுர்வேதி மங்கலத்தினைச் சார்ந்த மாத்தூர் நிலங்கள் அடுக்களைப்புறம் என்ற பெயரில் தானமாகத் தரப்பட்டுள்ளன.
  • அண்ட நாட்டு மருத்தவக்குடி என்ற ஊரைச் சார்ந்த திருநாட்டப் பெருமாள் என்ற பிராமணன் மடைப்பள்ளியில் அடுவானாகப் பணி செய்வதற்கு இறையிலியாக பராந்தகப் பாண்டியன் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் இருந்து சில நிலங்கள் மானியமாகத் கொடுக்கப்பட்டன.
  • இராசந்தனான முனைய தரையன் என்பவனுக்கப் பருத்திக் குடி நாட்டுக் கோடிக்காவல் நல்லூரில் அடுக்களப்புறமாக நிலங்கள் தரப்பட்டன. கோயிலில் பணி செய்த பிற பணியாளர்களுக்கும் நில கொடைகள் மானியமாக வழங்கியதைப் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் கூறுகின்றன.
  • வழிபாட்டிற்காக பூக்களை அளிப்பதற்காக நந்தவனங்கள் தோற்றுவிப்பதற்கு நிலங்கள் தரப்பட்டதையும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
Advertisement
Top
Advertisement